'என் சாவுக்கு திமுக கவுன்சிலரே காரணம்' - வேலூரில் தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி செயலர் கடிதம்

உயிரிழந்த ஊராட்சி செயலாளர் ராஜசேகர்
படக்குறிப்பு, உயிரிழந்த ஊராட்சி செயலாளர் ராஜசேகர்
பிரசுரிக்கப்பட்டது

என் தற்கொலைக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளவர் ராஜசேகர். இவர் இராமநாயிணிகுப்பம் ஊராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று இரவு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?

"மனைவி காந்திமதி என்னை மன்னித்து விடு, நான் உன்னைவிட்டு போகிறேன். குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள். எனது இந்த முடிவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதான் காரணம், வேறு யாரும் காரணம் இல்லை," என்று கடிதத்தில் ராஜசேகர் கூறியுள்ளார்.

ஊராட்சியில் வேலை செய்த பணம் ரூ. 3.65 லட்சத்தை ஹரி பெற்றுக் கொண்டார். இதற்கான பில்களை தரவில்லை. மேலும் எனக்கு தொடர்ந்து போன் செய்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறார். இதனால் என் தற்கொலைக்கு அதிகாரிகள், உறவினர்கள், நண்பர்கள் யாரும் காரணமில்லை, ஒன்றிய கவுன்சிலர் ஹரி மட்டுமே காரணம்,'' என கடிதத்தில் ராஜசேகர் எழுதியுள்ளார்.

எஸ்.சி., எஸ்,டி., பிரிவின் கீழ் வழக்கு பதிவு

ராஜசேகர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரி மீது எஸ்சி எஸ்.சி., எஸ்,டி., பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலர் ஹரி தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் ஹரி
படக்குறிப்பு, திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் ஹரி

ஊராட்சி செயலாளர் ராஜசேகரின் தற்கொலைக்கு காரணமான கவுன்சிலர் ஹரியை கைது செய்ய வலியுறுத்தி ராஜசேகரின் உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரே அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுவரை ராஜசேகரின் உடலை வாங்கிக் கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். அதன்பின், நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் ராஜசேகரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

முதல் தகவல் அறிக்கை என்ன சொல்கிறது?

பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய குழு உறுப்பினர் வி. ஹரி என்பவர் தான் தற்கொலை செய்துகொண்ட ஊராட்சி செயலாளர் ராஜசேகரின் தம்பி பிரவீன்குமாருக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ .2,50,000 வாங்கியுள்ளார். ஆனால் ஹரி கூறியதுபோல் எந்த ஒரு பணியும் வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் கொடுத்த பணத்தை ஹரியிடம் ராஜசேகர் கேட்டதற்கு உங்கள் நிர்வாகத்தில் சில தவறுகள் நடைபெற்றுள்ளது அதை பேப்பரில் போட்டு உன்னையும் உங்கள் குடும்பத்தையும் அசிங்கபடுத்திவிடுவேன் என்று ராஜசேகர் ஏ ஹரி மிரட்டியுள்ளார். மேலும் தற்போது ராஜசேகர் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர் வேலையை பறித்து அவருக்கு பதில் அதே ஊராட்சியின் துணை தலைவரின் மகனை நியமனம் செய்து விடுவேன் என்று தினம் தினம் மிரட்டி உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

police fir

ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு:

இதனிடையே, ஊராட்சி நிர்வாகத்தில் 12 லட்ச ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக ராஜசேகர் மீது திடீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராஜசேகரிடம் கடந்த வாரம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ராஜசேகர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதிகாரியிடம் போலீசார் விசாரணை:

இதை தொடர்ந்து அணைகட்டு வட்டாட்சியர் விநாயக மூர்த்தி, இராமநாயினிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோருடன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் அணைக்கட்டு ஒன்றியத்தின் தலைவர் பாஸ்கரன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, "ஊராட்சியில் இருந்த பணம் இல்லை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர், ராஜசேகரிடம் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது மட்டும்தான் எங்களுக்கு தெரியும். திமுக கட்சி பிரமுகரின் மீது தேவையில்லாமல் அவதூறும் பொய்யும் பரப்புகிறார்கள். இருப்பினும் ராஜசேகரின் தற்கொலைக்கு உரிய காரணத்தை கண்டறிந்து அதில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதே திமுக கட்சியின் நிலைப்பாடு," என்றார்.

BBC iPlayer

மன அழுத்தம் உண்டானாலோ தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

2px presentational grey line
காணொளிக் குறிப்பு, 'நெஞ்சுக்கு நீதி' சமூக நீதிக்கான படம் - அருண்ராஜா காமராஜ் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: