நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி யாருக்குக் கிடைக்கும்? - முழு விவரம்

    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

மக்கள் நலப் பணியாளர்கள் மறு பணி நியமனம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பில்,''மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்" என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, பணி வாய்ப்பு வழங்கப்படும்.'' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளார்கள். மக்கள் நலப் பணியாளர்கள் முதலில் நியமிக்கபட்டது எப்போது ? இப்போது வேறு பணிக்கு நியமனம் செய்வது ஏன் ? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளித் திட்ட பயன்கள் மற்றும் விமர்சனங்கள் என்ன ?

முதலமைச்சர் அறிவிப்பின் பின்னணி

தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது, சிறு சேமிப்புத் திட்டத்திற்கு உதவுவது, அரசு நலத்திட்டங்களின் பயனை மக்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக கடந்த, 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கிராம ஊராட்சிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையிலே, மொத்தம் இருந்த 12 ஆயிரத்து 617 கிராம ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி செய்த இந்த நியமனங்களை, கடந்த1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் 13.07.1991ஆம் ஆண்டு ரத்து செய்தார்.

இதையடுத்து, தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் இப்பணியிடங்கள் 24-2-1997 அன்று மீண்டும் உருவாக்கப்பட்டன. ஆனாலும் அடுத்து வந்த அ.தி.மு.க அரசால் 1-6-2001 அன்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 12.6.2006-ல் திமுக ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் இப்பணியிடங்களைத் தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12 ஆயிரத்து 618 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இறுதியாக 8-11-2011-லும் மீண்டும் அதிமுக ஆட்சியில் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம், அதிமுக ஆட்சியில் ரத்து என்று மாறி மாறி நிகழ்ந்தன.

நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையே மக்கள் நலப் பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளில் 19-8-2014 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென்ற அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, 19-8-2014ல் சென்னை உயர்நீதிமன்றம் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு அளித்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி விசாரணை நடைபெற்று, வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.

நீதிமன்றத்திற்கு உட்பட்டு முடிவு

இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினைக் கருத்தில்கொண்டு, தீர்வு காணும் வகையில். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பின்னர், நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்பிற்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்.

இதன்படி, மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்" என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, பணி வாய்ப்பு வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

"இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தினை ரூ.3,000-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தியும், மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து மாதம் ரூ.2,500 வழங்கவும், இதன்படி மாதம் ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று முதலமைச்சர் அறிவித்தார்.

உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு

மேலும், ''கடந்த 10 ஆண்டு காலத்தில், உயிரிழந்த மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும்'' என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம், பின்னர் ரத்து என்று மாறி மாறி நடைபெற்று அரசின் முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

100 நாள் வேலைத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படும்.

ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்து 15 நாட்களுக்குள், அவர் வசிக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திற்குள் வேலை வழங்கப்பட வேண்டும். வேலை வழங்கப்படாவிட்டால் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டின் கடலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 200 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து 2007ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் மேலும் 130 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டது. பின்னர் 2008ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

திட்டம் தொடங்கிய போது ஒரு நாளுக்கு ரூ. 80 ஊதியம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு நாளுக்கு ரூ. 273 வழங்கப்படுகிறது. இதை ரூ. 300 ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு, நூறு நாட்கள் வேலை வழங்கும் திட்டம் என்பதால், 100 நாள் வேலை என்று பரவலாக சொல்லப்படுகிறது.

உலக வங்கியின் பாராட்டு

வேலை வாய்ப்பு, கிராமப்புற பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் இந்த திட்டம் வழங்குவதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உலக வங்கியின் வளர்ச்சி அறிக்கையில்,''ஊரக வளர்ச்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு''என்று குறிப்பிட்டது.

இத்திட்டத்தின் மூலம் சாலைகள், நீர் நிலைகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். கிராம ஊராட்சி மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

100 நாள் திட்டத்தின் மீதான விமர்சனங்கள்

அதேநேரத்தில் இந்த திட்டம் குறித்த விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆகையால், இந்த திட்டத்தை விவசாய பணிகளுக்கும் விரிவாக்க வேண்டும்.

திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தி, முறையாக கண்காணித்து, திட்டத்தின் பலன், முழுமையாக கிராமப்புற மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டப்பணிகள் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற பணிகள் இனி ஒருங்கிணைப்பாளர்களின் மேற்பார்வையில் நடைபெறும். இத்துடன் இவர்கள் ஊராட்சி பணிகளிலும் பங்களிக்க உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: