You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை - விழுப்புரம் அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழப்பு
(இன்றைய (மே 14) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த தகராறில் போதையிலிருந்த பயணி தாக்கியதில் அரசு பேருந்து நடத்துநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
நடத்துநர் மயங்கி விழுந்தபின் அந்தப் பயணி பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரசாங்கத்தை பலப்படுத்தும் பணியில் ரணில்
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், தற்போது புதிய அமைச்சரவை ஒன்றினை உருவாக்க கடும் சிரமங்களை அவர் எதிர்கொண்டு வருவதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மூலமாக இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களை தொடர்புகொண்டு இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவதற்கான முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அராஜக நிலைமை மற்றும் அவசரகால நிலை பிறப்பித்து மக்களின் வன்முறை செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி வந்ததுடன் அவரையே பிரதமராக நியமிக்க தீர்மானத்தை எடுத்திருந்தார்.
மேலும், ராஜபக்ஷவினருக்கு மிக நெருக்கமான வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிய வந்துள்ளது.
தெலங்கானா - அரசு மருத்துவமனைகளில் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டம்
தெலங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கும் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கி உள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அம்மாநில சுகாதாரத் துற்றை அமைச்சர் ஹரீஷ் ராவ் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இவருடன் பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் ரூ. 5-க்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டனர்.
இந்த திட்டம் குறித்து அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறும்போது, "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தெலங்கானா அரசு இந்த உயரிய நலத்திட்டத்தை தொடங்கி உள்ளது. ஏழை எளிய மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நோயாளிகள் மட்டுமின்றி, அவருடன் வரும் நபர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கெனவே ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் இத்திட்டம் அம்மா உணவகத்தை போன்று நடத்தி வருகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைவர்'', என்று தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி அறிவித்துள்ளதாக இலங்கை நாளிதழான 'தமிழன்' செய்தி வெளியிட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை உறுதிப்படுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் நாடாளுமன்றக் குழு சனிக்கிழமையன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியின் கீழான அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில் இருந்து விலகி இருக்க அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் தீர்மானித்ததை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்துப் படுகொலை"
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்த அமரகீர்த்தி அத்துகோரள, நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக தற்போது ஆதாரங்கள் வெளியாகியுள்ளன என 'வீரகேசரி' செய்தி வெளியிட்டுள்ளது.
அமர கீர்த்தி அத்துகோரள, தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கடந்த 9ஆம் தேதி மாலை சம்பவம் நடந்தது குறித்து தகவல்கள் வெளியான போது, பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், கடுமையாக தாக்கப்பட்டமையால் எலும்புகள் சிதைவடைந்து உள்ளக ரத்த கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அத்தனகல்ல ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகிய வண்ண முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த ஆதாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது 'வீரகேசரி' செய்தி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்