ஜிப்மரில் இந்தி திணிப்பு சர்ச்சை: என்ன சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஜிப்மரில் தமிழ் பிராதனப்படுத்தபடும், மக்களுக்கான தொடர்பு தமிழில் தான் இருக்கும். இங்கே இந்தி திணிப்பு, மொழி வெறி என்று கூறி இதை அரசியலாக்க வேண்டாம் என துணைநிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜிப்மரில் அலுவல் மொழியாக முடிந்தவரை இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், அந்த மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக முடிந்தவரை 'இந்தி மட்டுமே' பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை மூலமாக ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார். இந்த சுற்றறிக்கையின் நகல் சமூக ஊடகங்களில் சிலரால் பகிரப்பட்ட பிறகு இந்த விவகாரம் சர்ச்சையானது.
இந்தி மட்டுமே வலுக்கும் எதிர்ப்புகள், போராட்டங்கள்
திமுக மக்களவை உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி முதலில் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 'இந்தி மட்டுமே' அலுவல் மொழியாக இருக்கும் என்ற ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை புதுச்சேரி டி.நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தமிழ் மொழிக்கு முதன்மை இடம், மொழி திணிப்பு இல்லை
இதனிடையே இந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஜிப்மரில் ஆய்வு செய்தார். பின்னர் ஜிப்மர் சுற்றறிக்கை தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "ஜிப்மரில் நிர்வாக ரீதியாக பகிரப்பட்ட சுற்றறிக்கை அது. ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பரவிக் கொண்டிருக்கிறது. ஜிப்மரில் இந்தி திணிப்பு எந்த விதத்திலும் இல்லை என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்," என்றார்.

இது உள்கட்டமைப்பிற்கு நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கை. இதேபோல மொத்தம் நான்கு சுற்றறிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் பொது மக்களுக்கான தொடர்பாக இருக்கட்டும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய கருத்துப் பரிமாற்றங்கள் ஆகட்டும், பொது மக்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவ சீட்டுகள், பொதுமக்கள் வருகை தரும் துறைகள் உள்ளிட அனைத்திலும் தமிழ் மொழியிலேயே விவரங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழில் பெயர் பலகைகள் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது," என்றார் அவர்.
"நிர்வாக ரீதியாக வெவ்வேறு துறைகளுக்கு கொடுக்கப்பட்ட நான்காவது சுற்றறிக்கை உள்ளது. அதில், மத்திய அரசின் சார்பில் உள்ள நிறுவனம் என்பதால், இங்கே பணிபுரிபவர்கள் பல பேர் இந்தி மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். ஆகவே அவர்களுக்காக இந்தி பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆங்கிலம், இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இங்கே இந்தி பேசுவோர் பணியாற்றுவதால், பணிப் பதிவேட்டிற்காக மட்டும் முடிந்தவரை இந்தி பயன்படுத்தப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கொடுக்கப்பட்ட 4 சுற்றறிக்கைகளில் 2 சுற்றறிக்கையை தவறாக பொருள்படுத்திக் கொண்டு, இந்தியைத் திணிப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்," என்று தமிழிசை தெரிவித்தார்.
"இங்கே இந்தி எந்த விதத்திலும் திணிக்கப்படவில்லை. தமிழ் மொழி பிரதானப் படுத்தப்படுகிறது. இந்தி திணிப்பு, மொழி வெறி என்று கூறி யாரும் இதை அரசியலாக்க வேண்டாம். ஜிப்மர் தொடர்ந்து மருத்துவ சேவை செய்ய எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,".

தமிழ் தவிர்த்து பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கே வருகை தருகின்றனர். இங்கே பணிபுரிகின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் தற்போது இருக்கும் ஆங்கிலம் தொடருமா என்று தமிழிசையிடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு அவர், "தமிழ், இந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகளே அனைத்திலும் இருக்கும். அதை சுற்றறிக்கையில் குறிப்பிட்டும் இருக்கின்றனர்," என்று தெரிவித்தார்.
"வீணான வதந்தியை பரப்பி அரசியல் செய்கின்றனர்"
இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஜிப்மர் சுற்றறிக்கையை வைத்து வீணான அரசியல் செய்வதாக தெரிவித்தார்.

மேலும் அவர், "ஜிப்மர் நிர்வாகம் 4 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்களுக்காக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையில் ஒன்றில் தமிழ் தான் முதன்மையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆங்கிலம் மூன்றாவது இந்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு சுற்றறிக்கையில், இது மத்திய அரசு சார்ந்த நிறுவனம் என்பதால், இங்கே இந்தியை தாய் மொழி கொண்டவர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். அவர்கள் சார்ந்த பயன்பாட்டிற்கு இந்தியை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். சுற்றறிக்கையில் தமிழ் தான் பிரதானமாக உள்ளது. இதில் வீணான அரசியலை புகுத்தி, ஜிப்மரில் இந்தியை திணிக்கின்றனர் என்ற வதந்திகளை பரப்புகின்றனர்," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



















