இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அமெரிக்க கருத்தில் கோபமடைந்த சீனா - இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
லடாக் தொடர்பில் இந்தியா சீனா இடையில் நிலவும் சிக்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இரண்டு உயர் அமெரிக்க அதிகாரிகள் பேசியிருந்தனர். இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியது. அமெரிக்காவின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்வோம்.
சென்ற புதன்கிழமை, அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் கமாண்டிங் ஜெனரல் சார்லஸ் ஏ ஃப்ளைன், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக்கில் சீனாவின் செயல்பாடு குறித்துப் பேசினார்.
"ராணுவ நடவடிக்கைகளின் நிலை கண்களைத் திறப்பதாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். சீனா மேற்கு தியேட்டர் கமாண்டில் சில உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது எச்சரிக்கையை தூண்டுவதாக உள்ளது," என்று ஃபிளைன் குறிப்பிட்டார்.
மறுநாள், அவரது கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. வியாழனன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், லடாக் குறித்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் பேச்சு வெட்கக்கேடானது என்று கூறி அமெரிக்காவை விமர்சித்தார்.
இதற்குப் பிறகு, சனிக்கிழமையன்று, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டினும் சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு குறித்து கவலை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடந்த ஷாங்கிரி-லா பேச்சுவார்த்தையில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு குறித்து கவலை தெரிவித்ததோடு, இந்தியாவை ஆதரிப்பது குறித்தும் பேசினார். இந்தியாவுடனான எல்லையோரத்தில் சீனா தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. அமெரிக்கா தனது நண்பர்களுக்கு துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடமிருந்து இத்தகைய பேச்சுகள் வெளியான பிறகு, , இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான பாஜகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இதனுடன், இந்திய வெளியுறவு அமைச்சகமும் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா பிரச்சனைக்கு லடாக் ஆணிவேராக உள்ளது ஏன்?
சர்ச்சைக்குரிய நடைமுறை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே கிழக்கு லடாக்கில் சீனா ராணுவத் தடுப்பை கட்டியபோது சமீபத்திய சர்ச்சை 2020 ஏப்ரலில் தொடங்கியது.
கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ மற்றும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் போன்ற பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதின.
ஜூன் 15 அன்று மோதல் வன்முறையாக மாறியது. கல்வானில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Reuters
பின்னர் சீனா தனது நான்கு வீரர்கள் இறந்ததாக ஒப்புக்கொண்டது. சீனத் தரப்பில் ஏற்பட்ட இழப்பு இதைவிட அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
2021 பிப்ரவரியில், இரு நாடுகளும் பாங்காங் சோ வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில், கட்டம் கட்டமாக மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதற்றத்தைக் குறைப்பதாக அறிவித்தன.
கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் மற்றும் டெப்சாங் போன்ற பகுதிகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன.
நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவும் இடையே பல ஆண்டுகளாக குறைந்தது 12 இடங்களில் சர்ச்சை நிலவுகிறது.
2020 ஜூன் மாதத்திற்குப்பிறகு, இரு நாடுகளின் கோர் கமாண்டர் மட்டத்தில் 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா குறித்து சீனா என்ன சொன்னது?
அமெரிக்க ஜெனரலின் அறிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், எல்லைப் பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையிலானது என்று கூறினார்.
"தற்போது, சீனா மற்றும் இந்தியா இடையேயான எல்லை தொடர்பான சூழ்நிலை சீராக உள்ளது. சீன-இந்திய எல்லையின் மேற்கு செக்டரில் பெரும்பாலான இடங்களில் இரு நாட்டு ராணுவங்களும் துருப்புக்களை குறைக்கும் நடவடிக்கையை முடித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை."
"இரு தரப்பும் இந்த சர்ச்சையை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்க்க தயாராக உள்ளன. இதை செய்துமுடிக்கும் திறனும், இருநாடுகளுக்கும் உள்ளது. சில அமெரிக்க அதிகாரிகள் விரல்களை உயர்த்தி பதற்றத்தை ஏற்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தவும் முயற்சி செய்துள்ளனர். இது வெட்கக்கேடானது."என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்னரும் லடாக் எல்லைப் பிரச்சனையில் அமெரிக்க அரசை சீனா விமர்சித்துள்ளது. சீன அரசால் நிதியளிக்கப்பட்ட ஹேக்கர்கள், 2021 செப்டம்பர் முதல் 7 ஸ்டேட் லோட் டெஸ்பாட்ச் சென்டர்களை (எஸ்எல்டிசி) தாக்கியதாக அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியது.
இந்த செய்தியை உறுதி செய்த மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், லடாக் அருகே உள்ள மின்விநியோக மையங்களை சீன ஹேக்கர்கள் இரண்டு முறையாவது தாக்க முயன்றுள்ளனர் என்றார்.
எனினும், இந்த ஹேக்கர்கள் சீன அரசுடன் தொடர்புடையவர்கள் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
ஆனால், அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா,தனக்கு எதிராக அமெரிக்க அரசு பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டியது.
"சில காலமாக அமெரிக்க அரசும் சில சைபர் பாதுகாப்பு அமைப்புகளுகளும் திட்டமிட்ட முறையில் 'சீன ஹேக்கிங்' தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை பரப்பத் தொடங்கியதை நாங்கள் காண்கிறோம்" என்று லெஜியன் கூறினார்.
சீனா ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டது?
ஆனால், சீனா ஏன் அமெரிக்கா மீது இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது, இந்தியாவுக்கு இதனால் என்ன நன்மை என்ற கேள்வி எழுகிறது.
அடிமட்ட நிலையில் ஏற்படும் மாற்றங்களை இந்தியா கண்காணிக்க வேண்டும் என்று சீன விவகார நிபுணரும் எழுத்தாளருமான மனோஜ் கேவல்ரமானி கருதுகிறார்.
"யார் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, உண்மையில் அடிமட்ட நிலையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். 2017 முதல் நாம் பார்க்கும் தரவு, மேற்கு தியேட்டர் கமாண்டில், உள்கட்டமைப்பு மற்றும் அடித்தளத்தை உருவாக்கும் PLA இன் செயல்முறை வேகமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது,"என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கு எதிராக இப்படி ஒரு அறிக்கையை சீனா வெளியிட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த கேவல்ரமானி, "சீனாவின் எதிர்வினை எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால், அமெரிக்காவுடனான போட்டி எனும் கண்ணாடி மூலம் சீனா உலகைப் பார்க்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தரப்பில் இருந்து இதுபோன்ற கருத்து வெளியாவது சாதாரணமானதுதான்,"என்று சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
சீன விவகாரங்களில் நிபுணரான அல்கா ஆச்சார்யாவும் இந்த கருத்துடன் உடன்படுகிறார்.
"சீனாவிடமிருந்து இந்த எதிர்வினை வருவது இயற்கையானது. இந்த விவகாரத்தில் எந்த மூன்றாம் தரப்பினரும் கருத்துத்தெரிவிப்பதை சீனா விரும்பவில்லை. இப்போது 'நாங்கள் இதைச் செய்ய வேண்டும். பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது' என்பது போன்ற பேச்சுகள் இந்தியாவில் இருந்தும் வருகின்றன. இப்போது சீனா தனது பங்கிற்கு சில முயற்சிகளை எடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியாவுக்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கும்வகையில் எந்த மாதிரியான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, பிரிக்க முயல்வதாக சீனா கருதுகிறது," என்கிறார் அல்கா ஆசார்யா..
இந்தியா-சீனா சர்ச்சையில் அமெரிக்கா என்ன செய்கிறது?
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 2020 ஆம் ஆண்டு லடாக்கில் பிரச்சனை தொடங்கியது. அப்போதிருந்து, அமெரிக்க அதிகாரிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், அமெரிக்காவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் தலிப் சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், சீனா நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறினால் இந்தியாவைக் காப்பாற்ற ரஷ்யா வராது என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Reuters
இதற்குப் பிறகு, அமெரிக்காவின் கொள்கையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்தன.
கொள்கை தொடர்ச்சி விஷயம் தொடர்பாக பேசிய மனோஜ் கேவல்ரமானி, "அமெரிக்க கொள்கை விஷயத்தில், டிரம்ப் நிர்வாகத்திற்குப் பிறகு பைடன் நிர்வாகத்திலும் ஒரு வகையான தொடர்ச்சி உள்ளது. ஒரே மாற்றம் என்னவென்றால், பைடன் நிர்வாகம் தன் கூட்டாளிகளுடன் பதற்றத்தை குறைத்துள்ளது. இந்த பதற்றம் டிரம்ப் ஆட்சியின்போது ஏற்பட்டது," என்று குறிப்பிட்டார்.
"இருப்பினும், சீனா தொடர்பான அவர்களின் கொள்கை ஒரேபோல உள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முதலீடு அதிகரித்துள்ளது. ராணுவம் மற்றும் பொருளாதாரம் போன்ற கொள்கையின் பல்வேறு பகுதிகள் இப்போது இணைய தொடங்கியுள்ளன. இதில் இன்னும் நிறைய நடக்க வேண்டியிருக்கிறது."என்றார் அவர்.
எல்லைப் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவாக கூறியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும், "எங்கள் எல்லைகளைப் பாதுகாப்பது அவசியம். தற்போதைய நிலையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்பு முடிவு செய்ததற்கு மாறாக ஏதாவது நடந்தால், அதே எதிர்வினைதான் திரும்பக்கிடைக்கும்," என்று கூறினார்.
"பாதுகாப்பைப் பொருத்தவரை, நாங்கள் எங்கள் தேசிய நலன்களை மனதில் வைத்து வேலை செய்வோம். இந்தியாவை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் எங்கள் நம்பகமான நட்பு நாடுகளின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கிறோம். வரலாற்றின் தயக்கங்களிலிருந்து நாங்கள் வெளியே வந்துவிட்டோம். எங்கள் முன் இருக்கும் வழிகளை யாரும் வீட்டோ செய்ய அனுமதிக்கமாட்டோம்."என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்காவின் கொள்கையை இந்தியா எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வி எழுகிறது.
"சீனாவுடனான மோதலை நாம் தனியாகவே சமாளிக்கவேண்டும் என்று இந்தியாவில் பலர் நினைக்கிறார்கள். சீனாவை சமாளிக்க வேண்டுமானால் முழுமையாக எங்களுடன் வாருங்கள் என்று அமெரிக்கா கூறியபோது தலீப் சிங்கின் எதிர்வினை வந்தது. இந்தியா முழுவதுமாக தங்களுடன் வந்து ரஷ்யாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று அமெரிக்க தரப்பில் இருந்து பெரிய முயற்சி நடந்து வருகிறது. ஆனால் சீனாவுடனான மோதலில் அவர்கள் நம்பக்கம் நிற்பார்களா என்பது குறித்து தற்போது வரை எதுவுமே சொல்லப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் இந்தியா அமெரிக்காவுடன் நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இவை அனைத்தும் நடந்து வருகின்றன. ஆனால் இந்தியா சீனா இடையே யாருடைய தலையீடோ, உதவியோ கிடைக்கும் என்று தான் கருதவில்லை என்பது நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்றுகளில் இருந்து தெளிவாகத்தெரிகிறது,"என்று இது குறித்து அல்கா ஆச்சார்யா குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



























