அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.110 கோடி முடக்கம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பட மூலாதாரம், S.P. VELUMANI
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாகச் சொல்லப்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.110 கோடி ரூபாயை சிறப்பு நீதிமன்றம் முடக்கியுள்ளது. ` இது தொடக்கம்தான். ஊழல் செய்து சேர்த்த சொத்துகளை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பது அடுத்தகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்கிறது அறப்போர் இயக்கம்.
ரூ.811 கோடிக்கு ஊழலா?
அ.தி.மு.கவின் 2016-2021 ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்தியது. குறிப்பாக, சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், கோயம்புத்தூர், சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர் அன்பரசனின் இல்லம், கே.சி.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், இந்த நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர் ஆகியோரின் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகள் என சுமார் 60 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
7 பிரிவுகளில் வழக்கு
இதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் என 17 பேர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 120பி, 420, 409 ஐபிசி, 109 உள்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியில் 462.02 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களையும் கோவை மாநகராட்சிப் பணிகளுக்கான 346.81 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எஸ்.பி.வேலுமணி பிரித்துக் கொடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட 17 பேர் தொடர்புடைய வங்கி விவரங்கள், முதலீடுகள் ஆகியவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரித்து வந்தது. இதில், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானதாகச் சொல்லப்படும் ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட், கே.சி.பி இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியை முடக்குமாறு கடந்த 15 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனுத்தாக்கல் செய்தது.
ரூ.110 கோடி முடக்கம் ஏன்?
இந்த நிரந்தர வைப்பு நிதியானது 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்டதாகவும் இது மாநகராட்சிப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பணமாக உள்ளதாக சந்தேகிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், ரூ.110 கோடி நிரந்தர வைப்பு நிதியை முடக்குவதற்கு உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், DVAC
இந்த உத்தரவு அ.தி.மு.க தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை முடிவடைந்து ஐந்து மாதம் ஆகிவிட்டதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் கோவை அ.தி.மு.கவினர் இயங்கி வந்த நேரத்தில் இப்படியொரு நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அடுத்த நடவடிக்கை என்ன?
இதுதொடர்பாக, எஸ்.பி.வேலுமணி மீது புகார் கொடுத்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, `` எஸ்.பி.வேலுமணி மீது கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அறப்போர் இயக்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளின்படி சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த சொத்துகளை அவர்கள் யாருக்காவது விற்றுவிட்டால், அதனை மீட்க முடியாது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் தண்டனைக்கு உள்ளாக்குவது மட்டும் முக்கியம் அல்ல. ஊழல் செய்த பணத்தை அரசு கஜானாவுக்குக் கொண்டு வருவது மிக முக்கியமானது. அதனையொட்டி அவர்கள் வைத்திருந்த சொத்துகளை தற்காலிமாக முடக்கியுள்ளனர்'' என்கிறார்.
`` இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றம் நிரூபிக்கப்படும்போது அந்தப் பணம் அரசு கஜானாவுக்கு செல்லும். இதில், நிரந்தர வைப்புத் தொகையாக கே.சி.பி இன்ஃப்ரா நிறுவனம் 109 கோடியும் ஆலம் டைமண்ட்ஸ் நிறுவனம் 1 கோடி ரூபாயையும் வைத்திருந்தது. இந்தப் பணம் சந்திரபிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்குச் சொந்தமானது. ரெய்டு நடந்த பிறகு அவர்களின் வங்கிக் கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆராய்ந்து இதனைக் கண்டறிந்தது'' என்கிறார் ஜெயராம் வெங்கடேஷ்.
வேலுமணியின் பினாமிகளா?
மேலும், ``இது விசாரணையின் ஓர் அங்கம். அடுத்ததாக அவர்களின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும். சந்திரபிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் எஸ்.பி.வேலுமணியின் பினாமிகளாக இயங்கி வந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஊழல்கள் எல்லாம் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக எங்கள் மீது கொடுமையான அடக்குமுறைகளை காவல்துறை உயர் அதிகாரிகளை வைத்து வேலுமணி ஏவினார். இந்த வழக்கில் இருந்து நாங்கள் பின்வாங்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்தது. தற்போது சொத்துகள் முடக்கப்பட்டதை முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன்'' என்கிறார்.

பட மூலாதாரம், SP VELUMANI
அ.தி.மு.க சொல்வது என்ன?
அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவர்கள் இருவரும் வேலுமணியின் உறவினர்கள் அல்ல. அவர்கள் நண்பர்கள்தான். அவர்கள் தனியாக தொழில் செய்து வருகின்றனர். அதற்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பணம் முடக்கப்பட்டதையும் வேலுமணியையும் தொடர்புபடுத்தித் தகவல் வெளியிடுகின்றனர். அடிப்படையில் இது தவறானது'' என்கிறார்.
மேலும், `` அரசாங்கம் ஒப்பந்தம் விடும்போது அதில் நான்கு பேர் பங்கேற்கின்றனர். அதில் ஒருவர் குறைவான தொகையைக் குறிப்பிட்டால் அவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக நடக்கும் டெண்டர் விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி எங்கே வந்தார்?'' என்கிறார்.

பினாமிக்கான ஆதாரம் என்ன?
`` எஸ்.பி.வேலுமணியின் பினாமிகளாக சந்திரபிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இருந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்துகிறதே?'' என்றோம். `` அவர்கள் பினாமிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? பணத்தை அவர்களிடம் வேலுமணி கொடுத்ததற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? அவர்கள் இருவரும் தங்களின் தொழில்களுக்கு முறையாக வருமான வரி கட்டுகின்றனர். அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே அவர்கள் தொழில் செய்து வருகின்றனர். அதிலும், நட்புரீதியாக அவர்கள் வேலுமணிக்குப் பழக்கம் ஆகியுள்ளனர். அவ்வளவுதான்'' என்கிறார்.

பட மூலாதாரம், ARAPPOR IYAKKAM JAYARAMAN
`` அறப்போர் இயக்கமும் வேலுமணியும் எதிரிகளாகிவிட்டனர். எந்தெந்த நேரத்தில் எல்லாம் அவரது பெயரைக் கெடுக்க வேண்டுமோ அதைச் செய்து வருகின்றனர். புலி வாலைப் பிடித்த அறப்போர் இயக்கம், தனது செயலை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறது. நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோதும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அப்போது அவர்கள் எதுவும் பேசவில்லை. இந்த வழக்கில் வேலுமணி குற்றம் சுமத்தப்பட்டவர்தான். குற்றவாளி அல்ல. இந்த வழக்கில் இருந்து நாங்கள் வெளியே வருவோம்'' என்கிறார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்




























