தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு குறித்த ஆய்வு: வரலாற்றில் ஏன் முக்கியம்?

மயிலாடும்பாறை
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களின் மீது நடத்தப்பட்ட காலக் கணிப்புப் பரிசோதனைகளின்படி, தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே ஒன்பதாம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் வாசித்த அறிக்கை ஒன்றின் மூலம் தற்போது தமிழ்நாட்டில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் ஆகியவை குறித்துத் தெரிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் தற்போது மூன்று முக்கியமான தகவல்கள் குறித்து அவர் தெரிவித்தார்.

முதலாவதாக, கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

அடுத்ததாக, சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் சென்றிருக்கக்கூடிய செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றிருப்பதும் தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்த நீர் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மூன்றாவதாக, தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் குறித்த ஒரு முக்கிய தரவு தற்போதைய ஆய்வில் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகள் மாநிலத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.

பாறை

இந்தத் தொல்லியல் மேட்டின் வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், 104 செ.மீ. ஆழத்திலும் 130 செ.மீ. ஆழத்திலும் பல இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இந்த இரண்டு அடுக்குகளிலும் இருந்து பல கரிமப் பொருட்களும் கிடைத்தன. இதிலிருந்து இரண்டு கரிம மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு AMS (Accelerator Mass Spectrometry) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 1615 என்றும் மற்றொரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்றும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இரும்புக் காலத்தை அறிவது ஏன் முக்கியம்?

மனிதர்கள் இரும்பிற்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்ப நிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது.

ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கும்.

ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்தியாவில் இரும்புக் காலம் எப்போது துவங்கியது என்பதை அறிவதற்கான தொல்லியல் ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. 1979ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள அஹார் என்ற இடத்தில் கிடைத்த மாதிரிகளின் மூலம் இரும்புக் காலம் கி.மு. 1,300 என கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலம் புக்காசாகராவில் சேகரிக்கப்பட்ட நான்கு கரிமங்களை ஆய்வு செய்ததன் மூலம் அங்கு இரும்பு உற்பத்திக் காலம் கி.மு. 1,530 என்று நிறுவப்பட்டது.

பின்னர், மத்திய கங்கைப் பள்ளத்தாக்கில் இரும்புத் தாது நிறைந்த ராய் பூரா என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் அங்கு இரும்புக் காலம் கி.மு. 1700-1800 வாக்கில் இருந்திருக்கலாம் என உறுதிசெய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மல்ஹார் மற்றும் வடக்கு கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் இரும்புக் காலம் கி.மு. 2,000 அளவுக்குப் பழமையானது எனத் தெரியவந்தது.

பட்டியல்
படக்குறிப்பு, இந்தியாவின் இரும்புக் காலம் குறித்த கால வரிசை பட்டியல்

ஆகவே, இந்தியாவின் பிற பகுதிகளில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் கி.மு. 2000 எனக் கருதப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பாக சேலம் பகுதியில் அதிக அளவில் இரும்புத்தாது கிடைத்தபோதிலும், இரும்பின் காலத்தை சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே இருந்தது.

மேட்டூருக்கு அருகில் மாங்காடு என்ற ஊரில் உள்ள ஈமச்சின்னத்திலிருந்து சேகரிக்கப்பட்ட இரும்பு மாதிரியின் சராசரி அளவீட்டுக் காலம் கி.மு. 1510 என்று பெறப்பட்டது. தற்போதுவரை, தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு இருந்த இடங்களில் மிகப் பழமையானதாக இந்த இடம் இருந்தது. இருந்தபோதும் இந்தியாவின் பிறபகுதிகளில் இரும்புக் காலம் இதற்கு முன்பே தோன்றியிருந்தது.

ஆகவே, தமிழ்நாட்டில் இரும்புக் காலத்தைச் சரியாகக் கண்டறியும் நோக்கிலான ஆய்வுகளின் மீதான ஆர்வம் நீடித்துவந்தது. ஆனால், தற்போது மயிலாடும்பாறையில் கிடைத்திருக்கும் முடிவுகளின்படி, இரும்புக் காலம் கி.மு. 2172வரை பழமையானது எனத் தெரியவந்துள்ளது.

மயிலாடும்பாறையில் தற்போது இக்காலக் கணிப்புச் செய்யப்பட்ட மண்ணடுக்குக் கீழாக மேலும் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பண்பாட்டு எச்சங்கள் காணப்படுவதாக தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகள் இரும்பு காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், தற்போது இம்மாதிரிப் பானைகள் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்தியாவில் இதுவரை இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட 28 இடங்களில் ஏஎம்எஸ் காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த 28 முடிவுகளிலும் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள ஆண்டுக் கணிப்பே காலத்தால் முந்தியது என்கிறது மாநிலத் தொல்லியல் துறை.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் அடுத்தகட்ட ஆய்வுகள்

சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடல் ஆய்வுக்கான முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் சிந்துவெளி நாகரிக அகழாய்வுகளில் கிடைத்த முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து ஆய்வு செய்யும் திட்டத்தையும் தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளவிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மயிலாடும்பாறையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்பட்ட பகுதியில் 2003ஆம் ஆண்டில் தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் கா. ராஜன் ஒரு அகழாய்வை மேற்கொண்டார். அந்த அகழாய்வில் நம்பிக்கை தரக்கூடிய தரவுகள் கிடைத்ததையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு புதிதாக அகழாய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: