கர்நாடகாவில் போலீஸ் கூடுதல் டிஜிபியை கைது செய்த சிஐடி - என்ன நடந்தது?

கர்நாடகா காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கர்நாடக மாநிலத்தில் போலீஸ் உதவி ஆய்வாளர்கள் (பிஎஸ்ஐ) தேர்வு மோசடி தொடர்பான வழக்கில் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) அம்ரித் பாலை அந்த மாநில குற்றப்புலனாய்வுத் துறை சிஐடி திங்கள்கிழமை (ஜூலை 4) கைது செய்துள்ளது. இந்த மோசடியில் அம்ர்த் பால் நான்கு முறை விசாரணை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது கைதாகியிருக்கிறார்.

2021ஆம் ஆண்டு அக்டோபரில் 545 பணியிடங்களுக்கான போலீஸ் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடந்தது. 54 ஆயிரத்து 287 பேர் இந்த தேர்வை எழுதினர்.

இந்த நிலையில், தேர்வானவர்களில் 40 பேரின் ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன் (OMR) விடைத்தாள்களில் குளறுபடி செய்து அதிக மதிப்பெண்கள் பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

குறிப்பாக, ஒரு வாரம் கழித்து ஒரு தேர்வாளரின் விடைத்தாள் கசிந்தபோது இந்த சந்தேகம் உறுதியானது, அந்த நபர் தேர்வில் கேட்கப்பட்டிருந்த 130 கேள்விகளில் 21 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார், ஆனால் தேர்வில் அவர் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரலில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தபோது தேர்வாணையத்தின் தலைவராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அம்ரித் பாலை அரசு இடமாற்றம் செய்தது.

இந்த நிலையில், போலீஸ் ஆள் சேர்ப்பு மோசடியில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு விட்டு வைக்காது என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அராக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

எப்போது நடந்த சம்பவம்?

2021இல் நடந்த இந்த முறைகேடு சம்பவம் குறித்து நரசிம்மமூர்த்தி என்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகார் அளித்திருந்தார். முன்னதாக, இந்த ஆள் சேர்ப்பு நடவடிக்கையை அரசு ரத்து செய்ததால், அதில் தேர்ச்சி பெற்று முன்னிலையில் இருந்த ரச்சனா ஹன்மந்த், ஜக்ருத் உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், தங்கள் மீது எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தேர்வு முடிவை ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் செய்தோம் என்ற ஒரே காரணத்துக்காக எங்களையும் வழக்கில் காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்துள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த தேர்வையே ரத்து செய்யாமல் முடிவுகளின்படி ஆள் சேர்ப்பை தொடர வேண்டும் என்றும் தவறிழித்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இருவரும் கோரியிருந்தனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை கர்நாடக மாநில குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி விசாரித்தது. அதில், காவலர் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஸ்ரீகாந்த் குந்தப்பா செளரி, எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக சிலரிடம் மோசடி செய்ததாகக் கூறி அவரை கைது செய்தது.

கர்நாடகா காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

இதேபோல, தேர்வாணைய பணியில் துணை கண்காணிப்பாளராக இருந்த சாந்தகுமாரின் உதவியாளரும் காவலருமான ஸ்ரீதரிடம் இருந்து ரூ. 2 கோடிவரை சிஐடி போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆரம்பத்தில் மற்றவர்களிடம் பணம் வாங்கியதாக சந்தேகிக்கப்பட்ட ரூ. 6 லட்சத்தை மட்டுமே போலீஸார் ஸ்ரீதரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் தமது நண்பரின் வீட்டில் மீதமுள்ள பணத்தை அவர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததாக போலீஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் முதன் முதலாக கர்நாடகத்தின் கலபுராகி மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத்தொடர்ந்து மோசடியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பாஜக தலைவர், காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் பணியில் இருந்த காவலர் ஒருவர் மற்றும் போலீஸ் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சில போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் இதுவரை சுமார் 70 பேர் கைதாகியுள்ளனர். சிஐடி தாக்கல் செய்த அறிக்கையை சரிபார்த்து, மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருந்த அம்ரித் பாலும் கைதாகியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: