“மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி”

"மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு"

பட மூலாதாரம், Subramaniam.Ma/Twitter

பிரசுரிக்கப்பட்டது

இன்றைய (11.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

மதுரை எய்ம்ஸ் கட்டுப்பானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொது மருத்துவ பிரிவில் தீவிர சிகிச்சைப் பிரிவு, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவு, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தீக்காய சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 360 கோடி ரூபாய் மதிப்பில் 2,100 அதிநவீன படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு முதல்வர் ஏப்ரல் 14-ஆம் தேதி சென்னையில் இருந்து காணொளி மூலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகிறார்.

மதுரை எய்ம்ஸ் தொடர்பான பணிகள் விரைந்து தொடங்க வேண்டுமென முதல்வர் அண்மையில், பிரதமர் மோதியை சந்தித்தபோது வலியுறுத்தியுள்ளார். நானும் செயலரும் மத்திய அமைச்சரைச் சந்தித்து, மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து தொடங்கக் கேட்டுக் கொண்டோம். அப்போது மத்திய அமைச்சர், ஒப்பந்தம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் உறுதியுளித்துள்ளார்," எனக் கூறினார்.

'பீஸ்ட்' படக் குழுவினர் நடிகர் விஜய் காரில் பயணம்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பின்போது, நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் படக் குழுவினரை அழைத்துச் சென்றுள்ள காணொளி வைரலாகி வருவதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

'பீஸ்ட்' படக் குழுவினர் நடிகர் விஜய் காரில் பயணம்

பட மூலாதாரம், NELSONDILIPKUMAR

அதுகுறித்த செய்தியில், "பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் 'பீஸ்ட்' படக்குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார். இயக்குனர் நெல்சன், மனோஜ், அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது," எனக் கூறப்பட்டுள்ளது.

அசைவ உணவுக்கு தடை விதித்ததால் மாணவர் குழுக்கள் மோதல்

ராமநவமியை முன்னிட்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்களிடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சித்தரிப்பு படம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு, "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்படனர். இதில் சில மாணவர்கள் காமடைந்துள்ளனர். ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கியுள்ளனர். அவர்கள் இரவு உணவு மெனுவை மாற்றவும் அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்கவும் வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி தாக்கினர். ஜே.என்.யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதனை எதிர்த்து ஏபிவிபி அமைப்பினர், "இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதியில் ஒரு பூஜை ஏற்பாடு செய்வதைத் தடுக்க முயன்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளது. சில சாதாரண மாணவர்கள், ராமநவமியை முன்னிட்டு மாலை 3.30 மணிக்கு காவிரி விடுதியில் பூஜை மற்றும் ஹவன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பூஜையில் ஏராளமான ஜே.என்.யு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பூஜையை நடத்தவிடாமல் தடுத்தனர். உணவு உரிமை விவகாரத்தில் பொய்யான சலசலப்பை உருவாக்கியுள்ளனர்," என்று தெரிவித்தனர். இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கியதாகவும் மாணவர்களை காயப்படுத்தியதாகவும் மாறி மாறி குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து பல்கலை வளாகத்திற்கு போலீஸார் வரவழைக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, இலங்கையில் இரவு பகலாகத் தொடரும் போராட்டங்கள் - வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைந்த மக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: