இந்திய ஆட்சி பணி விதிகளை திருத்துவதால் என்ன நடக்கும்? இந்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு ஏன்?

ஸ்டாலின் - மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டாலின் - மோதி (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

இந்திய ஆட்சிப் பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'நிர்வாக சீர்திருத்தம் என இந்திய அரசு குறிப்பிடுகிறது. மாநில அரசுக்குள்ள தன்னாட்சி அதிகாரத்தை இது குலைத்துவிடும்' என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்தால் என்ன நடக்கும்?

மாநில அரசுகளுக்கு சிக்கலா?

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிப் பணி அதிகாரிகள், இந்திய அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப மத்தியப் பணிகளுக்குச் செல்வது வழக்கம். அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கப்படும் காலகட்டங்களிலும் இந்திய அரசின் பணிகளுக்குச் செல்வதற்கு அவர்கள் விருப்பம் தெரிவிப்பது வழக்கம். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல், மாநில அரசின் ஒப்புதல் எனப் பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

இவ்வாறு உள்ள நடைமுறையை மாற்றி 1954 ஆம் ஆண்டு ஆட்சிப் பணி விதி 6ல் புதிய திருத்தம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அதாவது, மாநில அரசின் அனுமதியில்லாமல் தேவைப்படும் அதிகாரிகளை மத்திய அரசே எடுத்துக் கொள்வதற்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு கருத்து கேட்டது. 'இதனால் நிர்வாகரீதியாக மாநில அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஊறு ஏற்படும்' என பல அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ` ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஓர் இணக்கமான சூழ்நிலைக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின்வசம் அதிகாரக் குவிப்புக்கு இது வழிவகுக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், `ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஒன்றிய குரூப்-I நிலை அலுவலர்கள் மூலமாகவும் வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்யும் (Lateral entry) முறை மூலமாகவும் ஒன்றிய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது' என்கிறார் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், ` மக்களுக்குத் தேவையான பல்வேறு ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருவதையும், தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்படுத்திவிடும். ஒன்றிய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறை ஒன்றிய அரசு பணிக்குச் செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கனவே குறைத்துள்ளது.

அதிகாரிகளின் ஆர்வத்தைக் குறைக்குமா?

இந்த புதிய சட்டத் திருத்தமானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதனை சேதமடையச் செய்துவிடும். இந்திய ஆட்சிப் பணி இதுவரை தேசத்துக்கு சிறப்பான சேவையாற்றி ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்கிறது.

தேர்வு செய்யப்பட்ட பிறகு, மசூரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் பயிற்சி பெறும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்வு செய்யப்பட்ட பிறகு, மசூரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் பயிற்சி பெறும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள். கோப்புப்படம்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றமுடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும்' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விதிகளைத் திருத்தினால் என்ன நடக்கும்?

``ஆட்சிப் பணி விதிகளைத் திருத்துவதால் என்ன நடக்கும்?'' என மேற்குவங்க மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற கோ.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

``ஆட்சிப் பணி விதிமுறைகளைத் திருத்துவதற்கு மத்திய அரசு ஒரு காரணத்தைச் சொல்கிறது. அதில், `ஒவ்வொரு மாநிலமும் தன் கேடரில் உள்ள 40 விழுக்காடு அதிகாரிகளை அனுப்பாததால், எங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் 40 விழுக்காட்டைப் பெறுவதற்கு யாரெல்லாம் தேவைப்படுகிறார்களோ, அவர்களுக்கு நாங்களே தெரிவித்துவிடுவோம்' என்கின்றது. அதாவது, `யாரை அழைக்க வேண்டும் என நினைக்கிறோமோ அவர்களை அழைத்துக் கொள்வோம்' என்கிறது.

தற்போதுள்ள நடைமுறையில் மத்திய அரசுப் பணிக்காக ஒவ்வோர் ஆண்டும் மாநில அரசு தனது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பும். அதில், `மத்திய அரசுப் பணிக்குச் செல்வதற்கு யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள்?' எனக் கேட்பார்கள். இதன்பிறகு விருப்பம் தெரிவிக்கின்ற அதிகாரிகளின் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை, அவரின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கவனிப்பார்கள். இதன்பிறகு விஜிலென்ஸ் ஒப்புதல் வந்ததும் அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார்கள். மாநில அரசு அனுப்புகின்ற பட்டியலில் இருந்து எவ்வளவு பேரை வேண்டுமானாலும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம்.

இப்படி இன்று உள்ள நடைமுறையில், சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல், மாநில அரசின் ஒப்புதல், மத்திய அரசின் ஏற்பு என சம்பந்தப்பட்ட அனைவரின் ஒப்புதல்கள் உள்ளன.

ஆனால் இவர்கள் கொண்டு வரும் திருத்தத்தில் மாநில அரசு மற்றும் அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், `எங்களுக்குத் துணைச் செயலர்கள் தேவைப்படுவதால் உங்கள் மாநிலத்தில் இருந்து சில அதிகாரிகளை எடுத்துக் கொள்கிறோம்' என்று மட்டும் கூறிவிடுவார்கள். சில அதிகாரிகளுக்குப் பெற்றோரின் உடல்நிலை, குழந்தைகளின் கல்வி எனப் பல பிரச்னைகள் இருக்கலாம். . இவற்றையோ, மாநில அரசின் ஒப்புதலையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவதற்கு இந்தத் திருத்தம் வழிவகுக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது'' என்கிறார்.

மசூரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்விக் கழகம். இங்குதான் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மசூரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்விக் கழகம். இங்குதான் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

`` அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகளைப் பற்றிப் பேசவில்லை. ஓர் அதிகாரி ஒரு நல்ல நிர்வாகியாக இருக்கும்போது, அவரது செயல்பாடுகள் மாநிலத்தில் ஆளும்கட்சியின் வாக்குவங்கியை அதிகரிக்கும். பா.ஜ.க அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள மக்கள் ஆதரவு அதிகாரிகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளவும் இந்தத் திருத்தத்தின் இன்னொரு பிரிவு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது'' என்கிறார் பாலச்சந்திரன்.

தொடர்ந்து பேசுகையில், `` மத்திய அரசுக்கு என ரயில்வே, வருமான வரித்துறை, , தகவல் ஒளிபரப்பு, வெளியுறவுத்துறை எனப் பல துறைகள் உள்ளன. ஆட்சிப் பணி, காவல் பணி என்பவற்றிற்கு அவர்களுக்கு என்று ஒரு பிரிவு அதிகாரிகள் கிடையாது. இவை அனைத்துமே மாநிலத்தில் இருந்துதான் செல்ல வேண்டும் என்ற அமைப்பு உள்ளது. இவ்வாறு கொண்டு வந்தததற்கு என்ன காரணம் என்றால், வளர்ச்சி உட்பட எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் இந்தியாவின் பரந்துபட்ட மாநிலங்களில் பணியாற்றிய அனுபவமிக்க அதிகாரிகள் ஒன்றிய அரசில் சென்று வேலை பார்ப்பதன் காரணமாய் அத்தகைய திட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துவதாக உருவாக்கலாம் என்பதுதான்.

மாநிலத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியப் பணிக்கு வருவதால், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. மத்திய தலைமை செயலகத்தைக் கையாள்வதற்கு சி.எஸ்.எஸ் எனப்படும் சென்ட்ரல் செக்ரடேரியேட் சர்வீஸ் என்ற ஒன்று உள்ளது. அது கோப்புகளைக் கையாளும் பதவி. அதேநேரம், கொள்கை முடிவெடுப்பது, அதனைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் நிர்வாகத் தலைமை வகிப்பவர்கள் மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் உயர் அதிகாரிகள்தான்.

1997ம் ஆண்டு ஜபல்பூரில் மத்திய தீர்ப்பாயத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், அகில இந்தியப் பணிகளில் மொத்த எண்ணிக்கையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் மூன்றில் ஒருவர் இருக்க வேண்டும் என்பது விதி. உதாரணமாக, அதிகாரிகள் எண்ணிக்கை 100 எனில், அதில் 67 பேர் நேரடியாகப் பணிக்கு வந்தவர்களாகவும் 33 பேர் பதவி உயர்வில் வந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

கேடர் எண்ணிக்கை 100 பேர் என்றால், அது தவிர, மத்தியப் பிரிவுக்கு 40 பேர் தரப்படுகிறார்கள், இது தவிர விடுப்புப் பணியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் இது போன்றவற்றை சேர்த்தால், மொத்த அதிகாரிகள் எண்ணிக்கை 150 ஆக இருக்கும். ஆனால், 100 பேரை மட்டும் கணக்கில் அதில் 33 சதவீதம் பதவி உயர்வுக்குத் தரப்படுகிறது. ஆனால், 150 பேரையும் கணக்கில் அதில் 3ல் ஒரு பங்கு பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது'' என்கிறார். இதன் காரணமாக, ஐந்தாண்டுகளாக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, பதவி உயர்வு பெறுவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

குடிமைப் பணிகள் தினம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடிமைப் பணிகள் தின விழா - 2007ல் நடந்த நிகழ்வு.

`` பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு அனுபவங்கள் அதிகம். அந்த அனுபவம் அரசுக்குத் தேவை. நேரடி அதிகாரிகளுக்கு இளமை வேகம் இருக்கும். இரண்டும் நமக்குத் தேவை. தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுவிட்டது. பொதுப்பிரிவில் 30 வயது வரையிலும், ஓ.பி.சி பிரிவில் 33 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவில் 35 வயது வரையிலும் தேர்வினை எழுதலாம் எனக் கொண்டு வந்துள்ளனர்.

இதில் கடைசி வாய்ப்பில் பெரும்பாலான நபர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஏ.எஸ் ஆகும்போது 31/34/36 வயது என்றால், அவர்களுக்கான பணிக்காலமும் குறைவாக இருக்கும். இதனால் தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தச் சிக்கலை மத்திய, மாநில அரசுகள் சரியான நேரத்தில் கணிக்கத் தவறியதாகத் தோன்றுகிறது.

தற்போது 1,500 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை உள்ளதாகப் புள்ளிவிபரம் உள்ளது. இதன் காரணமாக, தனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள மத்திய அரசு குறுக்கு வழியைத் தேர்வு செய்கிறது. இதனை நிர்வாக சீர்திருத்தம் என்பது தவறானது. இது கூட்டாட்சியை சிதைத்துவிடும். மாநில அரசுக்கு என அரசியலமைப்பு ரீதியாக தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அதற்கு மரியாதை கொடுத்தால்தான் நாட்டைக் கட்டி ஆள முடியும். இந்தத் திருத்தங்கள் அதனைக் குலைக்கின்றன'' என்கிறார் பாலச்சந்திரன்.

அரசியலுக்காக பழிவாங்கப்படும் அதிகாரிகள்

இதையடுத்து, பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனவேல், `` அகில இந்திய ஆட்சிப் பணியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொழி, கலாசாரம் உள்ளது. இதனால் வெளியூரை சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களுக்குப் பணிக்குச் செல்வார்கள். அந்தந்த மாநிலங்களில் உள்ளூர் அதிகாரிகள் குறைவாக இருப்பார்கள். 25 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மாநிலத்தில் வேறு மாநில அதிகாரி பணியில் இருப்பதால் இங்குள்ள சூழலைப் புரிந்து கொண்டு பணி செய்வார்.

இதில் குறிப்பிட்ட சிலரை மத்திய அரசுப் பணிக்கு எடுக்கலாம் என்ற விதி உள்ளது. துணைச் செயலர், இணைச் செயலர் பிரிவுகளுக்கு தேர்வு செய்யும்போது பத்து பேரில் நான்கு பேருக்குக் கிடைக்கும். அவர்களுக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது, சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் விண்ணப்பித்தபோது, மாநில அரசு பதில் சொல்லவில்லை. அவரை மறுநாளே இடைநீக்கம் செய்தனர். இதனால் அவரது பணிக்காலத்தில் சிரமம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் சில நேரங்களில் நடக்கின்றன.

இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து 3 அதிகாரிகளை மத்திய அரசு கேட்டபோதும், மாநில அரசு மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கில் மாநில அரசின் முடிவே சரியானது என தீர்ப்பு வந்தது. 40 வருடங்களுக்கு முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை. தாங்கள் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்க வேண்டும் எனக் கூறி அரசியல்வாதிகளும் பந்தாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். நினைத்தால் தலைமைச் செயலரையே இடைநீக்கம் செய்கின்ற சம்பவங்களும் நடந்தன. தற்போது புதிய திருத்தத்தின் மூலம், ` நாங்கள் கேட்கின்ற அதிகாரிகளைக் கொடுக்க வேண்டும்' என்பதைக் கட்டாயமாக்குகின்றனர். இது தேவையற்றது'' என்கிறார்.

தடங்கல்கள் என்னென்ன?

ஆட்சிப் பணி விதிகளை திருத்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து தமிழ்நாடு பா.ஜ.க ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``யு.பி.எஸ்.சி பணியில் உள்ளவர்கள் மத்திய அரசுப் பணியிலும் வேலை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பணியில் உள்ளவர்களில் பிகார், அரியானா, கேரளா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இங்கு மிகச் சிறந்த அதிகாரிகள் என இவர்கள் குறிப்பிடும் யாருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. வடஇந்திய அதிகாரிகளைத்தான் சொல்கின்றனர்'' என்கிறார்.

தேசிய சின்னம்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து பேசுகையில், `` மத்திய அரசின் ஏராளமான திட்டங்கள் கோஆபரேட்டிவ், ரேசன் கடைகள் ஆகியவற்றுக்கு வர உள்ளன. அதைப் பற்றி நன்கு தெரிந்த அதிகாரிகள் மத்தியில் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும். தவிர, உள்ளாட்சி அமைப்புகள் வரையில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இங்குள்ள அதிகாரிகள் அங்கு இருப்பதால்தான், `தூய்மை இந்தியா திட்டத்தில் மதுரை நன்றாக இருக்கிறது, சிவகங்கை பரவாயில்லை, காரைக்குடி சற்று குறைவாக உள்ளது' என அறிவுரை கூற முடிகிறது. முன்பெல்லாம் அதிகாரிகள் வேண்டும் எனக் கேட்டு அந்தக் கோப்புகளின் பேரில் முடிவுகளை எடுப்பதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிடும். அப்படிப்பட்ட தடங்கல் இல்லாமல் வேகமாகப் பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகள் தேவை.

ஒரு திட்டத்துக்கான ஆயுள்காலம் என்பது 3 ஆண்டுகள்தான். இதற்காக ஒரு அதிகாரிக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருப்பது என்பதெல்லாம் இயலாத காரியம். மாநிலத்தில் என்னதான் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும் அமைச்சர்தான் கட்டுப்படுத்துகிறார். இதனால் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இந்தியா முழுக்க 1,500 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வுக் கூட்டத்துக்கு வராமல் இருந்ததற்கு அவரை அழைத்து அறிவுறுத்தல்களை மட்டும் மத்திய அரசு வழங்கியது. இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் பழிவாங்கப்பட்டிருப்பார்'' என்கிறார்.

மேலும், `` இங்குள்ள பத்து சதவிகித அலுவலர்கள், மத்தியில் உள்ள அலுவலகங்களில் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும். எப்போதெல்லாம் அரசியல்ரீதியாக அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்களோ, அப்போதுதான் மத்திய அரசுப் பணிக்குச் செல்ல விருப்பப்படுவார்கள். இதற்கு கடந்த கால உதாரணங்கள் உள்ளன. சுழற்சி முறையில் அதிகாரிகள் மாற்றப்படுவதை சர்ச்சையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதில் உள்ள நன்மைகளை மட்டும் ஆராய வேண்டும்'' என்கிறார் சி.டி.நிர்மல்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: