ஆரணியில் சிக்கன் சாப்பிட்டு மாணவன் இறந்ததாகப் புகார், கடையை மூட உத்தரவு: என்ன நடந்தது?

சிக்கன்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு பிளஸ்-2 மாணவன் உயிரிழந்ததாகப் புகார் வந்ததையடுத்து அந்தக் கடை இயங்குவதற்கு தற்காலிகமாக அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் மோகனன் தெருவை சேர்ந்த கணேஷ், அர்ச்சனா தம்பதியின் மகன் திருமுருகன் 12 ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24-ம் தேதி தனது 15 நண்பர்களுடன் ஆரணி, டவுன் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற ஓட்டலில் சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளான். இதை தொடர்ந்து அன்று இரவு முழுவதும் திருமுருகனுக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை வீட்டின் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் அவரது பெற்றோர் திருமுருகனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 29ம் தேதி திருமுருகன் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை எதுவும் செய்யாமல் அவர் உடலை உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்தனர்.

மாணவன் இறந்ததற்கு அவர் சாப்பிட்ட அசைவ உணவுதான் காரணம் என்று கூறிய இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ், இறந்த மாணவனின் தந்தை கணேஷை அழைத்துக்கொண்டு ஆரணி நகர காவல் நிலையம் சென்று 5 ஸ்டார் எலைட் ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவகத்துக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார்.

5 ஸ்டார் எலைட் ஓட்டல் திமுக முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஏ.அன்வர்பாஷா-வுக்கு சொந்தமானது. இந்நிலையில், 5 ஸ்டார் எலைட் உணவகத்தில் சாப்பிட்ட உணவுதான் திருமுருகன் மரணத்துக்குக் காரணம் என்று இந்து முன்னணி ஆட்களைத் திரட்டிப் போராட திட்டமிடுகிறது. அன்வர் பாஷா ஆதரவாளர்கள் அதற்கு எதிராக செயல்படுகின்றனர். இதனால், பொது அமைதி குலைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விசாரணை முடியும் வரை 5 ஸ்டார் எலைட் அசைவ உணவகம் செயல்படாதவாறு சீல் வைக்கவேண்டும் என்று காவல் துறை, ஆரணி நகராட்சிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இதையடுத்து 5 ஸ்டார் எலைட் உணவகத்தை மூட உத்தரவிட்டுள்ளார்கள் அதிகாரிகள்.

காவல்துறையும், உணவு தரக் கட்டுப்பாட்டுத் துறையினரும் விசாரணை நடத்துகிறார்கள்.

இதுவரை நடந்த விசாரணை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டுத் துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன்,

"இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட மற்ற யாருக்கும் எந்த விதமான உடல் உபாதையும் ஏற்படவில்லை. ஆனால், உணவு விஷமாகி மாணவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட உணவகம் செயல்பட தற்காலிகமாகத் தடை விதித்துள்ளோம்.

hotel

உயிரிழந்த மாணவனுடன் சேர்ந்து அந்த ஓட்டலில் சாப்பிட்ட பிற மாணவர்களிடம் விசாரணை தொடங்கி இருக்கிறோம். மாணவன் உடல்நிலை கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தான் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த பெற்றோர் சம்மதிக்கவில்லை. உடலை எரித்துவிட்டு, இரண்டு நாள் கழித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். புகார் அளித்த நாளன்று சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து இறைச்சி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். தொடர் விசாரணைக்குப் பிறகுதான் விரிவான தகவல்களை வழங்க முடியும்," என்றார்.

காவல் துறை கூறுவது என்ன?

திருமுருகனை சிகிச்சைக்காக முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தால், மாணவன் குறித்த தகவல் காவல்துறைக்கு உடனே தெரிந்திருக்கும். ஆனால், தகவல் தெரியும் முன்பாகவே மாணவன் உடலை எரித்துள்ளனர். இதனால் வருவாய்த் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் வரவில்லை" என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி.

மேலும் இது குறித்து பேசிய அவர், "மாணவன் சந்தேக மரணம் குறித்த புகார் காவல்துறைக்கு வந்த உடன் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுபோக மாணவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது.மருத்துவத்துறை சார்ந்த அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. யாரோ ஒருவர் சொன்னதால் உடலை எரித்து விடுவார்களா? மாணவன் உணவு நஞ்சாகிதான் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தெல்லாம் முறையாக உடற்கூறாய்வு செய்திருந்தால் தெளிவாகத் தெரிந்திருக்கும். இருப்பினும் இதுகுறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாணவனுடன் சேர்ந்து சாப்பிட்ட நண்பர்களிடமும் மாணவன் என்ன சாப்பிட்டான் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: