You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸொமேட்டோ 10 நிமிட டெலிவரி சர்ச்சை: விளக்கம் கேட்க காவல்துறை முடிவு
இன்று காலை நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை சுருக்கமாக காணலாம்.
டிப்ளமோ மாணவிகளுக்கும் 1000ரூ
அரசு பள்ளிகளில் படித்து டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் மாதாந்திர ரூ.1,000 வழங்கும் திட்டம் பொருந்துமென்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்ததாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் திருமண உதவி தொகை திட்டம், "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்" என இந்த பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும், மாணவியர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது..
இதனிடையே பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக ஐடிஐ அல்லது டிப்ளமோ போன்ற படிப்புகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களுக்கு இத்திட்டம் பொருந்துமா? பொருந்தாதா? என கேள்வி எழுந்தது.
இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு நேரடியாக ஐடிஐ டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என கூறினார். மற்ற மாணவிகள் போல் அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அவர் விளக்கம் அளித்தார்.
எடப்பாடிபழனிசாமியை விசாரிக்க மனு
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி மனு அளித்திருப்பதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதைத் தொடர்ந்து ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடப்பாடியுடன் நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன். நடந்தவைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அப்போலோ நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.
ஆகவே மக்களின் பெயரால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைப்பை ஏற்படுத்தி இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
10 நிமிடங்களில் எப்படி டெலிவரி? சர்ச்சையில் ஸொமேட்டோ
ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் எப்படி டெலிவரி தர முடியும்? ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் சாத்தியம் குறித்தும் ஸொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை மாநகர காவல்துறை விளக்கம் கேட்கவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என்றும், அதற்காக ஸொமேட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி அந்த நிறுவனத்தில் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்கு பொதுமக்கள் டிவிட்டர் பக்கத்தில் அது எப்படி சாத்தியம்? தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலில் எப்படி முடியும்? நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்த நிறுவனம் 'சில பொருட்களுக்கு மட்டும் அது பொருந்தும்' என்று விளக்கம் அளித்தது.
இதற்கிடையே சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி எப்படி 10 நிமிடங்களில் பொதுமக்களுக்கு உணவு டெலிவரி செய்ய முடியும் என்றும் சாலை விபத்துக்கள் நடக்க வழிவகுக்குமே என்றும், ஆர்டரின் படி உணவு கொண்டு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றும ஸொமேட்டோ நிறுவனத்திடம் விளக்க கேட்கவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி கூறுகிறது.
பீர்பம் வன்முறை: திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது
பீர்பம் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராம்புராட் பிளாக்-1 பகுதியின் தலைவராக இருந்தவர், அனாருல் ஹுசைன். செல்போன் டவர்களின் சிக்னல் மூலம் இவரைத் தேடியதில் கொலைக்கும் இவருக்குமான தொடர்பு இருப்பதாக தெரியவர, இவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் என்ன?
மேற்கு வங்க மாநிலம் பீர்பம் மாவட்டம், ராம்புராட் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் பாது ஷேய்க், இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இவரது கொலையால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, நேற்று, செவ்வாய்க்கிழமை போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்குத் தீ வைத்ததில், 8 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்