உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் எக்சிட் போல்: காங்கிரஸ் vs பாஜக நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்களின் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது.
உத்தராகண்டின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும், கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
மணிப்பூர் மாநிலம் இரு கட்டங்களாகத் தேர்தலைச் சந்தித்தது.
உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்டமாக நிறைவடைந்தது.
'எக்சிட் போல்' எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் மார்ச் 7ஆம் தேதி மாலை வெளியாகின.
உத்தர பிரதேச எக்சிட் போல் 2022
'எக்சிட் போல்' கணிப்புகள் பெரும்பாலானவை உத்தர பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்றே கணித்துள்ளன. ஆனால் 2017ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 300க்கும் மேலான இடங்களைப் பெற்ற பாஜக இம்முறை 220-250 இடங்களில் வெல்லும் என்றே கூறுகின்றன.
இங்கு ஆட்சி அமைக்க 202 இடங்களே தேவை.
கடந்த முறை 47 இடங்களில் வென்ற சமாஜ்வாதி கட்சி தமது பலத்தை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எக்சிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.

விவசாயிகள் போராட்டம், பசுவதை தடையால் விவசாயிகளுக்கு உண்டான பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை ஆளும் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உண்டாகியுள்ளதாகவும் இங்கு சமாஜ்வாதி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
1990களுக்கு பிறகு பாஜக - சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் என்று மும்முனைப் போட்டியைச் சந்தித்த உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜின் தொடர் தேர்தல் தோல்விகளால் இம்முறை பாஜக - சமாஜ்வாதி என்று இருமுனைப் போட்டியாகவே மாறியுள்ளது.
பகுஜன் சமாஜ் வலுவாக உள்ள சில தொகுதிகளில்தான் மும்மனைப் போட்டி நிலவியது.
பஞ்சாப் எக்சிட் போல் 2022
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
2017 தேர்தலில் பெரும்பாலான எக்சிட் போல் கணிப்புகளை விட அக்கட்சி குறைவான இடங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இங்கு காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே போட்டி நெருக்கமாக உள்ளதாகவும், யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டப்பேரவை அமையலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலி தளம் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. முதல்வர் பதவியில் விலகுமாறு தேசியத் தலைமை ஆணையிட்டதால், பதவி விலகியபின் காங்கிரசில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாகத் தேர்தலைச் சந்தித்தது.
மேற்கண்ட காரணிகளால் வாக்குகள் பிரிந்து யாருக்கும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்றே தொங்கு சட்டமன்றம் அமையும் என்று வாதிடுவோர் கூறுகின்றனர்.
உத்தராகண்ட் எக்சிட் போல் 2022
உத்தராகண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
2000ஆவது ஆண்டில் உத்தர பிரதேசத்தை பிரித்து, இந்த மாநிலம்உருவாக்கப்பட்ட பின்னர் நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இரு முறை காங்கிரசும் இரு முறை பாஜகவும் வென்றுள்ளன.
2017இல் வென்ற பாஜக இப்போது அங்கு ஆட்சியில் உள்ளது. இதுவரை ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கட்சி உத்தராகண்டில் மீண்டும் வென்றது இல்லை.
ஆம் ஆத்மி கட்சியும் இம்முறை உத்தராகண்டில் போட்டியிட்டது.

பட மூலாதாரம், Getty Images
கோவா எக்சிட் போல் 2022
கோவா மாநிலத்திலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாக 'எக்சிட் போல்' கணிப்புகள் கூறுகின்றன.
40 தொகுதிகள் உள்ள கோவா மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் வெல்லவில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலம் பாஜக அங்கு ஆட்சி அமைத்தது.
ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இம்முறை கோவாவில் களம் இறங்கியுள்ளதால்
ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதற வாய்ப்புண்டு.
மணிப்பூர் எக்சிட் போல் 2022
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
கோவாவைப் போலவே 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பெறவில்லை. அடுத்த இடத்தில் இருந்த பாஜக சிறிய கட்சிகளுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து, மணிப்பூரில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.
இந்த முறை பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிப்புகள் கூறினாலும், தேர்தலுக்கு பின் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி உள்ளிட்டவை தேர்தலுக்கு பின் ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்காற்றலாம்.
பிற செய்திகள்:
- கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை, சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும்
- ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி?
- ரிசர்வ் வங்கி கையேடு: எத்தனை விதமான நிதி மோசடிகள்? தற்காத்துக்கொள்வது எப்படி?
- அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு: சசிகலா முயற்சிகள் தோல்வியடைவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்



















