You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மியூச்சுவல் ஃபண்ட்: மாதம் ரூ. 5,000 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 12 லட்சம் கிடைக்குமா?
- எழுதியவர், ஐவிபி கார்த்திகேயன்
- பதவி, பிபிசி தெலுங்கு சேவைக்காக
- பிரசுரிக்கப்பட்டது
புதிய முதலீட்டாளர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன என்று வாரன் பஃபெட்டிடம் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்
விதி 1: பணத்தை இழக்கும் வாய்ப்புகள் உள்ளவற்றில் முதலீடு செய்யாதீர்கள்
விதி 2: முதல் விதியை மறந்துவிடாதீர்கள்
நாம் முதலீடு செய்ய முடிவு செய்யும் முறை எதுவாக இருந்தாலும், நமது நிதி இலக்குகளை அடையும் விதத்தில் நமது நிதித் திட்டமிடல் இருக்க வேண்டும். இருப்பினும், ஆபத்து இல்லாத முதலீட்டு முறைகள் எதுவும் இல்லை. எந்தவொரு முதலீட்டிலும், அதில் கூடவே இருக்கும் அபாயங்கள் தவிர, பல காரணிகளும் முதலீட்டின் மீதான வருவாயை பாதிக்கின்றன.
கொரோனா போன்ற சுகாதார நெருக்கடியை சமாளிக்க சிறந்த முதலீட்டு வழி எது? யுக்ரேன்-ரஷ்யா போர் போன்ற எதிர்பாராத ஒன்று நடக்கும் போது நமது நிதி இலக்குகளை எவ்வாறு அடைவது?
2009ல் ஏற்பட்டது போன்ற மந்தநிலை ஏற்பட்டால் அதை எவ்வாறு தாக்குப்பிடிப்பது? வழக்கமான பணிச்சுமை காரணமாக முதலீட்டு வழிகளை நம்மால் சரியாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை என்ற சூழலில் நாம் எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
எந்தவொரு சராசரி முதலீட்டாளரையும் தொடர்ந்து அரித்துக்கொண்டிருக்கும் சில கேள்விகள் இவை.
இந்தக் கேள்விகள் எதற்கும் நேரடியான பதில்கள் இல்லை. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகள் (பரஸ்பர நிதியங்கள்) போன்ற குறைந்த ஆபத்துள்ள வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் இழப்புகளின் அபாயத்தைக் குறைத்து நமது நிதி இலக்குகளை அடையலாம்.
நெருக்கடி காலங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளும் பிரச்சனையை சந்திக்கின்றன. பரஸ்பர நிதிகளின் களத்தில் நிதித் திட்டமிடலின் அடிப்படைக் கொள்கைகளை கொண்டுவருவதன் மூலம் இத்தகைய நெருக்கடிகளின் போது இழப்புகளிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
இண்டெக்ஸ் நிதியங்கள்
நிறுவனங்களின் செயல்திறனை ஆய்வு செய்ய நேரமில்லாத நபர்களுக்கு இண்டெக்ஸ் நிதியங்கள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
தங்க நிதிகள் தவிர எல்லா இண்டெக்ஸ் ஃபண்டுகளும் (Index funds) கடந்த பத்தாண்டுகளில் 12%க்கும் அதிகமான வருவாயை தந்துள்ளன.எனவே, ஒருவர் ஒரு தசாப்தத்திற்கு முன்பு மாதத்திற்கு 5000 SIP ( Systematic investment plan) செய்யத்தொடங்கியிருந்தால் இன்று அவர்களின் மூலதனம் ரூ. 12 லட்சம்.
இப்போது, இந்த நிதியம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இண்டெக்ஸ் ஃபண்டுகள் என்பது முதலீட்டு வழியாகும். அங்கு உங்கள் சார்பாக மற்றவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஒரு இண்டெக்ஸ் நிதிய மேலாளரின் பணி மற்ற நிதியங்களின் மேலாளர்களின் பணியில் இருந்து வேறுபட்டது.
சம்பந்தப்பட்ட இண்டெக்ஸ் நிதிய மேலாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் நிதி முன்னேற்றத்தைப் பார்க்க மாட்டார் அல்லது வருடாந்திர பங்குதாரர்களின் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். அந்த நிறுவனத்தின் பங்கு முன் வரையறுக்கப்பட்ட குறியீட்டின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே மேலாளர் பார்ப்பார். ஒவ்வொரு சந்தைக் குறியீட்டையும் கணக்கிடும் போது, சம்பந்தப்பட்ட மேலாளர், நிறுவனங்களின் செயல்பாட்டை விரிவாகப் பார்த்து, குறியீட்டில் ஒரு நிறுவனத்தின் பங்கைச் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்.
இது குறியீட்டு நிதிய மேலாளரின் பணியை எளிதாக்குகிறது. குறியீட்டைக் கணக்கிடும் போது மேலாளர் பல்வேறு துறைகளின் செயல்திறனைக் கணக்கில் எடுத்துக் கொள்வதால், அதே போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆபத்து இல்லை.
முதலீட்டு ஆலோசகர் நிறுவனமான வான்கார்ட் குழுமம் 1974இல் இண்டெக்ஸ் நிதியத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பல முதலீட்டாளர்கள் தொடக்கத்தில் சந்தேகத்துடன் இருந்தனர். ஃபண்ட் மேனேஜர் இல்லாத ஃபண்ட் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இருப்பினும், காலப்போக்கில் குறியீட்டு நிதிகள் மிகவும் பிரபலமாயின.
சொந்தமாக முதலீட்டு போர்ட்ஃபோலியோவை உருவாக்குதல்
அடிப்படை கொள்கைகளின் உதவியுடன் போர்ட்ஃபோலியோவை எவ்வாறு சொந்தமாக உருவாக்குவது என்பதைப் பார்ப்போம்.
ஒரு முக்கியமான முதலீட்டு கொள்கை என்னவென்றால், நாம் வணிகங்களில் முதலீடு செய்ய வேண்டும், பங்குகளில் அல்ல.ஏனென்றால், நிறுவனத்தின் செயல்திறன் எதுவாக இருந்தாலும் அது அவர்கள் செய்யும் வணிகத்தைப் பொறுத்தது.
எனவே, ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்துள்ள துறையின் செயல்பாடு மற்றும் நிலைமைகளைப் பார்த்து முதலீடு செய்வது முக்கியம்.
பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு துறைகளின் வருடாந்திர வளர்ச்சி விகிதக் குறியீடுகள் உள்ளன. தரவுகள் பம்பாய் பங்குச் சந்தையில் இருந்து பெறப்பட்டது. இந்த அட்டவணையின்படி, FMCG மற்றும் வங்கியைச் சேர்ந்த நிறுவனங்களின் குறியீடுகளின் வளர்ச்சி மற்ற துறைகளை விட அதிகமாக உள்ளது.
இந்த இரண்டு துறைகளும் 15% க்கும் அதிகமான வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்தத் துறைகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 15 சதவிகிதத்தை நமக்குத் திருப்பித் தரும் வாய்ப்புகள் உள்ளன என்று இதிலிருந்து முடிவு செய்யலாம். ஆயினும், இந்தத் துறைகள் ஏன் இந்த விகிதத்தில் வளர்கின்றன என்பதை ஆய்வு செய்த பிறகு நாம் முடிவை எடுக்க வேண்டும்.
* 2020 பிப்ரவரி துவக்க காலமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மற்றும் 5,10 மற்றும்15 ஆண்டு காலத்திற்கு வளர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டது.
FMCG (ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) துறை
மக்களுக்கு அன்றாட தேவைகளை வழங்கும் இத்துறையின் கிராக்கி எப்போதுமே குறையாது. கோவிட் காரணமான பொதுமுடக்கத்தின் போது கூட இந்தத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்தத் துறையின் வாடிக்கையாளர்கள். எனவே, F.M.C.G துறையின் வளர்ச்சி முழுவதுமாக, தேவை சார்ந்தது.
தொழில்நுட்பம் சார்ந்த ஹோம் டெலிவரி வேகமாக வளர்ந்து வரும் தற்போதைய சூழ்நிலையில், இந்தத் துறைக்கான தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தத் துறை முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
வங்கித் துறை
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு வங்கித் துறை. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான இந்தத் துறையின் மீது அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பது இயற்கையே. எனவே, இந்தத் துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். வங்கித் துறையில் ஏற்படும் ஏதேனும் அசம்பாவிதம், மற்ற துறைகளிலும் எதிரொலிக்கும்.
இதன் காரணமாக, அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இந்தத் துறையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்தத் துறையின் லாபத்துக்கு இதுவும் ஒரு காரணம்.
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 50 சதவிகிதத்தை, வருடத்திற்கு 15% வருமானம் தரும், நல்ல எதிர்கால வாய்ப்புகளைக்கொண்ட இந்த இரண்டு துறைகளிலும் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். அத்தகைய முதலீட்டின் மூலம் நமது மொத்த முதலீட்டில் 50%, நஷ்டத்தை சந்திக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்யலாம்.
மீதியுள்ள 50% பணத்தை அதிக ரிஸ்க்/அதிக வருமானம் உள்ள நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் அல்லது ஸ்மால் கேப் ஃபண்டுகள் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்க முடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்