நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மேற்கு மண்டலத்தில் யார் யாருக்கு மேயர் வாய்ப்பு?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மேயர் பதவிக்கு தேர்வாகத் தகுதி பெற திமுகவுக்குள் கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. "மாநகராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலரும் தங்களுக்கு வேண்டிய அதிகார மையங்கள் மூலம் மேயர் இடத்தைப் பிடிக்கும் வேலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்" என்கின்றனர் திமுக வட்டாரத்தில்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கொங்கு மண்டலத்தில் திமுகவினரால் கோலோச்ச முடியவில்லை. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் ஓர் இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதேநேரம், திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றிலும் ஈரோடு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் திமுக கைப்பற்றியது.

இந்த தோல்வியைத் தொடர்ந்து, "எங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்ந்து உழைப்போம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து, கோவை மாவட்டத்துக்குக் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணியை பொறுப்பாளராக நியமித்தனர். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவருக்குப் பதிலாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கோவை மாவட்டத்துக்குள் செந்தில் பாலாஜி வந்த நாள் முதலாகவே ஒவ்வோர் வார்டிலும் மக்கள் குறைகளைக் கேட்பது, மனுக்களைப் பெறுவது என ஆர்வம் காட்டினார். உள்ளூரில் உள்ள சீனியர்கள் சிலர் உள்கட்சி மோதலை வெளிக்காட்டினாலும் அதனைப் பொருட்படுத்தாமல் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக, எஸ்.பி.வேலுமணியின் கோட்டையாகப் பார்க்கப்பட்ட கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திமுக மட்டும் தனியாக 73 இடங்களைப் பெற்றுள்ளது.

அதேபோல், திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் என கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இதனையடுத்து, மேயர், துணை மேயர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தலுக்கு இன்னும் எட்டு நாள்களே இருப்பதால் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதில் யார் யாருக்கு மேயராகும் வாய்ப்புள்ளது என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

அந்த வரிசையில் முதலில் கோவை மாநகராட்சியைப் பார்ப்போம்.

கோவை மாநகராட்சிக்கு யார்?

கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் திமுக கூட்டணி வென்றாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே மேயர் பதவி ஒதுக்கப்பட்டு வந்தது. இந்தமுறை மேயர் பதவி பெண்களுக்கானது என அறிவிக்கப்பட்டதில் இருந்தே திமுகவுக்குள் பந்தயம் தொடங்கிவிட்டது.

"இந்தமுறை மேயர் பதவியை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவே வைத்துக் கொள்ள வேண்டும்" என்ற கருத்தில் அக்கட்சியினர் உறுதியாக உள்ளனர். இதனை பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிப்படுத்தியிருந்தார்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 46 ஆவது வார்டில் வெற்றி பெற்ற மீனா லோகு, 52 ஆவது வார்டில் வெற்றி பெற்ற இலக்குமி இளஞ்செல்வி, 97 ஆவது வார்டில் வெற்றி பெற்ற நிவேதா சேனாதிபதி ஆகியோர், மேயர் பதவியை நோக்கி நகர்வதாகப் பேசப்பட்டு வருகிறது. இதில், நிவேதா சேனாதிபதி இளவயதுடையவராக இருப்பதால், திருவனந்தபுரத்தைப் போல ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீனா லோகு தோல்வியடைந்த பிறகு, கட்சியின் மகளிரணிக்குள் அவருக்கு எதிராக பூசல் கிளம்பியது. இதையடுத்து, அவரது கட்சிப் பதவியிலும் சிக்கல் ஏற்பட்டது. அவரும் மேயர் பதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

"மாநகராட்சி வார்டுகளில் வென்ற மகளிர் பலரும் தங்களுக்கு வேண்டிய லாபிகள் மூலம் பதவியைப் பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். 'இவர்தான் வருவார், அவர்தான் வருவார்' என்று கூறப்படுவதெல்லாம் வெறும் ஹேஷ்யங்கள்தான். செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்துக்குள் அவர் சாதிரீதியிலான அரசியலை முன்னெடுக்கவில்லை. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் அவர் பார்க்கிறார். அந்தவகையில், மேயர் தேர்விலும் தலைமையின் அணுகுமுறையில் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறோம்'' என்கின்றனர், கோவை மாவட்ட தி.மு.கவினர்.

பின்னலாடை நகரத்தில் என்ன நிலவரம்?

அடுத்ததாக, திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரையில் அங்குள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 19 வார்டுகளிலும் பாஜக மற்றும் சுயேச்சைகள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு மேயர் பதவியைப் பொறுத்தவரையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் பத்மநாபன், 49 ஆவது வார்டில் வென்ற தினேஷ்குமார், 35 ஆவது வார்டில் வென்ற செந்தூர் முத்து ஆகியோரில் ஒருவருக்கு தலைமை வாய்ப்பளிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அதேநேரம், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தசாமியும் மேயர் பதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

அதிலும், தனக்கு வேண்டிய நபர் ஒருவரை திருப்பூர் செல்வராஜ் எம்எல்ஏ முன்னிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் சாமிநாதனின் ஆதரவு பெற்ற கவுன்சிலர் எனப் பலரும் மேயர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்தமுறை மேயர் பதவியைப் பெறப் போவது சீனியரா... ஜூனியரா என்ற வாதமும் பின்னலாடை நகரத்தில் வலம் வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு மாநகராட்சியைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 44 வார்டுகளிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 3 வார்டுகளிலும் மதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இதில், 51 ஆவது வார்டில் போட்டியிட்ட விஜயலட்சுமி, போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இங்கு அதிமுக 6 இடங்களிலும் சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் 48 இடங்களில் திமுக கூட்டணி வென்று மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு மாவட்டம் முழுவதும் அமைச்சர் முத்துச்சாமியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி பெற்றுத் தந்துவிட வேண்டும் எனக் கட்சியின் சீனியர்களும் வரிந்து கட்டுகின்றனர்.

மாநராட்சி மேயர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால், ஈரோட்டில் 29 வது வார்டில் வெற்றி பெற்ற செல்லப்பொன்னி மனோகரனை மேயர் ஆக்குவதற்கு சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் கடந்த 2011-இல் நடைபெற்ற மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பதால் இந்தமுறை மேயர் ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்ததாக, மாநகர செயலாளர் சுப்பிரமணியனின் மனைவி நாகரத்தினம் என்பவர் 50 வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். 30 ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள கீர்த்தனா, மணிராசு கோகிலவாணி, மேனகா நடேசன் எனப் பலரும் மேயர் பதவியை எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இதில் மேயர் ரேஸில் உள்ள சிலர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இந்தமுறை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டால் தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் வலம் வருகின்றனர்.

மாங்கனி நகரில் யாருக்கு செல்வாக்கு?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 60 வார்டுகளில் 47 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. இதுதவிர, காங்கிரஸ் 2 இடங்களிலும் வி.சி.க ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு சேலம், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதன்பிறகு 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி பதவியை தி.மு.க கைப்பற்றியது.

அப்போது மேயராக சூடாமணி பொறுப்பேற்றார். தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவை சேர்ந்த சுரேஷ்குமார் மேயரானார்.

அந்நேரம், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மேயர் பதவியில் இருந்து விலகியதால் புதிய மேயராக சவுண்டப்பன் பொறுப்பேற்றார். பின்னர், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுகவை சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி மேயராகப் பொறுப்பேற்றார். இறுதியாக, 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சவுண்டப்பன் மேயராக பதவியேற்றார்.

இந்தமுறை திமுக வசம் மாநகராட்சி வந்துள்ளதால், மாநகர செயலாளரான ஜெயக்குமார், மேயர் பதவி தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. தொடர்ந்து, அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அசோகன், 43வது வார்டில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் குணசேகரன் ஆகியோரும் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமாக மேயர் பதவியை நோக்கி காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. இதில் யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே மாங்கனி நகரில் யாருக்கு உண்மையான செல்வாக்கு என்பது தெரிந்துவிடும் எனவும் அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

ஓசூரின் முதல் மேயர் யார்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சியாக இருந்த ஓசூர், 2019 ஆம் ஆண்டு 45 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நடந்த முதல் தேர்தலில் 21 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 16 வார்டுகளிலும் பாஜக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மைக்கு 23 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வென்ற ஓர் இடம் மற்றும் சுயேச்சைகள் 3 பேர் என திமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, மேயர் பதவியை இலக்காக வைத்து ஓசூர் திமுக நகர செயலாளரான சத்யா முயற்சி செய்து வருகிறார். இவர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த தேர்தலில் சீட் கிடைக்காததால் இந்தமுறை மேயர் பதவி தனக்குக் கிடைக்கலாம் என நம்புவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஓசூர் நகராட்சியில் முன்னாள் துணைத் தலைவராக இருந்த மாதேஸ்வரன், 7 ஆவது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்தய்யா ஆகியோரும் மேயர் கனவை நோக்கிக் காத்துள்ளனர். இதில் அதிமுக பக்கம் 16 கவுன்சிலர்கள் இருப்பதால் திமுக உள்கட்சி மோதலில் தங்களுக்கு ஆதரவு கிடைத்தால் அதிமுகவின் ஜெயப்பிரகாஷ், பால் நாராயணன் ஆகியோருக்கு மேயர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வோர் மாநகராட்சியிலும் மேயர் நாற்காலி கனவுகளில் தி.மு.கவினர் மூழ்கிக் கிடக்க, ` அறிவாலயத்தின் கணக்கு என்ன?' என்ற கேள்வியும் உள்ளூர் தி.மு.கவினர் மத்தியில் வலம் வருகிறது.

பிபிசி தமிழுக்காக கோவையில் இருந்து மோகன், சேலத்தில் இருந்து ஏ.எம். சுதாகர் ஆகியோர் அளித்த உள்ளீடுகளுடன் ஆ. விஜயானந்த் எழுதி கட்டுரை இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: