பேருந்து படிகளில் ஸ்டைலாக தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்கள்: இறக்கிவிட சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் இன்று காலை (28.03.2022) கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பின்பக்கம் உள்ள ஏணியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாகக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொற்றியபடி பயணிப்பதைத் தடுக்கும் வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருகாலை ஏணியில் வைத்துக் கொண்டும், மற்றொருகாலை அந்தரத்தில் தொங்க விட்டபடியும், உயிருக்கு ஆபத்தான முறையில் அவர்கள் சென்றனர்.
மாணவர்களில் ஒரு சிலர் தங்களது புத்தகப் பையை தோளில் சுமந்து கொண்டு, சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
சாகசம் என்கிற பெயரில் ஆபத்தான பயணம்
இதேபோல், வட மதுரையில் இருந்து வேடசந்தூர் செல்லக்கூடிய தனியார் பேருந்துகளிலும் மாணவர்கள் பேருந்தின் பின்பக்கம் உள்ள ஏணியில் தொங்கிக்கொண்டும், பேருந்தின் மேல் புறத்தில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
சாகசம் என்கிற பெயரில் இப்படி உயிருக்கு ஆபத்தான முறையில் செல்வதை தடுத்து நிறுத்த போக்குவரத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

பட மூலாதாரம், Social Media Viral Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்திலும் இது போல் ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் சென்றனர். ஆனால், அந்த பகுதியில் பேருந்து இல்லாத காரணத்தால், கிடைத்த பேருந்தில் மாணவர்கள் தொற்றியபடி சென்றனர்.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்வதற்கு கிராமப்புறப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறைசார்பில் நேரடி நியமன வட்டாராக்கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க விழா இன்று மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் என்ன சொல்கிறார்?
அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
18 வயதிற்கு உள்பட்ட, பள்ளி மாணவ, மாணவியர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
''பள்ளி மாணவர்கள் படிகளில் பயணம் செய்வதை கண்டவுடனே, பேருந்தை நிறுத்தி, அவர்களை இறக்கி விடுங்கள்'' என்று நடத்துனர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்தில் பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் பயனடைவார்கள். ஆனால்., பள்ளி மாணவர்கள் ஸ்டைலாக செல்வதாக நினைத்துக் கொண்டு பேருந்தின் படியில் தொங்கி கொண்டு, ஆபத்தான பயணம் செய்கின்றனர்.'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

























