அரசு ஊழியர்கள் போல வந்து இரும்புப் பாலத்தை திருடிச் சென்ற திருடர்கள் - பிகாரில் விநோதம்

தொடர்ந்து மூன்று நாட்களாக திருடர்கள் இந்த பணியைச் செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC

படக்குறிப்பு, தொடர்ந்து மூன்று நாட்களாக திருடர்கள் இந்த பணியைச் செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் சமீப காலமாக அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. 1871ம் ஆண்டு செய்யப்பட்ட சூரிய கடிகாரத்தின் கூம்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிருந்து திருடப்பட்டது. தற்போது இந்த மாவட்டத்தில் இருந்து பாலம் ஒன்றை திருடர்கள் வெட்டிச் சென்றுள்ளனர். நீர்வளத்துறை பணியாளர்கள் என்று கூறிக்கொண்ட திருடர்கள் பாலத்தை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர்.

"இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்படும்,"என்று பாலம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய ரோஹ்தாஸ் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் பாரதி தெரிவித்தார். இந்த வழக்கில் எல்லா கோணங்களும் ஆராயப்பட்டுவருகின்றன.

விவகாரம் என்ன?

இந்த குறிப்பிட்ட பாலம், ரோஹ்தாஸின் விக்ரம்கஞ்ச் துணைப்பிரிவின் நாஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் வருகிறது. சோன் கால்வாயில் கட்டப்பட்ட இந்த பாலம் ஆரா கால்வாய் என்றும் அழைக்கப்படுகிறது. 12 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்ட இந்தப் பாலம், அமையவர் கிராமத்திற்கு அருகே திருடுபோயுள்ளது.

திருட்டு தொடர்பாக, பொறியாளர் அர்ஷத் கமால் ஷாம்சி, ரோஹ்தாஸில் உள்ள நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார். நீர்வளத்துறையின் சோன் கால்வாய் வட்டத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அர்ஷத் கமால்.

இந்த சம்பவம் குறித்து அவர் பிபிசிக்கு தொலைபேசியில் தகவல் அளித்தார். ""நீர்வளத்துறையின் இயந்திரவியல் துறை ஒன்று உள்ளது. பாலத்தை பராமரிக்கும் பணியை இது செய்கிறது. இந்த சீசனில் மெக்கானிக்கல் துறையினர் பாலம் போன்றவற்றை ஆய்வு செய்ய செல்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், துறை ரீதியான உத்தரவுகளுடன் பாலம் வெட்ட வந்திருப்பதாக்கூறி அதை திருடிச்சென்றுவிட்டனர்," என்று அவர் கூறினார்.

"பாலம் சிதிலமடைந்து விட்டதாகவும், இதனால் விலங்குகள் காயமடைவதாகவும், சில சமயங்களில் அவை இறந்துவிடுவதாகவும் கிராம மக்கள் கடந்த காலங்களில் பலமுறை விண்ணப்பித்துள்ளனர். அதனால்தான் ஜேசிபி, பிக்-அப், கேஸ் கட்டர் ஆகியவற்றுடன் வந்த திருடர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை,'என்று அர்ஷத் கமால் ஷாம்சி குறிப்பிட்டார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக திருடர்கள் இந்த பணியைச் செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருடர்களால் வெட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது

பட மூலாதாரம், SEETU/BBC

படக்குறிப்பு, திருடர்களால் வெட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது

இந்த சம்பவம் ஷாம்சிக்கு தெரிய வந்தது எப்படி?

"வேறொரு பாலம் கட்டும் வேலையைப் பார்க்க நான் போயிருந்தேன். அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதைக் கேட்டு, அந்தப் பாலத்தைப் போய்ப் பார்த்தேன். அதைத் திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு நான் எஃப்ஐஆர் பதிவு செய்தேன்," என்றார் அவர்.

பாலத்தில் 500 டன் இரும்பு இல்லை

திருடர்களால் வெட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. 1972-73ல் கட்டப்பட்ட இந்தப் பாலம், அமியாவர், சிடோகர், கோங்கா, மனவுலி, பட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த பாலம் நீண்ட நாட்களாக பயனின்றி கிடந்தது. இதனால், இதற்கு இணையாக மற்றொரு பாலம் கட்டப்பட்டது. மக்கள் அதை பயன்படுத்துகின்றனர்.

மறுபுறம், "பாலம் திருடப்பட்டது குறித்து எங்களுக்கு செய்தித்தாள் மூலம் தகவல் கிடைத்தது. இது நீர்ப்பாசனத் துறையின் துணையுடன் திருடப்பட்டதாக நான் நினைக்கிறேன்,"என்று மாவட்ட கவுன்சிலர் காந்தி செளத்ரி தெரிவித்தார்.

இந்த பாலத்தில் 500 டன் இரும்பு இருந்ததாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் அர்ஷத் பிபிசியிடம், "பாலம் பாழடைந்த நிலையில் இருந்தது. அதில் கூறப்பட்ட அளவு இரும்பு இல்லை" என்று கூறினார்.

நீர்ப்பாசனத் துறையின் வளாகத்தில் 1871 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சூரிய கடிகாரத்தின் கூம்பு, 2022 பிப்ரவரியில் திருடப்பட்டது

பட மூலாதாரம், SEETU/BBC

படக்குறிப்பு, நீர்ப்பாசனத் துறையின் வளாகத்தில் 1871 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சூரிய கடிகாரத்தின் கூம்பு, 2022 பிப்ரவரியில் திருடப்பட்டது

உள்ளூர் பத்திரிகையாளர் ஜிதேந்திர குமாரின் வீடு சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

"அது மிகவும் குறுகிய பாலம். பாலத்தின் வழியாக பைக், சைக்கிள் அல்லது ஆட்கள் நடந்து செல்ல முடியும். பாலத்தில் இரும்பு குறைவாகவே இருந்திருக்கும். நான் காலை நடைப்பயிற்சி செய்ய இந்தப் பக்கம் வந்தபோது ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் இந்தப்பாலம் வெட்டப்படுவதை நானும் வேறு பலரும் பார்த்தோம். ஆனால், பாலம் பயன்படுத்தப்படாததால், யாரும் எதுவும் சொல்லவில்லை. இங்கு கால்நடைகள் சிக்கி இறந்து, துர்நாற்றம் வீசுவதால், பாலம் மக்களுக்கு தலைவலியாக மாறியது. இந்த பாலத்திற்கு இணையாக கட்டப்பட்டுள்ள பாலமும் பழுதடைந்த நிலையில் உள்ளது," என்கிறார் அவர்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் தனது ட்விட்டர் பக்கத்தில், "45 ஆண்டுகள் பழமையான 500 டன் இரும்புப் பாலம், 17 ஆண்டுகால பாஜக-நிதீஷ் அரசின் கீழ் பட்டபகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதே ஆண்டில் திருடப்பட்ட சூரிய கடிகாரம்

ரோஹ்தாஸின் டேஹ்ரியில், நீர்ப்பாசனத் துறையின் வளாகத்தில் 1871 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சூரிய கடிகாரத்தின் கூம்பு, 2022 பிப்ரவரியில் திருடப்பட்டது. கூம்பு என்பது சூரியக் கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் உலோகத் துண்டு. அதன் பிரதிபலிப்பிலிருந்து நேரம் மதிப்பிடப்படுகிறது.

இந்த கடிகாரம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதில் இந்தி மற்றும் ரோமன் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சூரிய கடிகாரத்தின் கூம்பு திருடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ரோஹ்தாஸ் போலீசார் இந்த கூம்பை மாணிக்சந்த் குப்தா என்ற பழைய பொருட்கள் வாங்கும் நபரின் இடத்திலிருந்து மீட்டனர். மாணிக்சந்த் குப்தா வெறும் 2000 ரூபாய்க்கு திருடர்களிடம் இருந்து சூரிய கடிகாரத்தின் கூம்பை வாங்கியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, இந்தியா குறித்து இம்ரான் கான் கூறியது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: