You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் முழுதாகத் தொடங்கிய இந்தியா: புதிய விதிகள் இதோ
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசால் இடைநிறுத்தப்பட்டிருந்த சர்வதேச பயணிகள் விமான சேவை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முழுமையாக இயங்கத் தொடங்கியது. இதையடுத்து, மொரீஷியஸ், மலேசியா, தாய்லாந்து, துருக்கி, அமெரிக்கா, இராக் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 60 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அவற்றின் சேவையை தொடக்கின.
இந்த ஆண்டுக்கான கோடை கால அட்டவணையில் மொத்தமாக 1,783 சேவைகளை இயக்க இந்திய விமான போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த விமான சேவைகள் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் இந்திய அரசு கூறியிருக்கிறது. இதற்கான புதிய விதிகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1) இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த புதிய விதிகளின்படி, கேபின் குழு உறுப்பினர்கள் இனி தனிப்பட்ட பாதுகாப்பு (பிபிஇ) ஆடைகளை அணியத் தேவையில்லை. அதே சமயம், பொது இடங்களில் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் முக கவசங்களை அணிவது, கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது கட்டாயமாகும்.
2) விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேவைப்படும் இடங்களில் பயணிகளை மீண்டும் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
3) சர்வதேச விமானங்களில் மருத்துவ அவசர தேவைகளுக்காகவும், "சுமூகமான விமானச் செயல்பாடுகளை" எளிதாக்குவதற்காகவும் மூன்று இருக்கைகளை காலியாக வைத்திருக்கத் தேவையில்லை.
4) பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு, காற்றில் ஏற்படும் நோய் பாதிப்புகள் தொடர்பான ஏதேனும் சுவாச நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களைக் கையாள, சில கூடுதல் PPE பாதுகாப்பு ஆடை மற்றும் வசதிகள், சானிடைசர் மற்றும் N95 முக கவசங்களை கொண்டு செல்ல விமான நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். 5) முன்னதாக, பிப்ரவரி 28ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடையை நீட்டிப்பதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநர் அறிவித்தார். இந்த நிலையில், சமீபத்திய உத்தரவின்படி இந்தியாவில் இருந்து சர்வதேச பயணிகள் சேவையை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
6) புதிய உத்தரவின்படி இந்தியாவில் இருந்து இன்று முதல் 63 நாடுகளுக்கு விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. இதில் இந்திய விமான நிறுவனங்கள் மூலம் ஒவ்வோர் வாரமும் 1,466 சேவைகள் இயக்கப்பபடும். இண்டிகோ நிறுவனம் 505 சேவைகளையும், டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 361 சேவைகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 340 சேவைகளையும் இயக்கவுள்ளன.
7) இந்த கோடைகால அட்டவணை மார்ச் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதிவரை கடைபிடிக்கப்படவுள்ளது.
8) சமீபத்திய அறிவிப்பின் மூலம் உலகுடன் இந்தியாவை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்