கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் சந்திப்பு - அமைச்சரை தவிர்த்து விட்டு சந்தித்ததாக சர்ச்சை

ஆளுநர்ரவி
படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் கோவையில் கல்லூரி முதல்வர்களை ஆளுநர் தன்னிச்சையாக சந்தித்த நிகழ்வு சர்ச்சை ஆகியிருக்கிறது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக மே 12ஆம் தேதி ஆளுநரும் உயர்கல்வி துறை அமைச்சரும் கோவை வந்தனர்.

பட்டமளிப்பு விழா மே 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆளுநர் மே 12ஆம் தேதி மாலை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுடன் கலந்துரையாடினார். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்வில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

இது ஆளுநரின் தனிப்பட்ட நிகழ்வு அதனால் உயர்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.

உயர்கல்வி துறை அமைச்சர் அதே மாவட்டத்தில் இருக்கும்போது, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தவிர்த்து தன்னிச்சையாக கல்லூரி முதல்வர்களை ஆளுநர் சந்திப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது குறித்து உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, `இந்நிகழ்வு பல்கலைக்கழகமாக ஒருங்கிணைந்தது. இதற்கும் உயர்கல்வி துறைக்கும் சம்மந்தமில்லை. அதனால் உயர்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை,` என்றார்.

தமிழ்நாடு ஆளுநர்

கடந்த மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தியது கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தற்போதைய கல்லூரி முதல்வர்களுடனான நிகழ்வும் அமைந்துள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் பிச்சாண்டி, `பல்கலைக்கழக வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் கல்வியாளர்களைச் சந்திக்கலாம். கடந்த காலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் சர்ச்சையானதில்லை. தற்போது ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவுவதால் தான் சர்ச்சையாகிறது.

ஆளுநர் ரவி

ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டாலும் இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் தான் கல்லூரி முதல்வர்களை அழைத்துள்ளார். அதற்கு முன்னதாக மாநில உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். மாநில அரசு ஆட்சேபித்திருந்தால் அதனை ஆளுநரிடம் தெரிவித்து இத்தகைய நிகழ்வை தவிர்த்திருக்க வேண்டும். துணை வேந்தருக்கு அதற்கான சுதந்திரம் உள்ளது.

இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தேவையற்ற சர்ச்சை. இந்த விவகாரம் பூதாகரமானால் அதற்கு துணை வேந்தர் தான் பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள சிக்கலில் துணை வேந்தர்கள் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் உயர்கல்வி பாதிக்கப்படும்`

மாநில அரசிடம் தெளிவில்லை

ஆளுநர் ரவி

மாநில அரசும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தாங்களே நியமிக்கப்போவதாக சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் ஆளுநரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக தொடர்வார். இது ஒரு குழப்பமான நிலை. தமிழ்நாட்டில் சில பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் தான் துணை வேந்தராக உள்ளார். ஆளுநரின் அதிகார பறிப்பு சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளிப்பாரா எனத் தெரியாது. ஆனால் மோதல் போக்கு தொடர்வது உயர்கல்விக்கு உகந்ததல்ல` என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் மற்றும் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன், `ஆளுநர் தனி அரசாங்கத்தை நடத்துவது போல் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் கல்வியாளர்களை சந்திக்கக்கூடாது எனச் சட்டம் கிடையாது. ஆனால் நடைமுறை என ஒன்று உள்ளது. ஆளுநர் நடைமுறைகளை தொடர்ந்து மீறி தன்னிசையாக செயல்பட்டு வருகிறார். மாநில அரசை புறக்கணித்துவிட்டு எந்த துறையும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது.

ஆளுநர் தொடர்ந்து புதிய கல்வி கொள்கையை பரப்புரை செய்து வருகிறார். மாநில அரசோ அதை முற்றாக புறக்கணித்து மாநில கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறது.

மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இணக்கமான போக்கு இருக்கின்ற வரை சமூகமான செயல்பாடு இருக்கும். அந்த சமநிலை தவறுகின்றபோது தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும். இத்தகைய நிகழ்வுகள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் போன்ற கல்வி நிலையங்களை நடத்துபவர்களை சிக்கலான நிலைக்கு தள்ளுகிறது. ஆளுநர் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்` என்றார்.

இது தொடர்பாக கருத்து பெற உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் துணை வேந்தர் காளிராஜை தொடர்பு கொண்டபோது அவர்களுடைய இணைப்பை பெற முடியவில்லை. அவர்களின் கருத்துகள் கிடைக்கப்பெற்ற உடன் கட்டுரையில் இணைக்கப்படும்.

பாரதியார் பல்கலைக்கழகம் விளக்கம்

பாரதியார் பல்கலைக்கழகம்

ஆளுநரின் நிகழ்வு பற்றி பாரதியார் பல்கலைக்கழகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 'ஆளுநர் ரவி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளுக்கும் சென்று அதன் செயல்பாடுகள் பற்றி பேராசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை இயக்குநர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் ஆய்வுகளைப் பாராட்டினார்.

அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாடினார். அப்போது 'மாணவர்கள் இந்தியாவின் மறுமலர்ச்சியில் தேசிய உணர்வோடு பங்களிக்க வேண்டும்' என்றார். அதன் பின்னர் இணைப்புக் கல்லூரிகளில் முதல்வர்களோடு கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வுகளின்போது ஆளுநருடன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: