எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் சேலம் மாவட்டத்தில் மோசடி புகாரில் கைது

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

குறிப்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 17 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் தனக்கு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டால் பணத்தையும் அதையும் கொடுக்கவில்லை என தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த அக்டோபர் 26ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு, துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையில் மணியை பிடிக்க தனிப்படை அமைத்தது.

மணி, இபிஎஸ்ஸின் முன்னாள் உதவியாளர்
படக்குறிப்பு, மணி, இபிஎஸ்ஸின் முன்னாள் உதவியாளர்

இதனிடையே மணி தலைமறைவாகி முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார், ஆனால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. இந்நிலையில் தனிப்படை போலீசார் மணியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மணியை அவரது சொந்த ஊரான ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நடுப்பட்டியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது "வேலை வாங்கித் தருவதாக நடந்த பண மோசடி அப்போதைய முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை . எனவே இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :