உலகக்கோப்பை கால்பந்து 1994: கொலம்பிய அணி கேப்டன் சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்த 'சுய கோல்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஃபிஃபா 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடங்கிவிட்டது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என முதல் முறையாக மூன்று நாடுகள் இணைந்து இந்தத் தொடரை நடத்துகின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செய்திகளில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டது. இரான் வீரர்கள் பயிற்சி செய்வதற்கு எழுந்த சிக்கல்கள், சோமாலியா நடுவருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாமுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு எனப் பல சர்ச்சைகள் அமெரிக்காவையும், இந்த உலகக் கோப்பையையும் சுற்றி எழுந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், அமெரிக்கா, ஃபிஃபா உலகக் கோப்பை என்ற சொற்கள் ஒரே வரியில் இடம்பெறும்போது, 'ஆந்த்ரேஸ் எஸ்கோபார்' என்ற பெயரும் கால்பந்து அரங்கில் கூடவே ஒலித்துக் கொண்டிருக்கும்.
ஏனெனில், கடைசியாக 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஃபிஃபா உலகக் கோப்பை ஆடப்பட்டபோது நடந்த ஒரு நிகழ்வு, கொலம்பிய அணியின் கேப்டனாக இருந்த ஆந்த்ரேஸ் எஸ்கோபாரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. அவர் அடித்த ஒரு 'சுய கோல்', அந்த மோசமான சம்பவத்துக்கு வித்திட்டது.
கொலம்பியா மீதான எதிர்பார்ப்பு
கடந்த 1994 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடந்தது. கால்பந்தை அங்கு பிரபலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அந்தத் தொடர் கருதப்பட்டது. போட்டியை நடத்தும் அமெரிக்காவுடன் ஏ பிரிவில் இடம்பிடித்தது கொலம்பியா. ருமேனியா, ஸ்விட்சர்லாந்து அணிகளும் அந்தப் பிரிவில் இடம்பிடித்திருந்தன.
கொலம்பியாவுக்கு அதுதான் 3வது ஃபிஃபா உலகக் கோப்பை. அதற்கு முன் 1962 உலகக் கோப்பையில் குரூப் சுற்றோடு வெளியேறியிருந்த கொலம்பியா, 1990 உலகக் கோப்பையில் 'ரவுண்ட் ஆஃப் 16' வரை முன்னேறியிருந்தது. அமெரிக்காவில் அந்த அணி அதைவிடச் சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்கும் என்று பலரும் நம்பியிருந்தார்கள்.
இந்தத் தொடரில் கொலம்பியாவின் மீது வழக்கத்தைவிட அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஏனெனில், மிகச் சிறந்த ஃபார்மில் உலகக் கோப்பைக்குள் நுழைந்தது அந்த அணி. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில்கூட கொலம்பியா தோற்றிருக்கவில்லை.
அதில், அர்ஜென்டினாவை இரண்டு முறை வீழ்த்தியது. அந்த 6 போட்டிகளில் அவர்களுக்கு எதிராக இரண்டே கோல்கள்தான் அடிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்ல, தி கார்டியன் தரவுப்படி அந்த உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாடிய 26 போட்டிகளில் கொலம்பியா ஒன்றில் மட்டுமே தோற்றிருந்தது. அதனால், அந்த அணி சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
கொலம்பியாவின் தகுதிச் சுற்று செயல்பாட்டைப் பார்த்த கால்பந்து ஜாம்பவான் பீலே, அந்த அணி 1994 உலகக் கோப்பை வெல்லக்கூடிய அணி என்று கூறினார். அப்போது ஃபிஃபா உலகத் தரவரிசையில் 17வது இடத்தில் இருந்த கொலம்பியா சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும் என்றார் பீலே.

பட மூலாதாரம், Getty Images
இப்படியான எதிர்பார்ப்போடு களமிறங்கிய கொலம்பிய அணியின் கேப்டன்தான் ஆந்த்ரேஸ் எஸ்கோபார்.
கொலம்பிய அணியை அமெரிக்காவில் உலகக் கோப்பையில் வழிநடத்தியபோது ஆந்த்ரேஸ் எஸ்கோபாரின் வயது 27. 1967ஆம் ஆண்டு மெடெயின் நகரில் பிறந்த அவர், 1986 முதல் தொழில்முறை கால்பந்து விளையாடத் தொடங்கினார். சுமார் 6 அடி உயரம் கொண்ட ஆந்த்ரேஸ் எஸ்கோபார், ஒரு திறமையான டிஃபண்டர். 'சென்டர் பேக்' பொசிஷனில் விளையாடியவர். 1988ஆம் ஆண்டு அவர் கொலம்பியா அணிக்காக அறிமுகமானார். 1990 உலகக் கோப்பைக்கான கொலம்பிய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
எதிர்பார்ப்புகள் ஏற்பட இன்னொரு முக்கிய காரணம்
கொலம்பிய கால்பந்து அணி மீதான எதிர்பாப்புகளுக்குப் பல காரணங்கள் இருந்தன. அந்த அணியின் ஆட்டமுறை ஒரு காரணம் என்றால், கொலம்பியாவில் தலைவிரித்தாடிய மாஃபியா கலாசாரம் இன்னொரு காரணம்.
எஸ்கோபார் என்ற பெயருக்கும் இந்தக் கதைக்கும் நிறைய பிணைப்பு இருக்கிறது. ஆந்த்ரேஸ் எஸ்கோபார் பிறந்த அதே மெடெயின் நகரில்தான் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாரும் பிறந்தார்.
கொலம்பியாவின் நிழல் உலகத்தை ஆண்டு வந்த பாப்லோ எஸ்கோபார்கூட ஒரு கால்பந்து பிரியர்தான். மக்களுக்காகப் பல கால்பந்து ஆடுகளங்களை அவர் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதேநேரம், பணமோசடி செய்வதற்காக பாப்லோ எஸ்கோபார் போன்றவர்கள் கால்பந்து கிளப்களை பயன்படுத்திக் கொண்டனர்.
புகழ்பெற்ற கொலம்பிய கிளப்பான அத்லெடிகோ நேசியோனால் அணியில் வெகுவாக முதலீடு செய்திருக்கிறார் பாப்லோ எஸ்கோபார். இந்த அணியில் ஆந்த்ரேஸ் எஸ்கோபார் விளையாடி வந்தார்.
பாப்லோ எஸ்கோபார் மட்டுமல்ல பல மாஃபியா கும்பல்கள் கால்பந்து கிளப்களில் முதலீடு செய்திருந்தன. அதன் காரணமாக, கால்பந்து சூதாட்டம் கொலம்பியாவில் வேரூன்றியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பாப்லோ எஸ்கோபார் கொல்லப்பட்ட பிறகும்கூட கொலம்பியாவில் நிலவிய போதைப்பொருள் கலாசாரமோ, வன்முறையோ, கால்பந்து சூதாட்டத்தின் மீதான மோகமோ குறைந்திருக்கவில்லை.
சிறப்பாக விளையாடி வந்த கொலம்பியா அணி மீது பெரும் முதலீடு செய்யப்பட்ட காரணத்தாலும், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அதேநேரம், போதைப்பொருள், குண்டுவெடிப்பு, ரத்தம் என உலகின் கண்களுக்கு வன்முறை நிறைந்த நாடாகவே பார்க்கப்பட்டு வந்த கொலம்பியாவின் முகத்தை இந்தக் கால்பந்து வீரர்களின் செயல்பாடு மாற்றும் என்றும் இன்னொரு சாரார் எதிர்பார்த்தார்கள்.
எஸ்கோபார் 'சுய கோல்' & கொலம்பியாவின் வெளியேற்றம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய கொலம்பியாவின் தொடர் அவ்வளவு சிறப்பாகத் தொடங்கவில்லை. ஜூன் 18, 1994 அன்று அவர்களைவிட சற்றே பலமான ருமேனியோ அணிக்கு எதிரான தங்கள் முதல் போட்டியில் 1-3 எனத் தோல்வியடைந்தது கொலம்பியா.
ஜூன் 22இல் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது கொலம்பியா. பாசடீனா ரோஸ் பவுல் மைதானத்தில் தன் அணியை வழிநடத்திய ஆந்த்ரே எஸ்கோபாருக்கு அதுவொரு மைல்கல் ஆட்டம். கொலம்பிய அணிக்காக அவர் ஆடிய 50வது ஆட்டம் அது.
தங்களின் முந்தைய போட்டியில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது அமெரிக்க அணி. எப்படியும் கொலம்பியா வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், போட்டி மிகவும் பரபரப்பாகச் சென்றது. இரு அணிகளும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டே இருந்தன.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில்தான் அந்த நிகழ்வு அரங்கேறியது. இடது விங்கில் பந்தைப் பெற்ற அமெரிக்க நடுகள வீரர் ஜான் ஹார்கெஸ், பந்தை கொலம்பியாவின் பாக்சுக்குள் கிராஸ் செய்தார். பந்து பெனால்டி ஏரியாவை நோக்கிச் சென்றது. அப்போது அமெரிக்க வீரர் ஒருவர் பந்தை நோக்கி பாக்சுக்குள் வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பந்து அவரை அடைந்துவிடாமல் தடுப்பதற்காக பாக்சுக்கு வெளியே இருந்து உள்ளே வந்த எஸ்கோபார், தனது வலது காலை நீட்டி பந்தைத் தடுக்க முற்பட்டார். அவர் காலில் பட்ட பந்தோ நேராக கோல் போஸ்ட்டை நோக்கிச் சென்றது. அந்த கிராஸை கவனித்து தன் இடது பக்கம் நகர்ந்திருந்த கோல் கீப்பரால் பந்தைத் தடுக்க முடியாமல் போக, அது கோலானது. அமெரிக்கா முன்னிலை பெற்றது.
அந்தப் போட்டியின் 52வது நிமிடத்தில் அமெரிக்க அணிக்கு இரண்டாவது கோலை அடித்தார் எர்னஸ்ட் ஸ்டீவர்ட். 90வது நிமிடத்தில் கொலம்பியாவின் வெலன்சியா கோலடிக்க, 2-1 என வெற்றி பெற்றது அமெரிக்கா.
ஸ்விட்சர்லாந்து அணி ருமேனியாவை வென்றுவிட, ருமேனியோ அமெரிக்காவை வென்றுவிட, கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்விட்சர்லாந்துக்கு எதிராகப் பெற்ற 2-0 வெற்றி கொலம்பியா அடுத்த சுற்றுக்கு முன்னேறப் போதுமானதாக இல்லை. 3 புள்ளிகள் மட்டுமே பெற்ற அந்த அணி, தங்கள் பிரிவில் கடைசி இடம்பிடித்து வெளியேறியது.
இந்த உலகக் கோப்பை தோல்வி கொலம்பிய அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. குறிப்பாக கேப்டன் ஆந்த்ரே எஸ்கோபாருக்கு. அந்தத் தோல்விக்குப் பிறகு அவர் மெடெயின் திரும்பிவிட்டார்.
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஆந்த்ரே எஸ்கோபார் ரசிகர்களுக்கு எழுதிய திறந்த மடலில், "என் வாழ்க்கையின் மிகவும் கவலை மிக்க தருணம் இது. என்னால் உறங்க முடியவில்லை. மிக முக்கியமான தருணத்தில் தோற்றிருக்கிறோம். அதுவும் அமெரிக்காவுக்கு எதிராக நான் அடித்த கோலின் மூலம் ஏற்பட்டிருப்பது என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. என் கால்பந்து வாழ்க்கையில் எப்போதுமே ஏற்பட்டிராத இப்படியொரு நிகழ்வு, கொலம்பிய கால்பந்தின் மிக முக்கிய தருணத்தில் நடந்துவிட்டது" என்று கூறியதாக அவரது நண்பரும் பத்திரிகையாளருமான லூயிஸ் ஃபெர்னாண்டோ ரெஸ்ட்ரெபோ பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
எஸ்கோபார் மீது பாய்ந்த தோட்டாக்கள்
ஜூலை 1, 1994 அன்று மெடெயின் நகரிலுள்ள ஒரு மதுபான விடுதியில் ஆந்த்ரே எஸ்கோபாரை சந்தித்திருக்கிறார் லூயிஸ் ஃபெர்னாண்டோ ரெஸ்ட்ரெபோ.
அதுபற்றி பிபிசியிடம் பேசிய அவர், "நான் எனது நண்பர்களுடன் அந்த மதுபான விடுதிக்குச் சென்றிருந்தேன். ஆந்த்ரே எஸ்கோபார் ஒரு சில நண்பர்களுடன் அங்கு வந்திருந்தார். இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டோம். அவர் நடனமாடினார். நன்கு சிரித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த அனைவருமே பானங்களை பகிர்ந்து கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தார்கள். எல்லாம் சகஜமாகவே இருந்தது" என்று கூறினார்.
ஆனால், அடுத்த சில மணிநேரத்தில் அந்த சகஜ நிலை மாறியது. ஜூலை 2, 1994 அதிகாலை கொலம்பிய கால்பந்து அணியின் கேப்டன் ஆந்த்ரே எஸ்கோபார் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு மதுபான விடுதியின் பார்க்கிங் பகுதியில் சுடப்பட்ட, 27 வயதேயான அவர் இறந்தார்.
இந்த நிகழ்வு பற்றி பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட லூயிஸ் ஃபெர்னாண்டோ ரெஸ்ட்ரெபோ, "நான் கேட்ட வரையிலும், ஆந்த்ரேஸ் பாரில் இருந்து வெளியேறிய போது சம்பந்தப்பட்ட நபர்கள் அங்கே ஹாட் டாக் சாப்பிட்டுக் கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆந்த்ரேஸ் அடித்த சுய கோல் பற்றி கிண்டலடித்து பேசியிருக்கிறார்கள். அப்படிச் செய்ய வேண்டாம் என்று ஆந்த்ரேஸ் அவர்களிடம் பணிவாகக் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் நிறுத்தாமல் கிண்டலடித்திருக்கிறார்கள். ஆந்த்ரேஸ்தான் கொலம்பிய அணி வெளியேறிய அவமானத்துக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்கள்.
தன்னுடைய காரை எடுத்த ஆந்த்ரேஸ் அவர்களைக் கடந்து செல்லும்போதும் அவர்கள் தொடர்ந்து கிண்டலடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனால், காரில் இருந்து இறங்கிய ஆந்த்ரேஸ் அவர்களை நிறுத்தும்படி கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் நிறுத்தவில்லை. தொடர்ந்து வாக்குவாதம் வளர்ந்துகொண்டே இருந்திருக்கிறது. அந்தச் சூழ்நிலையில், காரில் உறங்கிக் கொண்டிருந்த அந்த இருவரின் பாதுகாவலர்களுள் ஒருவர், தன் முதலாளிகள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே துப்பாக்கியை எடுத்து வந்து அவர் ஆந்த்ரேஸை சுட்டிருக்கிறார்" என்று கூறினார்.
துப்பாக்கியால் சுட்டு ஆந்த்ரேஸ் எஸ்கோபாரை கொன்ற அம்பர்டோ முன்யோஸ் என்ற அந்தப் பாதுகாவலருக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், அவர் 12 ஆண்டுகளுக்கும் குறைவாகவே சிறையில் இருந்தார். அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் வைத்திருந்த பெரும் மாஃபியா குடும்பத் தலைவர்கள் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் கொலம்பியாவின் வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகவே விளங்கி வருகிறது. ஒரு விளையாட்டு அணியின் கேப்டனை ஒரு 'சுய கோல்' காரணமாகக் கொல்லும் அளவுக்கு அன்றைய கொலம்பியாவில் வன்முறை பரவியிருந்தது.
இதுபற்றிக் குறிப்பிட்ட லூயிஸ் ஃபெர்னாண்டோ ரெஸ்ட்ரெபோ, "இது வெறும் கால்பந்தின் காரணமாக மட்டுமே நிகழ்ந்த சம்பவம் இல்லை. ஒரு சுய கோல், மது மற்றும் வன்முறை அவை அனைத்தும் சேர்ந்ததால் ஏற்பட்டது" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























