பாஜக ஆதரவு யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்: சிறுவாச்சூர் கோயில் மோசடிக் குற்றச்சாட்டு வழக்கில்

பிரசுரிக்கப்பட்டது

மோசடி புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ள யூட்யூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கோவில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கடந்த மே 30ஆம் தேதி கைதுசெய்தது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஜூன் 1ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தை கார்த்திக் கோபிநாத் அணுகினார். இதில், ஜாமீன் விவகாரத்தில் விசாரணை நீதிமன்றமே முடிவுக்க வேண்டும் என்று கூறிய உயர் நீதிமன்றம், எஃப்ஐஆர் ரத்து செய்யும் வழக்கை திங்கட்கிழமையன்று விசாரிப்பதாகத் தெரிவித்தது.

இந்த நிலையில், கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மதுரகாளியம்மன் கோவிலுக்கு துணைக் கோவிலாக பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, சஞ்சீவி ஆஞ்சநேயர், நீலியம்மன், சப்த கன்னிகள் உள்பட ஏராளமான சிலைகள் இருந்தன.

கடந்த 2015ஆம் ஆண்டில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுடுமண் சிற்பங்களை உடைத்துவிட்டனர். குறிப்பாக, பெரியசாமி மலையில் உள்ள 20 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை, செங்கமல சாமி சிலை, சூரப்பிள்ளையான் சிலை என பத்துக்கும் மேற்பட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

'மாற்று மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கலாம்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், நாதன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம், பா.ஜ.க ஆதரவாளரும் 'இளையபாரதம்' என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவர், சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்க உள்ளதாக அறிவித்தார்.

இதற்காக செயலி ஒன்றின் மூலம் நிதி வசூலும் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், கார்த்திக் கோபிநாத் 36 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

பாஜக அண்ணாமலை வரவேற்பு

இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே, ' இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தனி நபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது' என அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியிருந்தார். மேலும், ' சிறுவாச்சூர் கோவில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்' எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுர காளியம்மன் கோவிலின் செயல் அலுவலர் அரவிந்தன் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்தப் புகாரில், "கார்த்திக் கோபிநாத் என்பவர் 'இளையபாரதம்' என்ற பெயரில் யூட்டியூப் வலைதளத்தில் 'Milaap fund raiser' என்ற தளம் மூலமாக கோவிலில் பழுதடைந்துள்ள சிலைகளை புனரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதியைப் பெறாமல் பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டி தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார்' என்று கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்: 4/2022 U/s 406, 420 IPC and 66 (D) OF I.T Act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.'' என்று கூறியிருந்தார். இதையடுத்து ஆவடி காவல்துறை கார்த்திக் கோபிநாத்தைக் கைது செய்தது.

தற்போது, கார்த்திக் கோபிநாத் விடுதலை செய்யப்பட்டிருப்பதை பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: