தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தக் கோரும் தலைவர்கள்

ஸ்டாலின்
படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு விவரங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்பதற்கான கூட்டம் இன்று தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., திருணமூல் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்தப் பிரதிநிதிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தனர்.

"தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். பாதுகாப்பிற்கென துணை ராணுவப் படையினரை வரவழைக்க வேண்டும். கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்ய வேண்டும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். மேலும், தற்போது பத்து மணிக்கு மேல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 10 மணிக்குத்தான் பிரச்சாரம் முடிவடைகிறது. பிரச்சாரம் முடிவடைந்த பிறகு, வேட்பாளர்களும் அவருடன் இருப்பவர்களும் வீடு திரும்போது பிரச்சனை ஏதும் இருக்கக்கூடாது. ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினம் பிரச்சாரம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும் சொல்லியிருக்கிறோம்" என அ.தி.மு.கவின் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

தி.மு.கவைப் பொறுத்தவரை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டுமென்று கூறியதாக அக்கட்சியின் சார்பில் பங்கேற்ற கிரிராஜன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துவது, காலை 7 மணி முதல் மாலை ஆறு மணிவரை தேர்தலை நடத்துவது, கொரோனா நோயாளிகள் வாக்குபதிவு செய்வதற்கென தனி நேரம் ஒதுக்குவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிவித்தது.

"பா.ஜ.கவைப் பொறுத்தவரை ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டுமென கூறியிருக்கிறோம். தேர்தலின்போது முறைகேடுகள் நடக்காமல் இருக்க மத்தியப் பாதுகாப்புப் படை, துணை ராணுவப் படை ஆகியவற்றின் உதவியைப் பெற வேண்டும். தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் கடந்த முறை பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த அனுமதிகளை ஒரே இடத்தில் வழங்க வேண்டும். தேர்தல் நடக்கும் தேதியை ஒட்டி திடீரென தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது. தக்க கால அவகாசம் அளித்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். எல்லா வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவிக்களை பொறுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு என தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் பெரிதாக யாரும் வரவில்லை. தேர்தல் நடைமுறையே அந்த நேரம் தேங்கிப்போகிறது. இது குறித்தும் மனதில்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கோரியிருக்கிறோம்" என பா.ஜ.கவின் கரு. நாகராஜன் தெரிவித்தார்.

தேர்தல்

"பெண்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்கள்தான் அதிகாரம் செலுத்த வேண்டும். தலித் மக்கள் வெற்றிபெரும் இடங்களில் அவர்கள் செயல்படுவதில் சிரமம் இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும் போன்ற விஷயங்களைச் சுட்டிக்காட்டினோம். மேலும், தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் சி.பி.ஐயின் வீரபாண்டியன்.

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள் நேரடியாக மக்களால் தேர்வுசெய்யப்பட்டால்தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிட்ட சி.பி.எம்., இந்த முறை இந்தப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்தான் நடக்கவிருக்கிறது என்பதால், அவை முறைகேடுகளோ, லஞ்சமோ இன்றி நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கோரியது. மேலும், கடந்த முறை வாக்கு எண்ணிக்கை மிகக் குறுகலான இடத்தில் நடந்ததைச் சுட்டிக்காட்டிய அக்கட்சி, இந்த முறை விசாலமான இடத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டுமெனக் கோரியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடித்துவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 21 அல்லது 22ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாய்மொழியாகக் கோரினார். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், அது குறித்து முடிவெடுக்கப்படுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: