தடுப்பூசி உற்பத்தியை நோக்கி நகரும் கேரளா - பினராயி விஜயனின் வியூகம் என்ன? - ஐ.ஏ.எஸ் அதிகாரி பேட்டி

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை நோக்கி கேரள அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. ` பாரத் பயோடெக், சீரம் நிறுவனம், ஸ்புட்னிக் என தடுப்பூசி நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். இரண்டு மாதங்களுக்குள் தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்' என்கிறார் கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநரான ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.ராஜமாணிக்கம் .
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன. பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதால், பல மாநிலங்கள் தடுப்பூசி இல்லாமல் தவித்து வருகின்றன.
தமிழ்நாட்டிலும் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கு 1 கோடியே 80 லட்சத்து 31 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை இந்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என அறிவிக்கப்பட்ட பிறகு தடுப்பூசி போடப்படுவது குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜூலை மாதத்துக்கு மட்டும் 13.5 கோடி டோஸ் தடுப்பு மருந்து கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மக்கள் நீண்ட வரிசைகளில் தடுப்பூசிக்காக காத்துக் கிடப்பதும் அதிகரித்தபடியே உள்ளது.
இந்தநிலையில், தடுப்பூசி உற்பத்தியை நோக்கி கேரள அரசு நகர்வதை இதர மாநில அரசுகள் கவனிக்கத் தொடங்கியுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள தொழில் வளர்ச்சிக் கழக பூங்காவில் 85,000 சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தில் தடுப்பூசி உற்பத்திப் பணிகளை கேரள அரசு தொடங்க உள்ளது. தொடர்ந்து, ரூ.250 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் மையமும் அமைக்கப்பட உள்ளது.
``தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?" என அம்மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்ஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` கோவிட் நேரத்தில் மலப்புரம் மாவட்டத்துக்கு என்னை சிறப்பு அதிகாரியாக நியமித்தனர். அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இப்போதும் நிலைமை அப்படித்தான் உள்ளது. தொடக்கத்தில் அங்குள்ள மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால், `தடுப்பூசி போட வேண்டும்' என நினைத்தபோது, போதிய தடுப்பூசிகள் இல்லை.
அப்போது எங்கள் முதலமைச்சரிடம், `நாமே தடுப்பூசியை தயாரிக்கலாம், அதற்கான இடவசதி உள்ளது' எனக் கூறியபோது, உடனே அதற்கான குழு (Working committee) ஒன்றை அமைத்தார். அதில், மருத்துவ ஆலோசகரும் வல்லுநருமான இக்பால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை கையாண்டு வரும் டாக்டர் சுதிர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவில், `எப்படி தடுப்பு மருந்தை தயாரிக்கலாம்?' என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான திட்ட இயக்குநராக சித்ரா என்ற ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தோம். இதுதொடர்பாக நாங்கள் நான்கைந்து கூட்டங்களை நடத்தினோம்," என்றார்.

பட மூலாதாரம், NurPhoto
உங்கள் முயற்சிக்கு தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து ஆதரவு கிடைத்ததா?
`` பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்ட்டியூட், ஸ்புட்னிக் உள்பட சில நிறுவனங்களோடு கூட்டம் நடத்தினோம். அப்போது ஒரு கேள்வி எழுந்தது. `கோவிட் தொற்றுக்காக தடுப்பூசியை தயாரிக்கிறோம். கோவிட் சூழல் முடிந்த பிறகு அந்தத் தடுப்பு மருந்துக்கு வேலையில்லாமல் போய்விடும். என்ன செய்வது?' என யோசித்தபோது, `கேரளாவுக்குத் தேவையான மீசெல்ஸ் ருபெல்லா உள்பட முக்கியமான தடுப்பு மருந்துகளையெல்லாம் வெளியில் இருந்துதான் வாங்கி வருகிறோம். எனவே, கோவிட் தொற்றுக்கான தடுப்பு மருந்தும் தயாரிக்க வேண்டும். பின்னர் இதர தடுப்பு மருந்துகளிலும் கவனம் செலுத்த வேண்டும்' என முடிவு செய்தோம்.
இதற்காக, முதலில் கோவிட் தடுப்பு மருந்தை டிரம்களில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இதனை உடனே தொடங்கிவிடவும் முடியாது. இதற்காக இந்திய அரசிடம் சில அனுமதிகளை வாங்க வேண்டும். கேரளாவில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை தயாரிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டிரம்களில் பெறப்படும் மருந்தை குப்பிகளாக மாற்றுவது என்பது பெரிய வேலை கிடையாது. அதனை தற்காலிகமாக செய்வது, நீண்டகால திட்டமாக இதர தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் வகையில் முழு உள்கட்டமைப்பைக் கொண்டு வருவது ஆகியவைதான் இதன் நோக்கம்.
`தடுப்பு மருந்தை மற்றவர்களுக்கும் விற்கலாம்' என முடிவெடுத்து அரசுக்குப் பரிந்துரையை சமர்ப்பித்துவிட்டோம். இந்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டால் வேலைகளைத் தொடங்கிவிடுவோம். வைராலஜி துறைக்காக 85,000 சதுர அடியில் கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டோம். இந்திய அரசின் அனுமதி கிடைத்துவிட்டால் 2 மாதங்களில் பணிகளைத் தொடங்கிவிடுவோம்".
தமிழ்நாடு அரசு செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக்கை எடுத்து நடத்த குத்தகை உரிமம் கேட்டும் கிடைக்கவில்லை. அதனை வேறு யாரும் டெண்டரும் எடுக்கவில்லை. உங்களின் முயற்சிக்கு இந்திய அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதா?
``ஹெச்.எல்.எல் பயோடெக் என்பது இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம். அதனை குத்தகை அடிப்படையில் தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், நாங்கள் ஸ்ரீசித்திர திருநாள் இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற இந்திய அரசின் நிறுவனத்துடன் இணைந்து இதனை செயல்படுத்த உள்ளோம். அவர்கள் எங்களுடன் இணைந்து 250 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் செயல்படும் இந்த மையத்தில் (Life science park) 50: 50 என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்துள்ளோம்."

"இந்திய அரசின் வைராலாஜி யூனிட் ஒன்றும் எங்களிடம் உள்ளது. அதனால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு செயல்படுத்துவதுதான் திட்டமே. இதனை நாங்கள் உடனடியாக தொடங்கப் போவதில்லை. இன்னும் ஏராளமான வேலைகள் உள்ளன. கட்டடங்களை விரைவில் கட்டிவிடலாம். ட்ரையல் உள்பட பல வேலைகள் உள்ளன. இதனை முடித்தவுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். திட்ட வரைவை முதலமைச்சர் அலுவலகம் மூலம் இந்திய அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு அவர்களின் அனுமதியைப் பெற்றுவிட்டுத்தான் தொடங்குவோம். இதுதொடர்பான அடுத்தகட்ட கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பார் என நினைக்கிறோம்."
தடுப்பூசி பற்றாக்குறையில் தமிழ்நாடு அளவுக்கு கேரளாவும் சிரமங்களை சந்திக்கிறது. கேரளாவின் மொத்த தடுப்பூசி பற்றாக்குறையை விவரிக்க முடியுமா?
``இந்திய அரசிடம் இருந்து தடுப்பூசி வந்தாலும், தனியார்களும் இங்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 65 சதவிகிதம் பேர். இரண்டாவது டோஸும் எடுத்துக் கொண்டவர்கள் 45 சதவிகிதம் பேர். இது தென்னிந்தியாவிலேயே அதிகம். தடுப்பூசி பற்றாக்குறை எல்லா இடத்திலும் உள்ளது. ஆனால், ஊசி இல்லை என்ற நிலைமை இங்கு இல்லை. மொத்தமாக தடுப்பு மருந்தைக் கொடுத்தாலும் நாளொன்றுக்கு போதுமான எண்ணிக்கையில்தானே போட முடியும்?".
கொரோனா பேரிடரை தடுப்பதில் கேரள அரசு சிறப்பாகச் செயல்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லாமல் எதிர்கொண்டதை விளக்க முடியுமா?
`` நாங்கள் தினமும் ஒன்றரை லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். இங்கு தொற்று பரவல் என்பது அதிகம். குறிப்பாக, டெல்டா திரிபு இங்கு அதிகமாக உள்ளது. நாங்கள் விமான நிலையம் உள்பட எதையும் மூடவில்லை. இங்குள்ளவர்களில் அதிகப்படியானோர் அரபு நாடுகளில் வேலை பார்க்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் இங்கிருப்பதால், `வர வேண்டாம்' என எங்களால் கூற முடியாது. அதேநேரம், அரபு நாட்டில் இருந்து ஒருவர் வந்துவிட்டால் தனிமையில் 14 நாள்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக உள்ளது.

பட மூலாதாரம், SOPA Images
எங்கள் முதலமைச்சரின் நோக்கம் என்னவென்றால், தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து, குணப்படுத்துவதுதான். அதனால்தான் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். `எங்கள் மாநிலத்தில் கொரோனா இல்லை' என்றெல்லாம் கூற விரும்பவில்லை. அரசியல்ரீதியாக அணுகாமல் பரிசோதனைகளில் உறுதியாக இருக்கிறோம். தற்போதுள்ள நிலையில் ஆய்வு நடத்தினால்கூட ஏராளமானோருக்கு கொரோனா இருக்கத்தான் செய்யும். இதனை முன்கூட்டியே கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்துகிறோம். முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் உள்ளது. நீங்கள் கூறியதுபோல், கொரோனா இரண்டாம் அலையின்போது எங்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே வரவில்லை.
ஆக்சிஜன் தேவைக்காக தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்கள் மிகவும் சிரமப்பட்டன. நாங்கள், ஆக்சிஜன் வார் ரூமை அமைத்தோம். அதனை தொடக்கத்தில் நான் வழிநடத்தினேன். இங்கு ஆக்சிஜன் பிளாண்ட் ஒன்றும் இருக்கிறது. இந்திய அரசின் உதவி போன்றவற்றால் எங்களுக்கு பற்றாக்குறை வரவில்லை. மற்ற மாநிலங்களைப் போல, `படுக்கை கிடைக்கவில்லை' என்ற காட்சிகள் எல்லாம் ஒன்றிரண்டு இடங்களில்தான் தென்பட்டன. கொரோனா தொற்றை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் ரெம்டெசிவர் மருந்துக்கு அடித்துக் கொள்வதைப் பார்க்க முடிந்தது. இங்கு அதுபோன்ற பிரச்னைகள் வரவில்லை. ரெம்டெசிவர் உள்பட பல்வேறு மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பில் இருந்தன. காரணம், திட்டமிடலில் துல்லியமாக இருந்ததுதான்."
தற்போது கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவுகிறது. இதனை எதிர்கொள்வதற்கு எந்தெந்த வழிகளில் கேரள அரசு தயாராகி வருகிறது?

பட மூலாதாரம், SOPA Images
``கொரோனா மூன்றாம் அலை, குழந்தைகளை அதிகமாக தாக்கும் எனக் கூறப்படுவதால் அவர்களுக்கான வசதிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. `ஆக்சிஜன் பற்றாக்குறை எதிர்காலத்திலும் வந்துவிடக் கூடாது' என்பதால் 3 இடங்களில் 150 மெட்ரிக் டன் அளவுக்கு பிளாண்ட் அமைக்க உள்ளோம். மூன்றாவது அலையைத் தடுப்பது தொடர்பாக நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. முதலமைச்சர் அந்தக் குழுவை வழிநடத்தி வருகிறார்.
இதில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது. நான் குறை சொல்வதாக யாரும் நினைக்கக் கூடாது. தொற்றை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். கேரளாவில் கல்வியறிவு அதிகமாக இருந்தாலும் மக்களிடையே விழிப்புணர்வு மிக அதிகம். கேரளாவில் மக்கள் இயல்பாகவே முகக் கவசம் அணிந்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் போலீஸ்காரர்கள் வந்தால்தான் மக்கள் முகக்கவசம் அணிகிறார்கள். இதனை என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது. சிறிய அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வதற்கு கேரள மக்கள் தாமாகவே முன்வருகிறார்கள்.
`பரிசோதனைக் கருவிகள் இல்லை' என்றுதான் மக்கள் எங்களிடம் புகார் சொல்ல வருகிறார்கள். இதனால் சிக்கலை நோக்கிச் செல்லாமல் தடுக்க முடிகிறது. தவிர, ஆக்சிஜன் வார் ரூம், மருந்து வார் ரூம், ஐ.சி.யு என அனைத்துக்குமே தனித்தனிக் குழுக்களை அமைத்துக் கண்காணித்ததால் பேரிடரைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது".
பிற செய்திகள்:
- பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?
- இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு
- ஜெஃப் பெசோஸின் 11 நிமிட விண்வெளி பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்
- கொரோனாவால் இந்தியாவில் 40 லட்சம் பேர் பலி - அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு
- ஐஎஸ் குழுவினரின் ஸ்மார்ட் ஃபோன் மர்மங்கள் - அறியப்படாத தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












