You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ்நாட்டின் மு.க. ஸ்டாலின் இந்தியாவிலேயே அதிக ஆதரவு பெற்ற முதல்வர்' - ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு
ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் தென்மாநிலங்களில் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக, ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது. அதேநேரம், 'ஐந்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை' என மக்கள் கூறியதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலேயே எந்த முதல்வரின் செயல்பாட்டுக்கு அதிக மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்ற தகவலையும் இந்த சர்வே முடிவுகள் கூறியுள்ளன. அதை இந்த செய்தியின் கடைசியில் பார்ப்போம்.
முதலமைச்சர்களின் செல்வாக்கு
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவுற்று ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் இம்மாநிலங்களில் பதவி வகிக்கும் முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் சார்பாக சி வோட்டர் நிறுவனம், அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டில் 30 சதவீதம் பேர் முழு திருப்தியையும் 51 சதவீதம் பேர் சிலவற்றில் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என, 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக, மாநில முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் செயல்பாடு குறித்து 41 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 44 சதவீதம் பேர் ஓரளவு மட்டுமே திருப்தியடைந்துள்ளதாகவும் 13 சதவீதம் பேர் முதலமைச்சராக ஸ்டாலினின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அசாம் முதலமைச்சரான ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 43 சதவீதத்துக்கும் அதிகமானோரும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடு திருப்தியளிப்பதாக 41 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜியின் செயல்பாடு மிகவும் திருப்தியளிப்பதாக 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ராகுல்காந்தியின் செல்வாக்கு?
அடுத்ததாக, தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோதிக்கு அதிக வரவேற்பு கிடைக்காததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, பதில் அளித்தவர்களில் 40 சதவீதம் பேர் பிரதமரின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். 17 சதவீதம் பேர் முழு திருப்தியில் உள்ளதாகவும் 40 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர். அதேநேரம், ராகுல் காந்திக்கு தமிழ்நாடு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளதாகவும் சி வோட்டர் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தம் என்ற கேள்விக்கு ராகுல் காந்திக்கு ஆதரவாக 54 சதவீதம் பேரும், நரேந்திர மோதிக்கு ஆதரவாக 32 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதே கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் சி வோட்டர் கேட்டுள்ளது. அதில், எம்.பியின் செயல்பாட்டில் திருப்தியில்லை என 34 சதவீதம் பேரும், முழு திருப்தி அளிப்பதாக 19 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அதே போல், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு தொடர்பான சர்வே முடிவில், எம்.எல்.ஏக்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என 31 சதவீதம் பேரும் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக 25 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு எப்படி?
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் ஐந்து மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் பணிகள் குறித்து மக்கள் கூறிய கருத்தும் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டில் ஐந்து மாநில எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது செயல்பாட்டின் மூலம் மக்களை ஈர்ப்பதில் தோல்வியடைந்துவிட்டதாக சி வோட்டர் தெரிவித்துள்ளது. அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்ற பிறகு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக சர்வே கூறுகிறது. இம்மாநில எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாட்டில் 36.35 மக்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் முழு திருப்தியையும் 19 சதவீதம் பேர் ஓரளவு திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி செயல்பாட்டில் 42.55 சதவீதம் பேர் திருப்தியடையவில்லை. 16.37 சதவீதம் பேர் மட்டுமே முழு திருப்தியடைந்துள்ளதாக சர்வே கூறுகிறது. அதேபோல், கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீஸனின் செயல்பாட்டில் 20.93 சதவீதம் பேர் முழு திருப்தியுடன் உள்ளதாகவும் 23.53 சதவீதம் திருப்தியடையவில்லை எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். 39.12 சதவீதம் சிலவற்றில் திருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டில் 35.28 சதவீதம் பேர் அதிருப்தியில் உள்ளதாகவும் 41.71 சதவீதம் பேர் சிலவற்றில் திருப்தியடைவதாகவும் 10.67 சதவீதம் பேர் அவர் வலுவான தலைவராக இருப்பதாகவும், அவரது செயல்பாடுகள் திருப்தியளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடர்பான கேள்விக்கு 57.27 சதவீதம் பேர், 'தெரியாது, பதில் அளிக்க முடியாது' என்ற தொனியிலேயே பேசியுள்ளனர். 17.59 சதவீதம் பேர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாட்டில் திருப்தியடையவில்லை எனவும் 16 சதவீதம் பேர் சிலவற்றில் திருப்தியடைவதாகவும் கூறியுள்ளனர்.
எந்த முதல்வருக்கு ஆதரவு அதிகம்? யாருக்கு ஆதரவு குறைவு?
முடிவில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 81 சதவீத மக்கள் திருப்தியுடன் உள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 77.7 சதவீத ஆதரவுடன் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளதாகவும் மூன்றாம் இடத்தில் 72 சதவீத ஆதரவுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி 61 சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கணக்கெடுப்பின் மூலம் வேறு சில தகவல்களும் வெளிவந்துள்ளன. அது விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை ஆகியவை. இதுதொடர்பாக வெளியாகியுள்ள சி வோட்டர் கணிப்பில், விலைவாசி உயர்வை தங்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்னையாக உள்ளதாக 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலையில்லாமல் இருப்பது கவலையளிப்பதாக 12 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர, தென்மாநிலங்களில் வசிக்கும் மக்களில் பலரும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஓராண்டில் வாழ்க்கைத்தரம் மேம்படலாம் என 45 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஆனால், நிலைமை மோசமடையும் என 13 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர் என சி வோட்டர் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்