புல்லட் ஓட்டுவதற்கு 39 வயதில் கற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் பயணிக்கும் அம்பிகா

பட மூலாதாரம், AMBIKA KRISHNA
- எழுதியவர், ஷோபனா .எம் .ஆர்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"கிட்டதட்ட 40 வயது இருக்கும்போது, நான் புல்லட்டில் பயணிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுவும் இந்தியா முழுவதும் சுற்றவேண்டும் என்று நினைத்தேன். என்னை சுற்றி இருந்தவர்கள் ஏளனமாக பார்த்தார்கள். இந்த வயதில் எதற்கு தேவையில்லாத வேலை என்றார்கள் சிலர். ஆனால், இந்தப் பயணம் என் வாழ்வின் அடுத்த கட்டம் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் கேரளத்தை சேர்ந்த அம்பிகா கிருஷ்ணா.
பிபிசி தமிழுடன் அலைபேசியில் பேச தொடங்கிய அம்பிகா கிருஷ்ணாவின் சொற்களில் தன்னம்பிக்கையும் உறுதியும் மிளிர்கின்றன.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் தனது புல்லட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார் அம்பிகா. ஒவ்வொரு பயணத்திற்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு. அந்த வகையில், இந்த பயணத்தை ராணுவ வீரர்களுக்கும், ராணுவத்தில் தங்கள் கணவரை இழந்த பெண்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறார் தற்போது 43 வயதில் இருக்கும் அம்பிகா கிருஷ்ணா.
ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க காரணம் என்ன?
"என் கணவர் சிவராஜ் விமானப்படை அதிகாரியாக இருந்தவர். அவர் இறந்த போது எனக்கு 19 வயது. 1997 ஆம் ஆண்டு. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். கையில் மூன்று மாத பெண் குழந்தை. அப்போது எனக்கு வெளியுலகம் அதிகம் தெரியாது.
ஆனால், ஒற்றை ஆளாக நின்று என் மகளை வளர்க்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. அதற்கு என் படிப்பை தொடர வேண்டும். என் நண்பர்கள் உதவினார்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது, என் நண்பர்கள் என் குழந்தையைப் பார்த்துக்கொண்டனர்", என்று தன் வாழ்க்கை பயணத்தின் முக்கிய மாறுதல் குறித்து விவரிக்கிறார் அம்பிகா.

பட மூலாதாரம், AMBIKA KRISHNA
"இத்தனை ஆண்டுகளில், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் அதிகம் பகிர்ந்ததில்லை. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பயணம்", என்கிறார் அம்பிகா.
புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டதற்குப் பின்னால் ஒரு குட்டிக் கதை
அம்பிகாவுக்கு 39 வயது வரை புல்லட் ஓட்ட தெரியாது. அவர் அதனை ஓட்ட கற்றுக் கொண்டதற்கு பின்னால், ஒரு குட்டி கதை உண்டு.
"2018 ஆம் ஆண்டு. என் மகள் சங்கனாச்சேரி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். நான் கோச்சியிலுள்ல எஃப்.எம். வானொலி நிலையத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். மகளை பல நாட்களாக பார்க்காத தவிப்பு; திடீர்தனிமை என இரண்டும் என்னை சற்றே நிலைகுலைய செய்தன. இந்த சூழ்நிலையில் இருந்து விடுவித்துக்கொள்ள, என்னை மீட்டெடுக்க, ஒரு வெளி தேவைப்பட்டது. அதுதான் என்னுடைய புல்லட் - வாசு", என்கிறார் அம்பிகா.
அது என்ன புல்லட் - 'வாசு' என்றுதானே கேட்கிறீர்கள். வாசு என்பது தனது புல்லட்டுக்கு அம்பிகா வைத்த பெயர். காரணம்? அவரே சொல்கிறார் கேளுங்கள்...
புல்லட் வாசு?
"எனக்கு ஆண் குழந்தை பிறந்தால், வாசு என்று பெயர் வைக்க நினைத்தேன். அதனால்தான் என்னுடைய புல்லட்டிற்கு இந்த பெயர் வைத்தேன்", என்கிறார்.
அவர் புல்லட் வாங்கிய அதே 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம், கேரளாவில் வெள்ளம். எங்கும் பயணிக்க முடியாத நிலை. "நான் புல்லட் வாங்கிவிட்டேனே தவிர, வெள்ளம் வந்ததால் அதனை ஓட்டக்கூட கற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகு நிலைமை சரியாகி, ஒருவழியாக கற்றுக்கொண்டேன்."
அப்போது, சங்கனாச்சேரியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மகளை பார்க்க அடிக்கடி கொச்சியிலிருந்து தன் புல்லட்டை எடுத்து கொண்டு பயணிக்க தொடங்கினார் அம்பிகா. மேலும், பகுதிநேரமாக ஒரு தனியார் வானொலி நிலையத்தில் பணியாற்றும் அம்பிகாவுக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை பணிநேரம். அதற்கும் இந்த புல்லட் வாசுவே அம்பிகாவுக்கு துணையாக இருக்கிறது.

பட மூலாதாரம், AMBIKA KRISHNA
"நான் புல்லட் ஓட்டுவதைப் பார்த்து, பெரும்பாலானவர்கள் ஆண் என்றே நினைத்துகொள்வார்கள். அது ஒரு வகையில் எனக்கு சாதகமாகவே இருந்தது. இரவில் பயணிக்க எந்த பயமும் இருந்ததில்லை", என்று சிரிக்கிறார் அம்பிகா.
தற்போது மேற்கொண்டுள்ள பயணம் பற்றி அவர் கூறுகையில், "ஏப்ரல் 11ஆம் தேதி கேரளாவில் இருந்து இந்த பயணத்தை தொடங்கினேன். நான் பணியாற்றும் தனியார் வானொலி நிலையத்திற்கு இந்தியா முழுவதும் 25 கிளைகள் உள்ளன. அங்கு சென்று என்னுடைய பயணத்தின் குறிக்கோளை கூறுவேன். தற்போது சென்னையில் இருக்கிறேன்.
அதன் பிறகு, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் சென்று, அதன்பிறகு வடமாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்", என்று தன் பயணத்தை விவரிக்கிறார்.

பட மூலாதாரம், AMBIKA KRISHNA
இதுவரையிலான பயணம் எப்படி இருக்கிறது என்று கேட்டோம்.
சுவாரஸ்யமும் பயமும்
அதற்கு பதில் அளித்த அம்பிகா, "காடுகளையும், மலைகளையும் தாண்டுவதில்தான் சுவாரஸ்யமும் பயமும் ஒன்று சேர இருக்கும். எனக்கு ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட வழிதடங்களை கடப்பது சவாலாக இருந்தது. சமீபத்தில், கொடைக்கானல் சென்றுகொண்டிருந்தேன். வழியில் நான் திட்டமிட்டபடி பழனிக்கு செல்ல சற்று தாமதம் ஆனது. பழனியை சென்றடைந்தபோது மாலை 6:30 மணி. எனவே, கொடைக்கானல் செல்ல இரவு ஆகிவிடும் என்ற நிலை. ஏற்கனவே நான் இந்த வழித்தடங்கள் குறித்து விசாரித்து இருந்தேன். ஆனால், இரவு நேரம் அங்கே செல்லவேண்டி வரும் என்று நினைக்கவில்லை. அங்கிருந்த காவல்துறை அதிகாரியிடம் இப்போது இந்த வழியில் செல்ல முடியுமா என்று விசாரித்தேன். "உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் தாராளமாக செல்லலாம்", என்றார். நானும் என் பயணத்தை தொடர்ந்தேன். நான் திட்டமிட்டபடி கொடைக்கானலுக்கு அந்த இரவு சென்றடைந்தேன். இது எனக்கு கூடுதல் தன்னம்பிக்கை அளித்தது.
இது போன்ற பல சவால்கள் என் முன்னால் உள்ளன என்று தெரியும். இந்த பயணத்தை முழுமையாக்குவதே இத்தகைய சவால்கள்தான்", என்று புன்னகையுடன் கூறுகிறார் அம்பிகா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















