காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் லட்சக் கணக்கில் தேக்கம்: கலங்கும் நெசவாளர்கள்

லட்சக்கணக்கில் பட்டு புடவைகள் தேக்கம்
படக்குறிப்பு, லட்சக்கணக்கில் பட்டு புடவைகள் தேக்கம்
    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

பட்டுப் புடவைகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பட்டுப் புடவைகள் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனையில் சரிவு ஏற்பட்டு கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு நலிந்த கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் மூடுவிழா காணும் அபாயத்தில் உள்ளன.

பட்டுப் புடவைகள் விற்பனையை நம்பித்தான் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. பட்டுப் புடவைகள் விற்பனை பாதிக்கப்பட்டால் வியாபாரிகள் மட்டும் பாதிக்கப்பட மாட்டார்கள். புடவைகள் விற்பனை ஆகவில்லையென்றால் புதிய புடவைகளை நெய்வதற்கு நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காது. இதனால் நெசவாளர்கள் கடுமையாக வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நெசவுத் தொழிலைக் கைவிடும் நெசவாளர்கள்

பெரும்பாலான நெசவுத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலை விட்டு கூலி தொழிலுக்கும் கட்டட தொழிலுக்கும் தொழிற்சாலைகளில் ஒப்பந்த பணியாளர்களாகவும் வேறு தொழில்களுக்குச் சென்று விட்டார்கள். தற்போது நெசவுத் தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கச்சா பட்டின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு கிலோ பட்டு நூல் ரூபாய் 3,208க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அதே ஒரு கிலோ பட்டு நூல் ரூபாய் 6,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 240 கிராம் ஜரிகை கடந்த 2015 ஆம் ஆண்டு 9,586 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அதே 240 கிராம் ஜரிகை 17,338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக பட்டுப் புடவை விலை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைந்து விட்டது. இதனால் சேலைகள் மற்றும் பட்டுத்துணிகள் அதிகளவில் தேக்கம் அடைந்து விட்டது.

லட்சக்கணக்கில் பட்டுப் புடவைகள் தேக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் தற்போது தேக்கமடைந்து, கிழிந்து போய் இருப்பதாக அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் கூறுகிறார். மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஜொலிஜொலிக்கும் காஞ்சி பட்டு நிறம் மங்கிப் போய் பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் ஒரே இடத்தில் மடித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 60 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பட்டுப் புடவைகளை 65 சதவீத தள்ளுபடியில் தற்போது விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் பட்டுப் புடவைகள் விற்பனை பாதிக்கப்படுவதுடன், நெசவாளர்களுக்கான வேலைவாய்ப்புகளும் குறையத் தொடங்குகின்றன."

இறக்குமதி வரி சலுகை வேண்டும்

"ஏற்கெனவே வறுமையில் வாடும் நெசவாளர்கள் பட்டுப் புடவை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் இந்த திடீர் விலை உயர்வால் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பட்டு நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருள்களுக்கு, தேவைக்கு ஏற்ப வரி நீக்கம் செய்ய வேண்டும், நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜரிகைக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

காஞ்சிபுரத்தில் தற்போது ஆறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் மட்டுமேதான் நல்ல நிலையில் இயங்குகின்றன
படக்குறிப்பு, காஞ்சிபுரத்தில் தற்போது ஆறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் மட்டுமேதான் நல்ல நிலையில் இயங்குகின்றன

கூட்டுறவு சங்கங்களில் மூடுவிழா

"நலிந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடன் தொகையில், 50 சதவீதத்தை வங்கிகள் பிடித்தம் செய்வதால் பட்டுத் தொழில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்படுவதோடு 17 நலிந்த கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது," என்கிறார் மாமல்லன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் எஸ்.வி.சங்கர்.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "காஞ்சிபுரத்தில் தற்போது ஆறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் மட்டும் தான் நல்ல நிலையில் இயங்குகின்றன. 17 சங்கங்கள் நலிவடைந்து நெசவாளர்களுக்கு தொழில் கொடுக்க முடியாத நிலையில் நிதியில்லாமல் தள்ளாடுகின்றன. இதனால் நலிவடைந்த சங்கங்களில் புடவை உற்பத்தி அதிவேகமாகக் குறைந்து வருகிறது. ஏற்கெனவே பட்டுப் புடவைக்கான மூலப்பொருட்கள் விலை வானளவு உயர்ந்து செல்கிறது.

இந்த நிலையில் அரசு வழங்கும் மானிய வட்டி கடன், இதற்கு முன் 25 சதவீதம் பிடித்தம் போக, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு, 75 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் சங்கங்களுக்குக் கிடைக்கும் சொற்ப லாபத்தில் இருந்து நெசவு செய்து கொடுத்ததை நெசவாளர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த கூலியாகவும் சங்கத்தின் ஊழியர்களுக்கு ஊதியமாகவும் வழங்கப்பட்டது.

தற்போது எந்த உத்தரவும் இல்லாமல் சங்கங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு திடீரென 50 சதவீதம் பிடித்தம் செய்கின்றனர். எதிர்காலத்தில், 100 சதவீத வட்டி மானிய கடன் பிடித்தம் செய்யப்படும் என, மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்தால், சிறு சங்கங்கள் அனைத்தும் மூடப்படும். பட்டுப் புடவை உற்பத்தி குறையும். போலி பட்டு சேலை தான் கடைகளில் விற்பனை செய்யப்படும். இந்த மாதிரி நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க, ஏற்கெனவே இருந்த நிலைப்பாட்டின்படி, வட்டி 25 சதவீதம் மட்டும் பிடித்தம் செய்து, மீதித் தொகையை சங்கங்களுக்கு வழங்க வேண்டும்," என்றார்.

நெசவாளர்கள் உரிய கூலி உயர்வு கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்
படக்குறிப்பு, நெசவாளர்கள் உரிய கூலி உயர்வு கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் கூலி உயர்வு என்பது பெரிதாக இல்லை

கூலி உயர்வு இல்லை

"போதிய வேலையும் இல்லை உரிய கூலியும் இல்லை. கூலி உயர்வு கேட்டுப் போராடியும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் நெசவுத் தொழிலை விட்டு வெளியேறினோம்," என்கிறார் குமார். இவர் நெசவுத் தொழிலைக் கைவிட்டு, தனியார் கடைகளில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

அவர் பிபிசி தமிழிடம், "பட்டுக் கூட்டுறவு சங்கங்களில், 20 நாட்களில் மூன்று புடவைகள் செய்து கொண்டிருந்த வேளையில் பட்டுப் புடவையின் தேக்கம் காரணமாக 45 நாட்களுக்கு 3 புடவைகள் நெய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம் . இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் இருந்து முறையாக வேலை கிடைக்காத காரணத்தினால் குறைந்த கூலிக்கு தனியாரிடம் பாவு பெற்று, நெசவு செய்யும் நிலைக்கு நெசவாளர்கள் சென்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் முதலாளிகள் உரிய கூலிக்குப் பதிலாகக் குறைந்த கூலியைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதனால் நெசவாளர்கள் உரிய கூலி உயர்வு கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் கூலி உயர்வு என்பது பெரிதாக இல்லை. இதனால் பாரம்பரிய நெசவுத் தொழிலை கைவிட்டுவிட்டு வேறு வழியின்றி நெசவாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றனர்," என்று கூறினார்.

காஞ்சி பட்டு என 1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் போலி பட்டு சேலை விற்பனை செய்யப்படுகிறது என்கிறார் நெசவாளர் ஞானபிரகாசம்
படக்குறிப்பு, காஞ்சி பட்டு என 1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் போலி பட்டு சேலை விற்பனை செய்யப்படுகிறது என்கிறார் நெசவாளர் ஞானபிரகாசம்

போலி பட்டு அதிகரிப்பு

காஞ்சி பட்டு என 1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் போலி பட்டுப் புடவை விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறார் நெசவாளர் ஞானபிரகாசம். மேலும், "அசல் காஞ்சி பட்டை ரூ.25,000-க்கு குறைவாக விற்பனை செய்யவே முடியாது. இங்கு பல்வேறு இடங்களில் ரூ.1000 மற்றும் ரூ.2000-க்கு பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், போன்ற பகுதிகளில் இருந்து போலி ஜரிகை சேலைகளைத் தயாரித்து, அதை காஞ்சிபுரத்தில் விற்பனைக்கு அனுப்புகின்றனர். எனவே, ஆங்காங்கே பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும்," என்கிறார்.

"பட்டு நூல் விலை பாதி குறைந்தாலே நெசவாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாகச் செழுமையடையும். இதற்கு மத்திய அரசு கருணை காட்ட வேண்டும்," என்கிறார் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்.

அவர், "நெசவுக்குத் தேவையான மூலப் பொருட்களான ஜரிகையை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதைவிட தமிழ்நாடு ஜரிகை தொழிற்சாலையில் இருந்து கொள்முதல் செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும். அதேநேரத்தில் ஜரிகையின் தரத்தை உயர்த்த ஜரிகை தொழிற்சாலைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியில் நெசவாளர்களின் சங்கங்கள் வாங்கிய கடன் தொகைக்காக பிடித்தம் செய்யப்படும் சதவீதத்தைக் குறைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, மக்கள் மெல்ல தற்போது தான் வெளி வரத் தொடங்கியுள்ளார்கள். இதன்பிறகு பட்டுப் புடவைகள் விற்பனை கணிசமாக உயரும். நூல் விலையை பாதி குறைத்தால் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். எனவே ஒன்றிய அரசு நூல் விலையைக் குறைக்க கருணை காட்ட வேண்டும்," என்றார் செல்வம்.

காணொளிக் குறிப்பு, உங்களுக்கு கழிவுப்பொருள் இவருக்கு கலைப்பொருள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: