You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆனைமலை புலிகள் காப்பகம்: பேருந்து வசதியின்றி பள்ளி செல்ல முடியாமல் சிரமப்படும் பழங்குடி மாணவர்கள்
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் குழந்தைகள் இயல்பாக பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால், தமிழ்நாடு முழுக்க இதே நிலை இல்லை. முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் பழங்குடி மாணவர்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பழைய சர்கார்பதி என்கிற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பழங்குடி மாணவர்கள் படிப்பதற்காக இதே பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்றும் உண்டு. ஆனால், தொடக்கக்கல்வி முடித்தபிறகு கல்வியைத் தொடர வேண்டுமானால், சேத்துமடையிலும் ஆனைமலையிலும் தான் முறையே நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளிகளுக்குச் செல்ல மாணவர்கள் தினமும் 7 கி.மீ. முதல் 10 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். ஆனால், "பேருந்து வசதி இல்லை. இதனால், மாணவர்கள் இடைநிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது" என, இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் இடைநிற்றல்:
இது தொடர்பாக சேத்துமடையைச் சேர்ந்த சுரேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு சாலை வசதி போடப்பட்டுள்ளது. ஆனால், நேரடி பேருந்து வசதி இல்லை. இங்கிருந்து பள்ளி செல்லும் மாணவர்கள் சுமார் 7 - 10 கி.மீ. தூரம் பயணித்து செல்ல வேண்டியுள்ளது.
காட்டுப் பாதையில் விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால் குழந்தைகளை யாரும் அழைத்துச் செல்லவும் விரும்புவதில்லை. அதனால் மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் இடைநிற்கும் சூழல் உள்ளது. அதுபோக, பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் பொதுத் தேர்வைக்கூட எழுத முடியாமல் தவறவிட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
தனியார் போக்குவரத்து அல்லது சொந்த வாகனத்துக்கான வசதிகள் கூட இல்லையா என்ற கேள்வி எழலாம்.
தினக்கூலி பெற்றோர்கள்
"பொதுப் போக்குவரத்து இல்லையென்றால் பெற்றோர்கள் சொந்த வாகனம் ஏற்பாடு செய்துதான் அழைத்துச் செல்ல வேண்டும். இங்குள்ள அனைவருமே கூலித் தொழிலாளர்கள். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ரூ.400 வரை தான் சம்பாதிப்பார்கள். அதில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவே ரூ.100 செலவாகிவிடும் என்றால், அந்த செலவையும் சமாளிக்க முடியாது" என்கின்றனர் கிராமத்தினர்.
இந்த நிலையில், வனத்துறையினர் தனியார் உதவியுடன் மாணவர்களை அழைத்துச் செல்ல பேட்டரி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும் தொடர் பேருந்து சேவை இருந்தால்தான் மாணவர்கள் தடையில்லாமல் பள்ளிக்குச் சென்று வர முடியும்.
"பழைய சர்கார்பதி கிராமத்துக்கு தற்போது வரை பேருந்து சேவை இல்லை. மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாக கூறுகிறார்கள். அவ்வாறு நடந்தால் மாணவர்களின் கவலை தீரும்" என்றும் கூறுகிறார் சுரேஷ்.
பயன்படுத்தப்படாத நிதி:
சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளர் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கடந்த மூன்று தவணை நிதியில் சுமார் 265 கோடி ரூபாய் நிதி, செலவு செய்யாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 1,310 கோடி ரூபாய் நிதியிலிருந்து 265 கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சுமார் 139 கோடி ரூபாய் அளவுக்கு பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வனத்துறைக்கு மட்டும் இதிலிருந்து 77.7 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொள்ளாச்சி வனச்சரகர் யாராவது உதவ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.
என்ன உதவி?
இது தொடர்பாக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், "பழைய சர்கார்பதி கிராமத்து மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் இருப்பதை உணர்ந்து ரோட்டரி கிளப் உதவியுடன் பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் நான்கு வாகனங்கள் தேவைப்படுகின்றன. அதற்கும் உதவ முன்வருவோருக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்" என்று தெரிவிக்கிறார்.
"பழங்குடி கிராமங்களில் போக்குவரத்து வசதியில்லாமல் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடைநிற்பது நடக்கிறது. பேருந்து இயக்குவதை போக்குவரத்து துறை தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் வனத்துறையால் முடிகின்ற அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம். அரசுக்கும் மற்ற துறைகளுக்கும் இது தொடர்பான கோரிக்கைகளையும் அனுப்பியுள்ளோம். பழங்குடியினர் நலத்துறை உதவ முன்வந்தால் இணைந்து பணியாற்ற தயாராகவே உள்ளோம்" என்கிறார் அவர்.
பழங்குடியின கிராமங்கள் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையிலே தான் உள்ளன என்கிறார், பழங்குடிகள் உரிமை செயற்பாட்டாளர் தனராஜ். பிபிசி தமிழிடம் பேசியவர், "பழங்குடி கிராமங்கள் வனப்பகுதிக்குள் இருப்பதால் வனத்துறையின் அனுமதியோ ஒப்புதலோ இல்லாமல் எந்த பணிகளும் மேற்கொள்ள முடிவதில்லை. வருவாய் துறையோ, பழங்குடிகள் நலத்துறையோ வனத்துறையுடன் இணக்கமாக இருந்து செயல்பட்டால் தான் பழங்குடிகளின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் பெரும்பாலான பழங்குடி கிராமங்களில் நிர்வாக சிக்கல்களால் வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன. சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் முன்வந்து வேலை செய்ய வேண்டும். தமிழக அரசு பழங்குடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது. அதை தனி கவனம் செலுத்தி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட பழங்குடியினர் நல அதிகாரி ராம்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தேவைப்படுகிற நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் தான் மேற்கொள்வார்கள். பழைய சர்கார்பதி கிராமத்தில் பேட்டரி வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிற பழங்குடி கிராமங்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. பேருந்து சேவை தேவைப்படுகிறது என்றால் அது தொடர்பான ஏற்பாடுகளும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி மேற்கொள்ளப்படும்" என்றார்.
பழங்குடியினர் நலத்துறையில் செலவிடப்படாத நிதி தொடர்பாக கேள்வி எழுப்பியபோது பதிலளித்தவர், "நீங்கள் கூறுகின்ற தரவு மாநில துறைகள் அளவிலானது. மாவட்ட அளவிலான எங்களிடம் எந்த நிதியும் இல்லை.
அதுபோக, வனத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாக அந்தத்துறை வசம் ஒப்படைக்கப்படும். தேவைகளைப் பொறுத்து அவர்களே அந்த நிதியை செலவிடுவார்கள்" என்றும் தெரிவித்தார். பழைய சர்கார்பதி கிராமத்தில் தொடக்கக்கல்வி முடிக்கும் குழந்தைகளுக்கு, நடுநிலை, மேல்நிலைக்கல்வியைத் தொடர வேண்டுமானால், சாலைகளுக்கு பேருந்துகள் வரவேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்