கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையை தூண்டியதாக வாட்சாப் குழு அட்மின்கள் உள்பட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி வன்முறை
பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட வாட்சாப் குழு அட்மின்கள் மற்றும் காவல் துறையினரை கற்களால் தாக்கியவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாய் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கு நீதி கேட்டு ஜூலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பள்ளி வண்டிகள், கட்டடம் கொளுத்தப்பட்டதோடு காவல்துறை வண்டிகளும் தீக்கிரையாயின. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், தமிழக உள்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய டிஜிபி, கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சிக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.

இந்த நிலையில், கலவரத்துக்குக் காரணமானவை என்று கூறப்படும் வாட்சாப் குழுக்களின் அட்மின்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி
படக்குறிப்பு, வன்முறை நடந்த பள்ளி வளாகத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி

இதுவரை 322 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் ஈடுபட்டது, காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தது, பள்ளிக்கூடத்தை சேதப்படுத்தியது, காவல் துறையினரை தாக்கியது, மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக வாட்ஸ்அப் குழுவை நிர்வகித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கலவரத்தைத் தூண்டும் வகையில் வாட்சாப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களைச் சேர்த்து கலவரம் உருவாகும் விதமான கருத்துக்களைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம் துருவூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி, காச்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் உள்ளிட்ட மூன்று வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதாக புது பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

காவல்துறை

இவர்களை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இந்த நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சியின் கணியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கருத்துக்களை பதிவு செய்த வாட்ஸ் அப் குழு அட்மின்கள் உள்ளிட்ட 16 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே, கலவரத்தில் ஈடுபட்டதாக 20 சிறார்கள் உள்ளிட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக சிறப்பு புலனாய்வு பிரிவு, காவல்துறை சார்பில் இதுவரை 322 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளிக் குறிப்பு, 16 வயதில் 16 புத்தகங்கள் அசத்தும் 11-ம் வகுப்பு மாணவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: