திமுகவில் தொடரும் நிர்வாகிகள் நீக்கம்: கவுன்சிலர்களை கையாள்வதில் கட்சிக்கு சிக்கலா? -என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்தே அக்கட்சியில் இருந்து நீக்கப்படும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. `உள்ளாட்சித் தேர்தல் மூலம் கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும்போது புகார்கள் வருகின்றன. இதனால் வரும் தேர்தலில் தி.மு.கவுக்குத்தான் சிக்கல்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சம்பவம்:1
சென்னை ராயபுரம் கிழக்குப் பகுதியை சேர்ந்த 51 ஆவது வார்டு தி.மு.க கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன், கடந்த மாதம் 29 ஆம் தேதி நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் கும்பலாக நின்றபடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது சாலையின் குறுக்கே வாகனங்கள் இருந்ததால் அந்த வழியாக வந்த வண்ணாரப்பேட்டை காவல்நிலைய காவலர்கள், கும்பலை நோக்கிக் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த ஜெகதீசன், காவலர்களை நோக்கி ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகளை காவலர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் காரணமாக ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலர்களை ஜெகதீசன் மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலானதால், அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சம்பவம் 2:
சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் கட்டுமான பணி ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த 34 ஆவது தி.மு.க கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் கடந்த வாரம் தனது அலுவலகத்துக்கு அவர்களை வருமாறு வரவழைத்துள்ளார். அப்போது, மாநகராட்சியின் இடத்தில் கட்டுமானம் நடைபெற்று வருவதாக கவுன்சிலர் தரப்பில் கூறியுள்ளனர். அவர்களும், `எங்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளன' எனக் கூறியுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலானது. தங்களிடம் எதையோ எதிர்பார்த்து கவுன்சிலரின் கணவர் மிரட்டுவதாகவும் தம்பதிகள் புகார் தெரிவித்தனர்.
இதற்குப் பதில் அளித்த கவுன்சிலர் சர்மிளா காந்தி, ` மற்றொருவரின் இடத்தை ஆக்ரமித்து புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை வார்டு உறுப்பினர் என்ற முறையில் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து என்னுடைய அலுவலகத்துக்கு அந்தக் குடும்பத்தினர் வந்தனர். அப்போது என்னுடைய இருக்கையில் என் கணவர் அமர்ந்திருந்தது தவறுதான். ஆனால், அவர்களின் தவற்றை மறைக்க வீடியோ எடுத்து எங்கள் மீது அவதூறு பரப்பிவிட்டனர்' என்றார்.
- சென்னையை மையமாக வைத்து வெளியான இந்த வீடியோ காட்சிகள் தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடரும் நிர்வாகிகள் நீக்கம்
அதேநேரம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதே கட்சியின் நிர்வாகிகள் பலர் சுயேச்சையாகக் களமிறங்கினர். இதனால் பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பிரமுகர் உள்பட 56 பேரை கட்சியில் இருந்தே நீக்கி தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் தி.மு.கவினரே தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளைக் கைப்பற்றினர். இதனால் வேதனைப்பட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், ` மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன். கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலக வேண்டும். அவ்வாறு விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படுவார்கள்' என எச்சரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து, ஒரு சிலர் பதவி விலகினாலும் பல இடங்களில் தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதற்கு தி.மு.கவினர் விரும்பவில்லை. இதன் காரணமாக திருப்பூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் துரைமுருகன் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, உசிலம்பட்டி, ஆம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். தினந்தோறும் கட்சியினர் நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியானாலும், தி.மு.கவினர் சிலர் நடத்தும் அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே போவதாகவும் கூறப்படுகிறது. இதனை விமர்சித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், `தி.மு.க தலைவரின் பேச்சை தி.மு.கவினரே கேட்பதில்லை. இனி தி.மு.கவின் ஊரக தலைவர்களின் கொடுமைகள் அதிகமாக இருக்கும். இந்த அராஜகத்தை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியாது' என்றார்.
தவறுகள் தொடர்வது ஏன்?
``தி.மு.க தலைமையின் எச்சரிக்கையும் மீறி தவறுகள் தொடர்வது ஏன்?'' என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, `` உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்பது சற்று அதிகம். ஒரு கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது. அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும்போது இதுபோன்ற புகார்கள் வருகின்றன'' என்கிறார்.
`` பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களின் அதிகாரத்தை கணவர்களோ அல்லது உறவினர்களோ கையில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் தவறுகளைக் களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனைத் தவிர வேறு வழியில்லை. ஒரு கட்சிக்கு எளிதில் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுப்பது உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள்தான்'' எனக் குறிப்பிடுகிறார் ஷ்யாம்
மேலும், `` உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.கவினர் வெற்றி பெற்ற பிறகு இதனை யூகித்த முதலமைச்சரும், `கட்சிக்காரர்கள் தவறு செய்யக் கூடாது' என எச்சரிக்கை கொடுத்தார். அதையும் மீறி சில இடங்களில் தவறு நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் கீழ்மட்டத்தில் கட்சியை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களை ஒன்றிய, பேரூர், நகர அளவில் இருப்பவர்கள்தான் கண்காணிக்க வேண்டும்.
தி.மு.கவுக்கு சிக்கலா?
பொதுமக்களுக்கு சில கவுன்சிலர்கள் பாதிப்பினை ஏற்படுத்துவது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வரும்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு வெளிவராமலேயே நிறைய விஷயங்கள் நடக்கின்றன. கட்சிக்காரர்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தி.மு.க ஆட்சிக்கான `ஹனிமூன் காலம்' என்பதெல்லாம் முடிந்துவிட்டது. தி.மு.கவினர் என்ன செய்கிறார்கள் என்பதை பிற கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன'' என்கிறார்.
``பத்து ஆண்டுகள் தி.மு.க ஆட்சியில் இல்லாததால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமா?'' என்றோம். `` ஐந்தாண்டுகள் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இப்படித்தான் செய்வார்கள். 2002 ஆம் ஆண்டு இதேபோன்று சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது புகார் எழுந்தது. அப்போது பேசிய ஜெயலலிதா, `சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் திருந்தாவிட்டால் நான் கலைக்கவும் தயங்க மாட்டேன்' என எச்சரிக்கை விடுத்தார். அதேபோல், 2006 தி.மு.க ஆட்சியின்போதும் இதே பிரச்னைகள் நடந்தன. ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்துவது எளிது. ஆனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சமாளிப்பது எளிதல்ல. அதிகாரத்துக்குப் பெண்கள் வரும்போது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அதிகாரத்தில் உள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால், பல பெண்கள் தன்னிச்சையாக மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாகவும் குறை கூறிவிடமுடியாது'' என்கிறார்.
மேலும், `` தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் செயல்பாடுகள் என்பது மிகவும் முக்கியம். இதே நிலைமை நீடித்தால் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் தி.மு.க சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது வரும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தி.மு.கவின் பதில் என்ன?
``தி.மு.க நிர்வாகிகளின் அத்துமீறல்களை கட்சித் தலைமை எவ்வாறு தடுக்கப் போகிறது?'' என அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளரும் அரசு வழக்குரைஞருமான வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் தவறுகளைக் களைவது என்பது மிகவும் முக்கியம். மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யார் தவறு செய்தாலும் அது சரிசெய்யப்படும் என மக்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது. இதன்மூலம் மற்றவர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்த முடிகிறது'' என்கிறார்.
`` ஆட்சி அதிகாரத்தில் பத்து ஆண்டுகளாக இல்லாததால் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் சிலர் செல்வாக்கை காட்ட முற்படுகின்றனர். அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக தலைமை கருதுகிறது. தி.மு.க என்பது கட்டுக்கோப்பான இயக்கம், யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தலைமை உறுதியாக இருக்கிறது. சிலர் செய்யும் இதுபோன்ற செயல்களால் வரும்காலத்தில் கட்சிக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அராஜகத்தைக் கையில் எடுத்துக் கொள்கிற ஆள்கள் கட்சிக்குத் தேவையில்லை என்பதுதான் தலைமையின் நிலைப்பாடு'' எனக் குறிப்பிடும் கண்ணதாசன்.
`` உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிதம் ஒதுக்கினாலும் 90 சதவீதம் அளவுக்கு ஆண்களின் தலையீடுதான் இருக்கிறது. இது முழுமையாக மாறும் வரையில் இதுபோன்ற பிரச்னைகள் நீடிக்கவே செய்யும். தவறு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் கட்சித் தலைமை பாரபட்சம் காட்டுவதில்லை'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
























