மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசன்: தாமதமாக அங்கீகரிக்கப்படும் பாஜக மூத்த தலைவரின் பயணம்

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழ்நாடு பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ` கடைசி ஆனாலும் காலதாமதம் ஆனாலும் கடுமையான உழைப்பு கௌரவிக்கப்பட்டிருக்கிறது' என அவரது நியமனத்தை டிவிட்டர் பதிவின் மூலம் சிலாகிக்கிறார், பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

தமிழ்நாடு அரசியலில் இல.கணேசனின் பங்களிப்பு என்ன?

வருவாய் ஆய்வாளர் டு ஆர்.எஸ்.எஸ்

தமிழ்நாடு அரசில் வருவாய் ஆய்வாளர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகர், மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், ராஜ்ய சபா உறுப்பினர் என இல.கணேசன் வகிக்காத பதவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பா.ஜ.கவையும் தாமரை சின்னத்தையும் தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றதன் மூலம் முப்பதாண்டுகால உழைப்புக்கு சொந்தக்காரராக பார்க்கப்படுகிறார்.

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக, 1970 ஆம் ஆண்டு வருவாய் ஆய்வாளர் பணியை உதறிவிட்டு முழுநேர பிரசாரகராக வலம் வந்தார். இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு கவிஞராக இல.கணேசன் எழுதிய பாடல்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் எதிரொலித்ததாக பா.ஜ.கவினர் தெரிவிக்கின்றனர்.

1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இல.கணேசன் நியமிக்கப்பட்டதில் இருந்தே அவரது அரசியல் வாழ்வு தொடங்குகிறது. அப்போது தமிழ்நாடு பா.ஜ.கவில் பதவியில் இருந்தவர்களும் கணேசனின் வருகையை பெரிதாக ரசிக்கவில்லை. இதனை பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளாமான இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார்.

பா.ஜ.கவில் ஆளுமையுள்ள தலைவராக இருந்தாலும் தேர்தல் அரசியலில் எந்த வெற்றியையும் இல.கணேசன் பெற்றதில்லை. 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே தழுவினார். 75 வயதைக் கடந்தவர்களுக்கு பா.ஜ.கவில் பதவி மறுக்கப்பட்டதால், பெரிய பதவிகள் எதுவும் இல.கணேசனை தேடி வந்ததில்லை.

காந்தி படம் போட்ட நேரு பணம்

ஒரு கட்டத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பதவியும் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது. ஒவ்வொரு தேர்தலின்போதும், தனித்து நின்றாலும் கூட்டணியாக இருந்தாலும் தங்களது வேட்பாளர்களின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் இல.கணேசன் சுற்றுப்பயணம் செல்வார். ஒரேநாளில் பல தொகுதிகளில் பம்பரமாக வலம் வருவார். 2011 தேர்தலின்போது திருச்சியில் கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பிடிபட்டபோது, `இது யாருடைய பணம்?' என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதில் அளித்த இல.கணேசன், ` காந்தி படம் போட்ட நேரு பணம்' என நகைச்சுவையாக பதில் அளித்தார். யார் தொலைபேசியில் அழைத்தாலும், `வணக்கம் கணேசன் பேசுகிறேன்' என அழகான உச்சரிப்புடன்தான் தொடங்குவார்.

`` தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச்செயலாளராக 91 ஆம் ஆண்டு இல.கணேசன் நியமிக்கப்பட்டபோது, எங்கள் கட்சியைப் பற்றி பொதுமக்களுக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அப்போது கட்சியின் நிர்வாகிகளாக இருந்தவர்களும் 55 வயதைக் கடந்தவர்களாக இருந்தனர்.

அதனால் கீழ்மட்டத்தில் இளைஞர்கள் என்று யாரும் இல்லை. கட்சிப் பதவிக்கு அவர் வந்த பிறகு தமிழ்நாட்டு அரசியலுக்கு ஏற்றார்போல காய்களை நகர்த்தினார். அதிலும், இந்துத்துவ கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமலும் தமிழ்நாட்டு உணர்வுகளை விட்டுக் கொடுக்காமலும் செயல்பட்டார். இதனால், ` பா.ஜ.க என்பது வடக்கத்திய கட்சி' என்ற உணர்வை மாற்றிக் காட்டினார்" என்கிறார், பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

கருணாநிதி பாசம்; ஜெயலலிதாவின் பாராமுகம்

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில தகவல்களைப் பட்டியலிட்டார். `` தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு ஆள்களே இல்லாத காலகட்டத்தில் புதிது புதிதாக நிறைய பேரை கட்சிக்குள் கொண்டு வந்தார். குறிப்பாக, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா, டாக்டர் மைத்ரேயன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் என பலரையும் தலைவர்களாக மாற்றினார்.

தற்போதுள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலையை தவிர அனைவருமே அவரால் வளர்க்கப்பட்டவர்கள்தான். பலருக்கும் அவர் ஏணிப்படியாக இருந்தார். `அமைப்புரீதியாக கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும்?' என்பதை ஆவணப்படுத்தினார். அது இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கட்சிக்குள் வரும் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். அந்த நடைமுறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கட்சிக்கான நிதியை உருவாக்குவதில் நிரந்தர ஏற்பாடு ஒன்றையும் எல்.ஜி (இல.கணேசன்) செய்தார். தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவு நாளான பிப்ரவரி 11 அன்று, கட்சியில் உள்ளவர்கள் கட்டாயமாக குறைந்தபட்சம் நிதியைக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்.

இதனால் கட்சி நிதி திரண்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்ததால் அனைவருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. அவருக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மதிக்கக் கூடிய நபராக எல்.ஜி இருந்தார். அதிலும், தி.மு.க தலைவர் கருணாநிதியோடு மிக நெருக்கமாகப் பழகினார். கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருவரின் உறவும் நல்லபடியாக நீடித்தது" என்கிறார்.

காவி பூசப்பட்ட பச்சைத் தமிழனா?

`` முதலமைச்சராக எவ்வளவு பணிகள் இருந்தாலும் எல்.ஜி போன் செய்தால் கருணாநிதியிடம் இருந்து உடனே பதில் வரும். தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே மதரீதியாக எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் விவகாரம் பெரிதானதில்லை. அதற்கு இருவரின் நட்பும் ஒரு காரணமாக இருந்தது. எந்த மாவட்டத்தில் பிரச்னை வந்தாலும் பேசியே எல்.ஜி சரிசெய்வார். கருணாநிதியுடன் நட்பில் இருந்ததால் ஜெயலலிதா இவரை பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இடதுசாரிகள் உள்பட அனைவருடனும் நட்பு பாராட்டினார்.

தி.மு.கவில் உள்ள பேச்சாளர்களின் இலக்கிய சொற்பொழிவை போலவே, பட்டிமன்றம், கவியரங்கம் எனத் தமிழை கொண்டு சென்றதில் இல.கணேசனுக்கு பங்குண்டு. ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும்போது ஏராளமான பாடல்களை எழுதினார். தற்போது `பொற்றாமரை' என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். தேசியமும் தமிழும்தான் அதன் அடிநாதமாக இருக்கிறது. அவரை காவி பூசப்பட்ட பச்சைத் தமிழனாகத்தான் பார்க்கிறோம். திருமணம் செய்யாத இயக்க வாழ்க்கை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த மறைந்த ராம.கோபாலன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார். அவரை தனது குருவாகவே பார்த்தவர்" என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.

மேலும், `` பிராமண சமூகத்தில் பிறந்தாலும் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களை தலைவர்களாக மாற்றுவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்ததற்கு இது மிக முக்கிய காரணமாக இருந்தது. எவராலும் புறக்கணிக்க முடியாத இடத்தில் எல்.ஜி இருந்ததால், அவரைத் தேடி பதவி வந்தது. அடிப்படையில் மிகச் சிறந்த நிர்வாகியாக இருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் நிரம்பியுள்ள மணிப்பூரில் நிச்சயம் அவர் தனது தடத்தைப் பதிப்பார்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :