அப்துல் கலாம் நினைவிடத்தில் நிறைவேற்றப்படுமா கூடுதல் வசதிகள்? கள நிலவரம்

கலாம் நினைவிடம்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் இன்று அஞ்சலி செலுத்தனர்.

ஆனால், அந்த நினைவிடத்தில் ஏற்கெனவே அரசு அறிவித்தபடி கூடுதல் வசதிகள் நிறைவேற்றப்படாததால், அதற்கு ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், அப்துல் கலாம்.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தாயகத்துக்காக உழைத்து இந்தியாவின் கெளரவத்துக்கு பலமாக இருந்த அவரது ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி பேக்கரும்புவில் உள்ள தேசிய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர்; கலாமின் குடும்பத்தினர், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர்

ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனாக அவரது திறமையை அங்கீகரித்த இந்திய அரசுக்கு, நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்ற கலாம், தனது எளிமையால் மக்கள் குடியரசு தலைவர் என்று அழைக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகலாயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மேடையிலேயே சரிந்த அவர் காலமானார்.

கலாமின் மறைவுக்குப் பிறகு அவரது சொந்த ஊரிலேயே அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அதை பிரதமர் மோதி 2017 ஜூலை 27ல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அவரது நினைவிடத்தை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் மார்ச் முதல் தற்போது வரை கடந்த 16 மாதங்களாக நினைவிடம் மூடப்பட்டுள்ளது.

நினைவு நாளுக்காக திறக்கப்பட்ட சமாதி

அப்துல் கலாம்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், கலாமின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கலாம் குடும்ப உறுப்பினர்கள் கலாம் தேசிய நினைவகத்தில் உள்ள அப்துல் கலாமின் சமாதியில் சிறப்பு தொழுகை செய்தனர். பின்னா், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ராமநாதபுரம் டிஜஜி மயில்வாகனம், மற்றும் குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 4 ஆண்டுகளாக கலாம் நினைவு தினத்தன்று ஆயிரகணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மரியாதை செய்து வந்தனர்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் கலாம் தேசிய நினைவகம் பார்வையாளரின்றி காணப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, மூத்த விஞ்ஞானி சிவதானுபிள்ளை ஆகியோர், கலாமின் நினைவலைகளை யூடிப் நேரலை மூலமாக பகிர்ந்து கொண்டனர்.

கலாம் நினைவிடம் அமைக்கப்பட்டபோது அங்கே பாதுகாப்புத்துறையில் கலாம் பணியாற்றியபோது அவர் பங்கெடுத்த திட்டங்களின் அடையாளமாக ராக்கெட், ஏவுகணை மாதிரி வடிவமைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர கலாமின் வாழ்க்கை வரலாறை உணரும் வாய்ப்புகளாக அக்ரிலிக் பெயின்டிங் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. முகப்பு வாயிலில் கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையும் வைக்கப்பட்டது. இது தவிர கலாம் நிற்பது மற்றும் அமர்ந்திருப்பது போன்ற சிலைகளும் அங்கு உள்ளன.

அரசு அளித்த வாக்குறுதிகள்

கலாம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அந்த உள்கட்டமைப்புகளை தவிர, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் அங்கு செயல்படுத்தப்படவில்லை.

அறிவுசார் மையம், டிஜிட்டல் நூலகம், கோளரங்கம், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பிலும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பிலும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகள் இல்லாத நிலையில் கொரோனா காரணமாக திட்ட அமலாக்க நடவடிக்கையும் முடங்கிப் போனது.

இது குறித்து கலாமின் குடும்பத்தினரும் கவலை கொண்டுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய கலாமின் பேரன் சலீம், "பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவகம் மத்திய அரசால் விரிவாக்கம் செய்யப்படும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

நினைவகத்தில் இளைஞர்கள், மாணவர்களுக்கு பயன்படும் வண்ணம் அறிவு சார் மையம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. விரைவில் இந்த நினைவகத்தை விரிவுபடுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் வசதிகளை வழங்க வேண்டும்," என சலீம் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு எப்போது அனுமதி?

கலாம்

கலாம் நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பின் பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அப்துல் கலாமின்; சாதனைகள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருந்தார் என்பது குறித்து நினைவு கூர்ந்தார்.

"கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 16 மாதங்களாக கலாம் தேசிய நினைவகத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு தணிந்து வருவதால் தமிழக அரசு மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் கலாம் நினைவிடத்தில் பொது மக்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்," என்று ஆட்சியர் சந்திர கலா கூறினார்.

கலாம் வேடமணிந்து வந்த சிறுவன்: கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜெயப்பிரகாஷ் அப்துல் கலாம்; வேடமணிந்து அவருடைய பெற்றோருடன் வந்திருந்தார்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் 'எனது பெயர் அப்துல் கலாம், நான் விஞ்ஞானி பொது மக்கள் அனைவரும் தனது வீட்டில் வெட்டிவேர் செடிகளை வளருங்கள். இது உடலுக்கு நன்மை தரும்' என்று கூறினார்.

சிறுவனின் இந்த மழலை பேச்சும் சிறுவன் கையில் வைத்திருந்த வெட்டிவேர் செடிகளும் நினைவக வளாகத்தில் இருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் கலாம் வேடமிட்டிருந்த அந்த சிறுவனுடன் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :