தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த ஆதீனங்கள் - பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரிக்கை

மு. க. ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இலங்கை, இந்திய செய்தித்தாள்கள், இணையதளங்களில் இன்று (மே 8) வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதீனங்கள் சனிக்கிழமையன்று சந்தித்து பேசியதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னம்பல அடிகளார், "தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி என்பது சமயம் தொடர்பான நிகழ்வு. இதில் அரசியல் செய்ய தேவையில்லை. பிற குறுக்கீடு, தலையீடு தேவையில்லை.

வழக்கம் போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முதல்வரும் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார். அரசு, மடம், ஆதீனம் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த ஆண்டு வழக்கம்போல் இந்த விழா சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம்.' என்று தெரிவித்தார்.

மக்களுக்கு எதிரியாக விரும்பவில்லை - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

பட மூலாதாரம், Getty Images

பொது மக்களுக்கு எதிரியாக நான் விரும்பவில்லை என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளதாக 'வீரசேகரி' செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில், நாட்டில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இதுவரைக் காலமும் பொது மக்கள் பக்கமிருந்து செயற்பட்ட தனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர், மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் "மக்கள் தாங்க முடியாத அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் எதிரியாக நான் ஒருபோதும் விரும்பவில்லை.

எனவே பொறுப்பு வாய்ந்த பல பதவிகளை வகித்த எனக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணமாகவே இதனை கருதுகின்றேன். இதன்படி பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து உடனடியாக விலகுகின்றேன்", என்று தெரிவித்துள்ளார்.

"எரிபொருள் விலை குறித்து பரவும் செய்தி தவறானது"

லங்கா ஐஓசி

பட மூலாதாரம், Getty Images

லங்கா ஐஓசி நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக 'தமிழன்' செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"லங்கா ஐ ஓ சி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு போலியான பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை: இடைக்கால அரசுக்கு சஜித் கட்சி ஆதரவு

இலங்கையில், இடைக்கால அரசை அமைப்பதற்கான ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, "

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.

மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.", என்று தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக இன்று வலுப்பெறும்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் சனிக்கிழமையன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று (மே 8) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். மேலும் இது 8ம் தேதி புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து 10ம் தேதி மாலை வட ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்குவங்கக் கடல்பகுதியை நோக்கி நகரக் கூடும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: