மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏன்? - தமிழ்நாடு அரசியல்

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டாலும், வேட்பாளர்களை இறுதி செய்வதில் அ.தி.மு.க, காங்கிரஸ் முகாமில் தாமதம் நீடிக்கிறது. 'அ.தி.மு.கவில் முன்னணி நிர்வாகிகள் பலரும் சீட் கேட்பதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலையே நீடிக்கிறது' என்கின்றனர் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

6 இடங்களுக்குப் போட்டி

இந்தியாவில் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. இதில், தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரது எம்.பி பதவியும் அ.தி.மு.க தரப்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைப் பொறுத்து நான்கு இடங்கள் தி.மு.கவுக்கும் 2 இடங்கள் அ.தி.மு.கவுக்கும் கிடைக்க உள்ளன. வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்புமனுத் தாக்கல் இன்று (மே 24) தொடங்கிவிட்டது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாள்களில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை அறிவித்துவிட்டது. அதன்படி, வழக்குரைஞர் கிரிராஜன், தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் வழங்கப்பட்டாலும், அக்கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க தரப்பிலோ, இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்வதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே பெரும் குழப்பம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.கவில் என்ன நடக்கிறது?

எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்படும் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, ஐ.எஸ்.இன்பதுரை, ராஜ் சத்யன் உள்ளிட்டோரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் எம்.பி மதுரை கோபாலகிருஷ்ணன், பரமக்குடி நகராட்சி முன்னாள் சேர்மன் கீர்த்திகா முனியசாமி, தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான் ஆகியோரது பெயர்கள் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அண்மையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ' உங்கள் தரப்பில் யார் என்ற பெயரைச் சொல்லுங்க?' என ஓ.பி.எஸ்ஸிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரும், விரைவில் தெரிவிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ராஜ்யசபா இடங்களைப் பொறுத்தவரையில், ' வடக்கே வன்னியர், தெற்கே முக்குலத்தோர்' என இரு இடங்களையும் சாதி ரீதியாக கொடுப்பதற்கு அ.தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'ஜெயலலிதா இறந்த பிறகு நடந்த முதல் ராஜ்யசபா தேர்தலில் வடக்கில் வேலூர் முகமது ஜானுக்கும் மேற்கில் மேட்டூர் சந்திரசேகருக்கும் சீட் கொடுக்கப்பட்டது. அடுத்து வந்த ராஜ்யசபா தேர்தலில் கே.பி.முனுசாமிக்கும் தம்பிதுரைக்கும் சீட் கொடுக்கப்பட்டது. இதனால் தெற்கு மண்டலம் முழுதாகப் புறக்கணிக்கப்பட்டது.

இந்தமுறையும் குறிப்பிட்ட இரு சமுதாயத்துக்கு என சீட் ஒதுக்கினால் இதர சமூகத்தினரின் வாக்குகளை அ.தி.மு.க இழக்க நேரிடும். குறிப்பிட்ட சாதிக்கான கட்சியாகவும் அ.தி.மு.க சுருங்கிவிடக் கூடாது. தவிர, சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை அ.தி.மு.க இழந்து வரும் சூழலில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே, தெற்கு மற்றும் டெல்டாவில் உள்ள பிற சமுதாயத்தினருக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும்' என்ற குரல்களும் அ.தி.மு.கவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அதேநேரம், 'அ.தி.மு.கவில் உள்ள சீனியர்களில் யாருக்காவது ராஜ்யசபா சீட் கொடுத்தால், அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது' என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. காரணம், 'கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுதான்' என்கின்றனர். 'இதையெல்லாம் மனதில் வைத்து அ.தி.மு.க தலைமை முடிவெடுக்கலாம்' எனவும் கூறப்படுகிறது.

தாமதம் ஏன்?

''வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏன் தாமதம்?'' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். ''வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டாலும் வாபஸ் பெறுவதற்கு வரும் 3ஆம் தேதி வரையில் அவகாசம் உள்ளது. இன்னும் ஒன்பது நாள்கள் இருப்பதால் சரியான நபரைத் தேர்வு செய்து தலைமை அறிவிக்கும். தற்போது ராஜ்யசபா வேட்பாளர்களுக்கான தேடுதலில் தலைமை ஈடுபட்டுள்ளது'' என்கிறார்.

தொடர்ந்து, கட்சிக்குள் நிலவும் சாதிரீதியான அணுகுமுறை குறித்து விளக்கமளித்தவர், '' சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக அ.தி.மு.க உள்ளது. குறிப்பாக, என்னுடைய சமூகம் எது என்பதுகூட இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருக்குத் தெரியாது. ஆனால் எனக்குரிய முக்கியத்துவத்தை அவர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த சாதிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. இருவருமே சேர்ந்து சிறப்பான முடிவை எடுக்க உள்ளனர். அவர்கள் இருவருக்குள்ளும் எந்தவித போட்டியோ, தேடுதலில் சிரமங்களோ இல்லை. இன்னும் ஓரிரு நாள்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும்'' என்கிறார்.

''அ.தி.மு.கவில் வன்னியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர், முக்குலத்தோர் ஆகிய சமூகங்களுக்கு தனித்தனியாக கட்சிகள் இருந்தாலும் அங்கு யாரும் செல்லவில்லை. அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக அ.தி.மு.க இருப்பதால் இங்கு இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் நாடாளுமன்றத்தில் வலுவான பிரதிநிதி தேவை எனத் தலைமை கருதுகிறது. அதனால்தான் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறதே தவிர, கட்சிக்குள் எந்தவித சிக்கல்களோ குழப்பங்களோ இல்லை'' என்கிறார் பாபு முருகவேல்.

காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது?

இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓர் இடத்துக்கான வேட்பாளரை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தமுறை, ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி உள்பட சீனியர்கள் பலரும் ராஜ்யசபா சீட் கேட்டுள்ளனர். 'இதில் யாராவது ஒருவருக்கு சீட் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது' எனவும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

''ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுதான் (மே 24) தொடங்கியுள்ளது. தேசியக் கட்சியாக இருப்பதால் அனைத்து மாநிலங்களில் உள்ள சூழல்களைக் கவனித்து தேர்வு செய்வதால் தாமதம் ஏற்படத்தான் செய்யும். மாநில கட்சிகளைப் போல நாங்கள் முடிவெடுக்க முடியாது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அறிவிப்பு வெளியாகிவிடும்'' என்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவரும் ஊடகப் பிரிவின் தலைவருமான ஆ.கோபண்ணா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :