You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடியில் தாயை கொன்றதாக மகள் கைது - போலீஸில் சிக்கியது எப்படி?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
ஆண் நண்பர்களுடன் அதிக நேரம் செல்போனில் பேசுவதை தவிர்க்குமாறு கண்டித்த தாயை, அவரது 17 வயது மகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலட்சுமி. இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இரு மகள்கள், மகனுடன் முனியலட்சுமி தனியாக வசித்து வருகிறார். முனியலட்சுமியின் 17 வயது மகள் பாலிடெக்னிக் முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த தங்ககுமார் மற்றும் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனால் செல்பேசி மூலம் தனது நண்பர்களுடன் இவரது மகள் பேசுவார். அதை முனியலட்சுமி பல முறை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகள், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, சனிக்கிழமை இரவு தாய் முனியலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
போலீஸிடம் பிடிபட்டது எப்படி?
முனியலட்சுமி இறந்த பிறகு அவரை மர்ம நபர்கள் சிலர் நகைக்காக ஆசைப்பட்டு கொலை செய்ததாக அவரது மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணையின் போது முனியலட்சுமியின் மகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது ஆண் நண்பர்களுடனான பழக்கத்தை தவிர்க்குமாறு தனது தாய் கூறியதால் ஆத்திரத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயை கொலை செய்ததாக அவரது மகள் ஒப்புக் கொண்டதாக போலீஸார் கூறினர்.
இதையடுத்து மகள் மற்றும் முனியலட்சுமியைக் கொலை செய்ய உதவியதாக அவரது நண்பர் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
'மாற்றத்தை தேடி'
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில நாட்களாக முனியலட்சுமியின் மகள் தன்னுடன் வேலை பார்க்கும் சில ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்துள்ளார்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆண் நண்பர்களுடன் செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாய் முனியலட்சுமி கண்டித்துள்ளார். ஆனாலும் முனியலட்சுமியின் மகள் தொடர்ந்து பல மணி நேரம் ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த முனியலட்சுமி தனது மகளை பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார்.
இது அந்தப் பெண்ணுக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையிலேயே தன் தாயை தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான பிரச்னைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க 'மாற்றத்தை தேடி' என்ற விழிப்புணர்வு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் பொது இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வின் முக்கிய நோக்கம், பெண்கள் தனது செல்போன்களை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த கூடாது என்பது தான்.
கொரோனா காலகட்டத்தில் இருந்து 18 வயதிற்குள் கீழ் உள்ள குழந்தைகள் பெரும்பாலானோர் செல்போன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் எவ்வாறு செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். தேவையற்ற ஆப்களை பயன்படுத்துகிறார்களா, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளதா என பெற்றோர் கவனிக்க வேண்டும்.
அதேபோல் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படம், சுய தகவல்களை பதிவு செய்ய வேண்டாம், சமூக வலைதளங்கள் மூலமாக முகம் தெரியாத நபர்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம். குழந்தைகள் இந்த சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து சாதித்து காட்ட வேண்டும் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்