'குடியரசு தலைவர் தேர்தலிலும் பணம் விளையாடுகிறது' - யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இன்று (15/07/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)

பாஜகவின் 'ஆபரேஷன் கமல்' திட்டம் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பணம் விளையாடுவதாக யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்ஹா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட பாஜக, 'ஆபரேஷன் கமல்' திட்டத்தை அரங்கேற்றுகிறது. அதன்படி தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பாஜக அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வருகிறது.

இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முடிவை கண்டு பாஜக அஞ்சுவதாகவும் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து குடியரசு தலைவர் தேர்தலை நடத்தும் மாநிலங்களவை செயலரும், தேர்தல் ஆணையரும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் யஷ்வந்த் சின்ஹா கேட்டுக்கொண்டார்.

அரசின் இலவச மடிக்கணினிகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் நீக்கம்

தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினிகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் நீக்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சிக்கு வழங்கப்பட்டு வருவதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதுபோக 55,819 மடிக்கணினிகள் பள்ளிகளின் கையிருப்பில் உள்ளன. இதற்கிடையே, ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதலான மடிக்கணினிகள் தேவைப்படுவதால், பள்ளிகளில் கையிருப்பில் உள்ள மடிக்கணினிகளை கணினி ஆய்வகங்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுமதி வழங்கினார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் (தொழிற்கல்வி) ஜெயக்குமாரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து, அரசு அறிவுறுத்தலின்படி, மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்கிவிட்டு ஆசிரியர் பயிற்சிக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும்'

பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் அழைப்பு விடுத்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு பொதுநலவாய செயலகத்தின் அர்ப்பணிப்பையும் செயலாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அமைதியான மாற்றத்தை நோக்கி இலங்கையிலுள்ள அனைவரையும் நிதானத்துடன் செயற்படுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: