'வலிமை' சிமென்ட்: தமிழகத்தில் இது யாருக்கு போட்டி? - 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், TNDIPR
கட்டுமானத்துறையில் சிமென்ட் நிறுவனங்களின் ஏகபோகத்தை தவிர்ப்பதாகக் கூறி தமிழ்நாட்டில் மாநில அரசே மலிவு விலையில் 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமென்ட் விற்பனையை இன்று (நவம்பர் 16) தொடங்கியுள்ளது.
இந்த சிமென்ட் அறிமுகத்தால் யாருக்கு என்ன நன்மை? இது பற்றி நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. வலிமை சிமென்ட், TANCEM என்ற மாநில பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமென்ட் கழகத்தால் தயாரிக்கப்படுகிறது. வலியதோர் உலகம் செய்வோம் என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு இந்த சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த டேன்செம் நிறுவனம் ஏற்கெனவே அரசு சிமென்ட் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் விற்கும் சிமென்டை விட குறைவான விலையில் சிமென்ட் தயாரித்து விற்று வருகிறது.
2. வலிமை சிமென்ட் இரு வேறு தரத்தின் அடிப்படையில், திறந்தவெளி சந்தையில் ரூ 350, ரூ. 360 என்ற இரு விலையில் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிமென்ட் விலை 4.7 சதவீதம் உயர்ந்தது. நிலக்கரி பற்றாக்குறை, நிலக்கரி இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதன் போக்குவரத்து செலவினம் காரணமாக சிமென்ட் விலை உயர்ந்ததாக விற்பனை நிறுவனங்கள் கூறின.
3. வலிமை சிமென்ட் தயாரிப்பின் திட்டப்படி தொடக்கத்தில் மாதந்தோறும் 30 ஆயிரம் டன் அளவுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்படும் அவை சந்தை சில்லறை விலையை குறைவான விலைக்கு விற்கப்படும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள அரசு சிமென்ட் மாதந்தோறும் வெளிச்சந்தையில் 90 ஆயிரம் டன் சிமென்டை விற்பனை செய்து வருகிறது.

பட மூலாதாரம், TANCEM
4. சிமென்ட் தயாரிப்புத்துறையில் குறிப்பிட்ட சில தினியார் நிறுவனங்களே உயர்தர தயாரிப்பை விற்பதில் ஏகபோகம் செலுத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சிமென்ட் மூட்டை ரூ. 470 முதல் ரூ. 490 வரை விற்கப்பட்டது. அரசு தலையிட்ட பிறகு இந்த விலை ரூ. 440 முதல் ரூ. 450 ஆக குறைந்தது.

பட மூலாதாரம், TANCEM
5. தமிழக பொதுத்துறை நிறுவனமான டேன்செம் சிமென்ட் ஆலைகள் அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் உள்ளன. அவற்றின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 8.13 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிமென்ட் மீதான தேவை அதிகரிப்பதால், தயாரிப்பு அளவை 15 லட்சம் முதல் 17 லட்சம் டன் வரை அதிகரிக்க டேன்செம் திட்டமிட்டுள்ளது.
யாரெல்லாம் சிமென்ட் வாங்கலாம்?
6. தனி நபர் ஒருவர், அவரது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கும் மிகாமல் இருந்தால் அவர் தனது புதிய வீடு கட்டுமான பணிக்காக 750 மூட்டைகள் வரை அரசு தயாரிப்பு சிமென்ட் மூட்டைகளை வாங்கலாம். இந்த சிமென்ட் மூட்டைகளை ஆன்லைன் மூலமாக மூட்டை ஒன்றுக்கு ரூ. 216 செலுத்தி வாங்க முடியும்.
7. அரசு தயாரிப்பு சிமென்ட் வாங்க வேண்டுமானால், தான் வீடு கட்டுமான பணிக்காக சிமென்ட் மூட்டை வாங்குகிறேன் என்பதை அத்தாட்சி செய்யும் உள்ளூர் கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரின் சான்றிதழ் அல்லது கடிதத்தை ஆன்லைன் ஆர்டர் செய்யும்போது பதிவேற்ற வேண்டும்.

பட மூலாதாரம், TANCEM
8. தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் என்ற பெயரில் மலிவு விலை சிமென்டை டேன்செம் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இப்போது அதன் நிலை தெளிவற்று உள்ளது.
9. அரசு தயாரிப்பு சிமென்ட் மூட்டைகளின் விலை குறைந்து விற்கப்படுவதால், வெளிச்சந்தையில் தனியார் சிமென்ட் நிறுவனங்களும் அவற்றின் விற்பனை விலையை குறைக்கலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
10. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதன் இணையதளத்தில் பதிவு செய்துள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட 26 அங்கீகாரம் பெற்ற சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
விலை அதிகம் - முறையிடும் வியாபாரிகள்
ஆனால், அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த சிமென்டின் விலை மிக அதிகம் என்கிறார்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள்.
"அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் வலிமை சிமென்டின் விலை 350 - 365 என விற்கிறார்கள். இந்த விலை மிக அதிகம். காரணம், ஆந்திராவைச் சேர்ந்த பென்னா சிமின்ட் மொத்தமாக வாங்கினால் இப்போது 360 ரூபாய்க்கு கிடைக்கிறது. சில்லறை விலையில் மூட்டை 375 ரூபாய்க்கு கடைக்கிறது. அப்படியிருக்கும்போது மாநில அரசின் சிமின்ட்டிற்கு இந்த விலை மிக அதிகம். முந்தைய ஆட்சியில் அம்மா சிமின்ட் என்ற பெயரில் 230 ரூபாய்க்குத்தான் விற்றார்கள்.
ஆகவே, அரசு சிமின்ட் விற்கும்போது விலை 300க்கு கீழே இருந்தால்தான் சாதாரண பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்தது 1,000 சதுர அடிக்குக் கீழே கட்டடம் கட்டுபவர்களுக்காவது சலுகை விலையில் இதனை அளிக்க வேண்டும். வலிமை சிமின்ட் வரவேற்கத்தக்கது. ஆனால், விலையைக் குறைக்க வேண்டும்" என்கிறார் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். ராமபிரபு.
பிற செய்திகள்:
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















