You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒன்றிய அரசு என்பதே சரி: பாஜக எம்.பி. தலைமையிலான நடாளுமன்ற குழு
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்திய அரசை மத்திய அரசு என்று கூறுவதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என பாஜக எம்.பி. சுஷில்குமார் மோதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கை, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
`இந்தியா என்பது மாநிலங்களால் அமைக்கப்பட்ட நாடு அல்ல. இந்தியாவால் அமைக்கப்பட்டதுதான் மாநிலங்கள். இதன் அர்த்தம் புரியாமல் சிலர் பேசி வருகின்றனர்' என பா.ஜ.க விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் நீதி, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில்குமார் மோதி தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கை குறித்து `டெக்கான் ஹெரால்டு' நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு என்ற வார்த்தையை இந்திய ஒன்றியம் என மாற்ற வேண்டும். நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை என அதிகாரத்தின் மூன்று பிரிவுகளும் இந்திய ஒன்றியத்தின் அங்கம் என அழைக்கப்பட வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகள் நிலைக்குழுவில் அதிகார வரம்பை மீறியது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதாகவும் பரிந்துரை தெளிவாக இருப்பதாகக் குறிப்பிடும் நிலைக்குழு, அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது மத்திய அரசு, ஒன்றிய அரசு என எது பயன்படுத்தப்பட்டது எனக் கூறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் கேள்வியெழுப்பியபோது, `இந்திய அரசு என்பதை ஆங்கிலத்தில் யூனியன் கவர்ன்மெண்ட் என அழைப்பதால், நாங்கள் ஒன்றிய அரசு என்கிறோம். இது ஒன்றும் சமூக விரோத குற்றமல்ல' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையை தி.மு.க வரவேற்றுள்ளது.
தி.மு.க சொல்வது என்ன?
வழக்குரைஞர் ராஜீவ்காந்தி (செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க) : அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய பி.என்.ராவ் உள்ளிட்ட வல்லுநர்கள் முன்பாக, கூட்டாட்சித் தத்துவம் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது, `இந்தியா என்பது ஒரு நாடா.. துணைக் கண்டமா?' என்ற பேச்சு வந்தது. இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்கிறார்கள். பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாகவும் உள்ளது. எனவே, இறையாண்மையுள்ள இரண்டு அரசுகள் தேவைப்படுகின்றன. ஒன்று ஒன்றிய அரசு, மற்றொன்று மாநில அரசு எனக் கொண்டு வந்தனர். அதை கூட்டாட்சியாகவும் அவசர நிலை உள்ளிட்ட முக்கிய காலகட்டங்களில் கூட்டாட்சி போலவும் காணப்படும் எனத் தெரிவித்தனர். அந்த அடிப்படையில்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்கள் இந்திய ஒன்றியம் என அழைத்தனர். ஆங்கிலத்தில் `யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்றனர். ஏனென்றால், எந்த இடத்திலும் டெல்லி அரசு மட்டும் இல்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 354ன்படி நிதி நெருக்கடி வந்தால் ஆட்சியைக் கலைக்கலாம் என்று உள்ளது.
நெருக்கடி நிலை வரும்போது ஒன்றிய அரசையும் கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அப்படியானால், இதைவிட மேம்பட்ட அதிகாரம் உள்ளது என்றுதானே பொருள். அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களின் நோக்கமும் இரண்டு அரசுகள் என்பதாகத்தான் உள்ளது. ஒற்றை ஆட்சித் தன்மையோடு தங்களுக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் என்று பேசி வருகின்றனர். 1935 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திலோ, 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வரையறைக் குழுவிலோ, 1950 ஆம் ஆண்டு வந்த அரசியலைமைப்புச் சட்டத்திலோ மத்திய அரசு எனப் பயன்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து இத்தனை நாளாக தி.மு.க பேசாமல் இருந்ததற்குக் காரணம், வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில்கூட ஒற்றை ஆட்சித் தன்மையோடு அவர்கள் நடந்து கொள்ளவில்லை. ஆனால், எந்த மாநில அரசையும் கேட்காமல் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில்கூட புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவை உருவாக்கிவிட்டு கருத்தைக் கேட்பது என ஜனநாயகத்துக்கு எதிராக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. எந்த மாநில அரசுகளையும் கேட்காமல் தாங்கள் செய்ததே சரி எனப் பேசும்போது, `ஒன்றிய அரசுதான்' எனப் பேசி வருகிறோம். அதைத்தான் நிலைக்குழுவும் கூறியுள்ளது. நீதித்துறையிலும் யூனியன் ஆஃப் இந்தியா என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமும் அதைத்தான் சொல்கிறது.
பா.ஜ.கவின் பதில்
நாராயணன் திருப்பதி (பா.ஜ.க): நாடாளுமன்ற நிலைக்குழு கூறினாலும் அரசு அதனை ஏற்கவில்லை. இந்திய அரசானது, தன்னுடைய நிர்வாக வசதிக்காகத்தான் மாநிலங்களைப் பிரித்துள்ளது என இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. அதனால் இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அல்ல. மாநிலங்களால் அமைக்கப்பட்ட நாடும் அல்ல. இந்தியாவால் அமைக்கப்பட்டதுதான் மாநிலங்கள். மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிக்கலாம் என்றுதான் சட்டமும் சொல்கிறது. இதுநாள் வரையில் அப்படித்தான் நடந்து வருகிறது. இதன் அர்த்தம் புரியாமல் சிலர், யூனியன் என்றால் தமிழில் ஒன்றியம் எனப் பொருள்படும். அதனால் அவ்வாறு பேசுகிறோம் என்கின்றனர். மாநிலங்களால் அமைக்கப்பட்ட அரசாக இந்திய அரசு இல்லை. அதனால்தான் அமைச்சகமும், இதனைத் தவறானது எனத் தெளிவாகக் கூறிவிட்டது என்றார் நாராயணன் திருப்பதி.
அதிமுக கருத்து
வழக்குரைஞர் இன்பதுரை (அ.தி.மு.க சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்) இது குறித்து பிபிசி தமிழிடம் கூறிய கருத்து:
இந்தியா என்பது மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியமாகத் திகழும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அதனை மத்திய அரசு என்றுதான் இதுவரை அழைத்து வந்தோம். `அதிகாரங்கள் குவிந்தது' என்ற பொருளில் அதாவது சென்ட்ரலைஸ்ட் கவர்ன்மென்ட் என்ற பொருளில் கூறப்பட்டு வந்தது. தி.மு.க என்றைக்கும் இல்லாத ஒன்றாக, மத்திய அரசிடம் அதிகாரம் குவிந்துவிடக் கூடாது என்ற அர்த்தத்தில் `ஒன்றிய அரசு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்த ஞானோதயம் என்பது மிகத் தாமதமானது. கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்தபோது தி.மு.க தட்டிக் கேட்காததால்தான் தற்போது நீட் தேர்வு வரையில் வந்து நிற்கிறது. அதேபோல், கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க ஆட்சியில்தான். அதனையும் அவர்கள் தட்டிக் கேட்கவில்லை. அப்போது பா.ஜ.கவை சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம் அபிடவிட் ஒன்றைத் சென்னை உயர்நீதிமன்த்தில் தாக்கல் செய்தார்.
அதில், ` கச்சதீவு வழக்கை இந்திய நாட்டின் நீதிமன்றத்தில் நடத்த முடியாது. சர்வதேச நீதிமன்றத்துக்குதான் செல்ல வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது கருணாநிதிதானே ஆட்சியில் இருந்தார். இவ்வளவும் செய்துவிட்டு தற்போது ஒன்றிய அரசு என ஸ்டாலின் அழைப்பதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது? சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது மத்திய அரசிடம் கோரிய நிதி இதுவரை வந்து சேரவில்லை. ஒன்றிய அரசு என இவர்கள் கூறி அடிக்கும் அரசியல் நாடகங்களால் தமிழ்நாட்டின் நலன்தான் பாதிக்கப்படுகிறது என்றார் இன்பதுரை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்