ஆர்ஆர்ஆர் கதையில் வரும் இரு சுதந்திர வீரர்களின் நிஜ கதை தெரியுமா?

ஆர்ஆர்ஆர் படத்தின் உண்மைக் கதை: ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஆந்திர ஹீரோக்கள்
    • எழுதியவர், பல்லா சதீஷ், சுபம் பிரவீன் குமார் மற்றும் சங்கர் வடிசெட்டி
    • பதவி, பிபிசி தெலுங்கு சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கும்ரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராமராஜூ ஆகிய இருவர் குறித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் பழங்குடிகள் தங்கள் கடவுளாகக் கருதும் 'மன்யத்தின் ஹீரோ' அல்லூரி சீதாராமராஜு மற்றும் தெலங்கானாவை சேர்ந்த கும்ரம் பீம் ஆகியோரைத் தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அல்லூரி, ஆந்திராவிலுள்ள மன்யம் காட்டுப் பகுதியிலுள்ள பழங்குடிகளை ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியபோது, கும்ரம் பீம் கோண்ட் பழங்குடிகளின் உரிமைகளுக்காக நிஜாமுடன் போராடினார்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் அல்லூரி சீதாராமராஜுவும் கும்ரம் பீம் கோண்ட் ஆதி ஆகிய இருவரும் நண்பர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். ராஜமௌலி தனது திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை உயர்த்துவதற்காக இந்த இரண்டு வரலாற்று தலைவர்களைப் பயன்படுத்தினார்.

இந்த இரண்டு தலைவர்களும் யார்? அவர்களுடைய வரலாறு என்ன?

கும்ரம் பீம்

கும்ரம் பீம் அக்டோபர் 22,1902 அன்று சங்கேபள்ளி கிராமத்தில் கோண்ட் பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் கும்ரம் சிம்னா.

அப்போது ஹைதரபாத் மாநிலத்தில் நிஜாமின் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியும் நிஜாம்களின் அடக்குமுறையும் கலவையாக இருந்தது. 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் இருந்து -பழங்குடிகள் புதிய வகையான பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்கினர். வனப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அவர்களுடைய நிலங்களும் வயல்களும் பறிக்கப்படுகின்றன.

இந்த பிரச்னைகளை எதிர்கொண்ட பல கோண்ட் பழங்குடியினக் குடும்பங்களில் பீமின் குடும்பமும் ஒன்று. அவருக்கு 15 வயதாக இருந்தபோது, சங்கேபள்ளியில் வன அதிகாரிகள் மற்றும் வணிகர்களால் அவருடைய குடும்பம் பல சிரமங்களை எதிர்கொண்டது.

"பீமின் தந்தை இறந்ததும் அவருடைய குடும்பம் சுர்தாபூர்க்குக் குடிபெயர்ந்து, அங்கு விவசாயம் செய்யத் தொடங்கியது. அறுவடைக்கு த் தயாரான நேரத்தில், இஸ்லாமிய பட்டாதாரர் ஒருவர், தாங்கள் சாக்குபடி செய்துகொண்டிருந்த நிலத்தின் மீது உரிமை கோரினார். அப்போது, பீம் சாதிக் என்பவரின் தலையில் அடிக்கவே, அதைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அஸ்ஸாமுக்குத் தப்பியோடி, அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யத் தொடங்கினார்.

அங்கு அவர் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். நாட்டின் அரசியல் மற்று கிளர்ச்சிகளுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்,' என்று அல்லம் ராஜய்யா மற்றும் சாஹூ இணைந்து எழுதிய கொமுரம் பீமில் எழுதியுள்ளார்.

அஸ்ஸாமில் நடந்த கிளர்ச்சிகளிலும் பீம் பங்கேற்றார். பின்னர், ஆசிபாபாத் அருகே உள்ள காகன்காட்டில், லச்சு படேலின் கீழ் வேலை செய்யத் தொடங்கினார். பிறகு, அவர் சோம் பாயை மணமுடித்தார்.

மாணவராக அல்லூரி சீதாராம்ராஜ்

வன உரிமைக்கான போராட்டம்

ஏறக்குறைய அதேநேரத்தில், பீமின் மாமாக்கள் மற்ற பழங்குடிகளுடன் சேர்ந்து, பாப்பேஜாரியைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் காடுகளை வெட்டி, அந்த நிலத்தை சாகுபடிக்கு வாங்கினார்கள். ஆனால், சீக்கிரமே அவர்களை அடக்குமுறை பின்தொடர்ந்து வந்தது. காவல்துறை அவர்களுடைய கிராமங்களை அழித்தது. 12 கிராமங்களின் சார்பாக அரசாங்கத்துடன் பேசும் நபராக பீம் முடிவு செய்யப்பட்டார்.

அரசாங்க அதிகாரிகளால் அதிகரித்து வரும் பிரச்னைகள், காடுகளின் மீதான அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதால், இந்த 12 கிராமங்களை ஒன்றிணைத்து ஓர் இயக்கத்தை பீம் தொடங்கினார்.

முக்கியமாக, பீமின் கருத்து என்னவெனில், காடுகள், காடுகளின் நிலம் மற்றும் ஓடையிலுள்ள நீர் மீதான உரிமைகள் பழங்குடிகளிடம் இருக்க வேண்டும்.

இந்தச் சூழலில்தான் அவர் ஜல்-ஜங்கல்-ஜமீன் என்ற புகழ் பெற்ற முழக்கத்தை உருவாக்கினார். அவர்கள் இந்த மூன்றின் மீதான உரிமைகளுக்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கினார்கள். பீம் "எங்கள் மன்ணில் எங்கள் அரசாங்கம்" என்ற கருத்தைக் குறிப்பிடும், 'மாவ நாடே மாவ ராஜ்' என்ற கோஷத்தை முழங்கினார்.

"நிலைமை கைமீறிப் போவதைக் கவனித்த அப்போதைய நிஜாம் அரசு, அப்போதைய உதவி ஆட்சியரை பேச்சுவார்த்தைக்காக ஜோடேங்காட்டுக்கு அனுப்பி வைத்தது. இந்த 12 கிராமங்களுக்கும் பட்டா வழங்குவது, கடன் ரத்து செய்வது போன்ற வாக்குறுதிகள் கிராம மக்களுக்கும் வழங்கப்பட்டது. 12 கிராமங்களுக்கும் பீம் சுயராஜ்ஜியத்தைக் கோரினார். உதவி ஆட்சியர் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை என்று விளக்கினார் அல்லம் ராஜையா.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இயக்கத்தை அடக்க நிஜாம் அரசு சிறப்பு காவல் படையை அனுப்பியது. ஏழு மாதன்ப்க்கள் பீமின் தலைமையிலான பழங்குடிகளின் படைகள் சண்டையில் ஈடுபட்டன. இறுதியாக, செப்டம்பர் 1,1940 அன்று பீம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீம் மரணத்திற்குப் பொறுப்பான குர்து படேல், 1946-ஆம் ஆண்டில் தெலங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆர்ஆர்ஆர் படத்தின் உண்மைக் கதை: ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஆந்திர ஹீரோக்கள்

கும்ரம் பீம்: தலைவர் மட்டுமல்ல, கடவுள்

வெளியுலகின் பார்வையில் பீன் ஒரு புரட்சியாளராக இருக்கலாம். ஆனால், கோண்ட் பழங்குடிகளுக்கு அவர் கடவுளுக்கு நிகர். ஆசிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள் இன்றும் அவருடைய நினைவாகப் பாடல்களைப் பாடுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் அஸ்வயுஜ பௌர்ணமி நாளில் அவரை நினைவு கூர்கின்றனர். "கொம்ரமுக்கு மந்திர சக்தியுண்டு. எந்த கல்லும் தோட்டாவும் அவரை ஒன்றும் செய்ய முடியாது" என்று கோண்டுகளிடையே பரவலாகவும் ஆழமாகவும் ஒரு நம்பிக்கை இருந்தது.

கோண்டுகள் பீமை எந்தளவுக்கு வணங்குகிறார்கள் என்பதை இதுவே விளக்குகிறது.

அல்லூரி சீதாராமராஜு

தெலுங்கு மண்ணில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர் அல்லூரி சீதாராமராஜு. மன்யத்தில் பழங்குடிகளை ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்கள் எதிராகக் கிளர்ச்சி செய்தார். சில ஆண்டுகள் சில போராட்ட இயக்கங்களை வழிநடத்தினார். இறுதியில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். மகாத்மா காந்தி தனது யங் இந்தியா இதழில் அவரைப் பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தின் உண்மைக் கதை: ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஆந்திர ஹீரோக்கள்

ஜூலை 4, 1897-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாண்டரங்கி கிராமத்தில் பிறந்தார். இவருடைய சொந்த கிராமம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகல்லு ஆகும். இவருடைய தந்தை பெயர் வேனக ராம ராஜு. அவரது தந்தை ஒரு புகைப்படக்காரர். சூர்யநாராயணம்மா அவருடைய தாயார். ஒரு சராசரியான நடுத்தரக் குடும்பம் தான். அவர் தனது கல்வியை கோதாவரி பகுதியிலுள்ள நர்சபுரம், ராஜ மகேந்திராவரம், ராமச்சந்திரபுரம், துனி, காக்கிநாடா மற்றும் பல இடங்களில் பயின்றார்.

அல்லூரி 6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் காலரா நோய் பரவியது. அவருடைய தந்தை 1908-ஆம் ஆண்டில் காலராவுக்குப் பலியானார். இதற்குப் பிறகு, அல்லூரி கல்வியைத் தொடரவில்லை. அல்லூரி 1916-ஆம் ஆண்டு தியானத்தில் ஈடுபடும் நோக்கத்தோடு வட இந்தியாவிற்கு ஒரு பயணத்தைத் தொடங்கினார்.

ஆன்மிகப் பயணத்தை முடித்துக் கொண்டு, 1918-இல் சொந்த ஊருக்குத் திரும்பினார். 1919-ஆம் ஆண்டு முதல் காட்டுப் பகுதியில் பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கினார். பழங்குடிகளின் காடுசார் விளைபொருட்களை எடுத்துக் கொள்வது, அவர்கள் செய்யும் வேலைக்குக் கூலி வழங்காதது போன்ற பிரச்னைகளில் அவர் அரசாங்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். பழங்குடிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்.

காடுகளுக்குள் மூன்றாண்டு ஆயுதப் போராட்டம்

இருபது வயதே ஆன அல்லூரி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக் கொடியை உயர்த்தினார். முக்கியமாக, ஆங்கிலேயர்கள் மன்யம் பகுதியில் முட்டாதர் என்றழைக்கப்படும் உள்ளூர் உயரடுக்கினருடன் இணைந்து நடத்திய சுரண்டல் அவரைக் கோபப்படுத்தியது. பழக்குடிகளுக்கு எதிராக உள்ளூரில் கடன் கொடுப்பவர்களும் ஒப்பந்தக்காரர்களும் ஈடுபடும் வன்முறையால் ஆத்திரமடைந்து அல்லூரி கிளர்ச்சி குரலை எழுப்பினார்.

அல்லூரி சீதாராமராஜு நினைவிடம்
படக்குறிப்பு, அல்லூரி சீதாராமராஜு நினைவிடம்

அல்லூரி தலைமையில் மன்யத்தின் புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கைப்பற்ற காவல் நிலையங்களைச் சோதனையிட்டனர். அல்லூரி மற்றும் அவருடைய தோழர்கள் ராஜாவோம்மங்கி, அட்டதீகலா, தேவிபட்டினம், சிந்தபள்ளி, கிருஷ்ணா தேவி பேட்டா மற்றும் பிற காவல் நிலையங்களில் சோதனை நடத்தினர். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த காவல் நிலையங்களை ஒரே நாளில் சோதனை செய்தது அப்போது மிகவும் பரபரப்பானது. மக்களிடையே அல்லூரி மீது பாசமும் மரியாதையும் வளர்ந்தது. அவருக்கு மந்திர சக்தி இருப்பதாகச் சிலர் நம்பினர்.

இதை மன்யம் பிதுரி என்று அப்போதைய அரசு கருதியது. தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆயுத இயக்கம் தொடர்ந்தது. அல்லூரியின் இயக்கத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் முதலில் மலபார் சிறப்புக் காவல்துறையை அனுப்பியது. அவர்கள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை அனுப்பப்பட்டது.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை அல்லூரியை கைது செய்தது. கோயுருவுக்கு அருகிலுள்ள மாம்பாவில் உள்ள ஓடையில் காயங்களைக் கழுவிக் கொண்டிருந்தம்போது அல்லூரியை ஒரு வீரர் தாக்கிப் பிடித்ததாகப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், கைது செய்யப்பட்ட அல்லூரி உயிருடன் அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய நிலையில், வழியிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மேஜர் குடல் என்ற அதிகாரி, அல்லூரி சண்டையிட்டதால் மே 7, 1924 அன்று சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அல்லூரியின் உடல் கிருஷ்ணா தேவி பேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. அந்தப் பகுதி தற்போது அல்லூரியின் நினைவு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி தனது 27-வது வயதிலேயே உயிரிழந்த அல்லூரி மான்யம் புரட்சியாளராகப் போற்றப்படுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: