குட்டி நாடான குராசோவா முதல் புள்ளி: அரணாக நின்று 12 ஆண்டு உலக சாதனையை சமன் செய்த கோல் கீப்பர்

பட மூலாதாரம், JUAN MABROMATA AFP via Getty Images
- எழுதியவர், கிறிஸ் மெக்கெனா
- பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதன் முறையாக விளையாடும் குட்டி நாடான குராசோவா தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. தனது இரண்டாவது ஆட்டத்தில் ஈக்வெடார் அணியை எதிர்த்து ஆடிய குராசோவா டிரா செய்தது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்கவில்லை.
குராசோவா அணியின் கோல் கீப்பர் எலாய் ரூம் மிகச்சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் 15 கோல் வாய்ப்புகளை தடுத்து நிறுத்தினார்.
37 வயதான எலாய் ரூம், ஓர் உலகக் கோப்பை ஆட்டத்தில் அதிக முறை பந்தை தடுத்ததற்கான அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்டின் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.
2014 உலகக்கோப்பை தொடரில் பெல்ஜியத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹோவர்ட் எதிரணியின் 15 கோல் வாய்ப்புகளை முறியடித்திருந்தார். 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா தோல்வி கண்ட அந்த ஆட்டத்தில் அவர் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் எலாய் ரூம் ஒரு கோல் கூட விடாமல் எதிரணியைத் தடுத்து நிறுத்தியது குராசோவா அணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவை பெற்றுத் தந்தது.
ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களிலேயே அவர் செய்த முதல் தடுப்பு, நேற்றைய இரவின் சிறந்த தடுப்பாகக் கருதப்படுகிறது; மிக நெருக்கத்தில் இருந்து வலென்சியா அடித்த பந்தை அவர் தடுத்தார்.
அடுத்து ஜான் யெபோவா கோலை அடித்த பந்தை எலாய் ரூம் சிறப்பாக தடுத்தார். முதல் பாதியில் ஈக்வெடாரின் 6 கோல் வாய்ப்புகளை எலாய் ரூம் முறியடித்தார்.
இடைவேளைக்குப் பிறகு, மொய்சஸ் கைசெடோ, பெட்ரோ வைட், கெவின் ரோட்ரிக்ஸ், நில்சன் அங்குலோ, கோன்சாலோ பிளாட்டா மற்றும் பலரின் கோல் அடிக்கும் முயற்சிகளை எலாய் ரூம் அடுத்தடுத்து முறியடித்தார். இதனால், ஆட்டம் இன்னும் விறுவிறுப்பான கட்டத்திற்கு நகர்ந்தது.

பட மூலாதாரம், JUAN MABROMATA AFP via Getty Images
ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் குராசோவாவிற்கும் கோலடிக்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வீரர் லியாண்ட்ரோ பக்குனா முயற்சியை ஈக்வெடார் வீரர்கள் வெற்றிகரமாக தடுத்துவிட்டனர். அதற்குப் பிறகு லிவியானா கொமெனென்சியாவின் முயற்சியும் ஈக்வெடார் அணியால் முறியடிக்கப்பட்டது.
குராசோவாவுக்கு எதிராக கோலடிக்க மொத்தம் 27 முயற்சிகளை மேற்கொண்டும் தவறவிட்ட வாய்ப்புகளுக்காக ஈக்வடார் அணி நிச்சயம் வருந்தும். தொடக்க ஆட்டத்தில் ஐவரி கோஸ்டிடம் தோற்றுள்ள நிலையில், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற, ஈக்வெடார் அணி தனது இறுதி ஆட்டத்தில் வலிமையான ஜெர்மனி அணியை வீழ்த்தியே ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
தங்கள் முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கணக்கில் தோற்ற குராசோவா அணியும் தங்கள் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்டை வீழ்த்தினால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
ஈக்வெடார் வெளியேற்றப்படும் அபாயம்

பட மூலாதாரம், Charlotte Wilson/Getty Images
ஈக்வெடார் அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் ஒரு புள்ளி மட்டுமே பெற்று, கோல் ஏதும் அடிக்காமல் இருப்பதால் அதன் பயிற்சியாளர் செபாஸ்டியன் பெக்கசேஸ் விமர்சனத்திற்கு இலக்காகக் கூடும்.
தனது முதல் ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணியிடம் கடுமையாகப் போராடி 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்வெடார் தோல்வியடைந்தது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே வாழும் குட்டித்தீவு நாடான குராசோவா, ஜெர்மனியிடம் படுதோல்வி அடைந்ததால் அந்த அணியை எளிதில் வீழ்த்த முடியும் என்று ஈக்வெடார் கணித்திருக்கலாம்.
ஈக்வெடார் அணி இதுவரை ஆடியுள்ள இரண்டு ஆட்டங்களில் 39 முறை கோல் அடிக்க முயன்றும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
பெக்காசெஸின் கீழ் ஈக்வடார் அணியின் தற்காப்பு உறுதியாக இருந்து வருகிறது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த 21 ஆட்டங்களில் வெறும் எட்டு கோல்களை மட்டுமே ஈக்வெடார் அணி விட்டுக்கொடுத்துள்ளது. கிளப் போட்டிகளில் ஆர்சனல் அணிக்காக ஆடம் பியரோ ஹிங்காபி மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனின் வில்லியன் பாச்சோ போன்ற சிறந்த தடுப்பாட்டக்காரர்கள் ஈக்வெடார் அணியில் இருப்பது தற்காப்பில் பெரிதும் உதவியுள்ளது.

பட மூலாதாரம், Robbie Jay Barratt - AMA/Getty Images
அவர்களின் இந்த வலுவான தற்காப்பு ஆட்டம் தாக்குதல் ஆட்டத்தைப் பாதித்துள்ளதாகவே தெரிகிறது. தகுதிச் சுற்றின் 18 ஆட்டங்களில் ஈக்வெடார் 14 கோல்களை மட்டுமே அடித்தது. உலகக் கோப்பையில் அந்த அணி இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
அடுத்ததாக ஜெர்மனியை ஈக்வெடார் எதிர்கொள்கிறது. ஜெர்மணி அணி ஏற்கனவே தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்துவிட்டது. இதனால், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி அணி சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கக் கூடும். அந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு ஈக்வடார் அணியால் முன்னேற முடியும். அந்த அணிக்கு மிகக் கடுமையான சவால் காத்திருக்கிறது என்பது தெளிவு.
இந்த அணிகளுக்கு அடுத்து என்ன?
ஈக்வடார் அணி ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை நியூ ஜெர்சியில் ஜெர்மனியை எதிர்கொள்ளவுள்ளது; அதே நேரத்தில் பிலடெல்பியாவில் குராசோவா அணி ஐவரி கோஸ்ட் அணியை எதிர்கொள்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












