ரேஷன் கடைகளில் தொடர்ந்து மாட்டப்படும் நரேந்திர மோதி படங்கள்: இதுவரை நடந்தது என்ன?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் கோவையில் உள்ள பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை பாஜகவினர் மாட்டியதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரன் என்கிற பாஜக பிரமுகரை கைது செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, இதேபோன்ற சம்பவங்கள் கவனிக்கப்பட்டன.

  • கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சியில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை மாட்டியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோவை வந்திருத்த பாஜக தலைவர் அண்ணாமலை துரைசாமி நகரில் அமைந்துள்ள நியாய விலை கடைக்குச் சென்று அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அருகே பிரதமர் மோதியின் புகைப்படத்தை மாட்டினார்.
  • கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கரூர் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் இருந்த பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விளம்பரத்தின் மீது மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் பூசிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில் பாஜகவினர் பிரதமர் மோதியின் புகைப்படத்தை மாட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  • கடந்த ஏப்ரல் 22-ம் தேதி திருப்பூரில் உள்ள கணபதிபாளையம், கரைப்புதூர், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அலுவலகங்களில் பிரதமர் மோதி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகைப்படத்தை மாட்ட வந்துள்ளனர். அதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து புகைப்படத்தை மாட்ட கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.
  • அதே போல் ஏப்ரல் 22-ம் தேதியன்று திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் பாஜகவினர் பிரதமர் மோதியின் புகைப்படம் மாட்டியதால் திமுக - பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பாஜகவினர் சிலர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பிரதமர் மோதியின் புகைப்படம் சேதத்திற்குள்ளானது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல், `திமுகவினர் வேண்டுமென்றே இதில் சர்ச்சை செய்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் புகைப்படங்களை வைக்கலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை உள்ளது.

அதன் அடிப்படையில்தான் இந்த கோரிக்கையை முன் வைத்தோம். அந்த ஊராட்சிகளில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள்தான் புகைப்படம் வழங்குகிறார்கள். எங்கள் கோரிக்கை மனு மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். அதன் பின்னரும் நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்போம்` என்றார்.

இந்த நிலையில் ஏப்ரல் 22-ம் தேதி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், "அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோதி போன்ற தலைவர்களின் படத்தை வைக்க வேண்டும் என்ற புரோட்டோகால் உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரமசிவம் மீண்டும் வந்தவுடன் அந்த வார்டில் உள்ள ஐந்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் நரேந்திர மோதி படத்தை மாவட்ட தலைவர் உடன் சென்று அவர் வழங்குவார். மறுத்தால் நான் வருவேன். என்னை தடுத்தால் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவார். அடக்குமுறை மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க இயலாது. பாஜகவுக்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க இயலாது," என்றார்.

"இந்திய அரசுதானே நிதி தருகிறது"

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களில் 90% இந்திய அரசினுடையது. ஆனால் இந்த திட்டங்களையெல்லாம் பெயர் மாற்றி மாநில அரசின் திட்டங்களாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திய அரசிடமிருந்து எந்த திட்டங்களும் வருவதில்லை, எந்த உதவிகளையும் வருவதில்லை என பொய் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். கொரோனா தடுப்பூசிகளை இந்திய அரசு இலவசமாக வழங்கியது. ஆனால் இந்திய அரசின் பங்களிப்பை மறைத்து முதல்வர் புகைப்படத்தை வைத்துக் கொண்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்திய அரசு உணவுப் பொருள் வழங்கியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும்பான்மையான நிதியுதவி இந்திய அரசிடமிருந்து தான் வருகிறது.

எனவே இந்திய அரசின் பங்களிப்பை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை தமிழ்நாடு பாஜகவுக்கு உள்ளது. அதனால் நியாய விலை கடைகள், உள்ளாட்சி அமைப்புகள் என எங்கெல்லாம் இந்திய அரசின் பங்களிப்பு இருக்கிறதோ அங்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி புகைப்படங்கள் மாட்டப்படுவதை உறுதி செய்வோம். இது முரண்பாடு அல்ல, சட்டப்பூர்வமான உரிமை. தமிழ்நாடு அரசு அதை மறுக்கக்கூடாது` என்றார்.

"மாநிலங்களில்தானே வரி வசூலிக்கிறார்கள்?"

பாஜகவின் இந்த கோரிக்கை நியாயமற்றது என்கிறார் திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, "பாஜக ஆள்கிற வட மாநிலங்களில் கூட இது போன்ற நடைமுறை இல்லை. தமிழ்நாட்டில்தான் புதிதாக எழுப்புகிறார்கள். சட்டப்படி ஒன்றிய அரசு அலுவலகங்களில் பிரதமர், குடியரசு தலைவர்களின் புகைப்படங்களும் மாநில அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படமும் வைக்கப்படுவது நடைமுறை.

இந்திய அரசு நிதி வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த நிதி மாநிலங்களிலிருந்துதான் வசூலிக்கப்படுகிறது. அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படத்தை வைக்க பாஜகவினர் ஒப்புக்கொள்வார்களா?

தமிழ்நாடு அரசின் அரசாணையில் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் யாருடைய புகைப்படங்களை வைக்கலாம் என்பதுதான் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இங்கே இவர்களுடைய புகைப்படங்களை வைத்தே ஆக வேண்டும் எனக் கட்டாயமாக அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை" என்றார்.

கூடுதல் தகவல்களை பிபிசி தமிழுக்காக வழங்கியவர், திருச்சியில் இருந்து அருண் குமார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :