ஹெச்.சி.எல் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய ஷிவ் நாடார் பற்றிய 10 முக்கிய தகவல்கள்

ஷிவ் நாடார்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார், அந்த பொறுப்பிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) விலகியுள்ளார். ஆனால் 76 வயதாகும் ஷிவ் நாடார் அந்நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும், இயக்குநர் குழுவின் ஆலோசகராகவும் தொடர உள்ளார்.

இந்தநிலையில், அவரைப்பற்றிய, அவர் உருவாக்கிய ஐடி சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய சில சுவாரசியமான தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

  • ஷிவ் நாடார் 1945-ஆண்டு தூத்துக்குடியில் பிறந்தார். அவரது அப்பா ஒரு மாவட்ட நீதிபதியாக இருந்தார். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிப்பை முடித்தார்.
  • 1976-ம் ஆண்டு ஏழு பேருடன் இணைந்து டெல்லியில் ஹெச்.சி.எல் (ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிட்டட்) நிறுவனத்தை ஷிவ் நாடார் உருவாக்கினார். இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ்க்கு அடுத்ததாக மூன்றாவது மிகப்பெரிய ஐ,டி நிறுவனமாக தற்போது ஹெச்.சி.எல் உள்ளது.
  • ஹெச்.சி.எல்லின் இணை நிறுவனர் அர்ஜுன் மல்ஹோத்ராவின் பாட்டி வீட்டில்தான் ஆரம்ப கால ஹெச்.சி.எல் நிறுவனம் இயங்கியது. ஒரு ஹார்டுவேர் நிறுவனமாகத் தோன்றிய ஹெச்.சி.எல் ஆரம்ப காலத்தில், மைக்ரோ பிராசசர் மற்றும் கால்குலேட்டர்களை தயாரித்தது.
  • உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனமும், ஹெச்.சி.எல் நிறுவனமும் ஒரே ஆண்டு தொடங்கப்பட்டவை. 1978-ம் ஆண்டு ஹெச்.சி.எல் உருவாக்கிய மைக்ரோ பிராசசர் பொருட்களின் விளம்பரமும், ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய மைக்ரோ பிராசசர் பொருட்களின் விளம்பரமும் ஒரே வாரத்தில் நாளிதழ்களில் விளம்பரமாக வந்தது.
ஷிவ் நாடார்

பட மூலாதாரம், Getty Images

  • இந்தியாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயே கணினி உற்பத்தி செய்த நிறுவனம் என்ற பெருமை ஹெச்.சி.எல்-க்கு உள்ளது. காலப்போக்கில், தாராளமய கொள்கையால் இந்தியாவில் ஐ,டி துறை மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கும் என்பதைக் கணித்த ஷிவ் நாடார், சரியான நேரத்தில் ஹார்டுவேர் நிறுவனமான ஹெச்.சி.எல்லை ஒரு சாஃப்டுவேர் நிறுவனமாக மாற்றினார்.
  • உலகம் முழுக்க சுமார் ஐம்பது நாடுகளில் இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
  • 1994-ம் ஆண்டு ஷிவ் நாடார் அறக்கட்டளையை உருவாக்கிய அவர், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஹரியானா என பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் துவக்கினார். ஆண்டுதோறும் இந்தியத் தொழிலதிபர்களில் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் பெயர் நிச்சயம் இடம்பெறும். 2018-ம் ஆண்டு 826 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, அதிக நன்கொடை வழங்கியவர் என்ற பெருமையை ஷிவ் நாடார் பெற்றார். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அப்போது மூன்றாம் இடத்திலிருந்தார்.
ஷிவ் நாடார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுடன் ஷிவ் நாடார்
  • தனது வருமானத்தில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கப்போவதாக 2010-ம் ஆண்டு ஷிவ் நாடார் அறிவித்தார். இந்த உதவி செய்யும் பழக்கம் தனது அம்மாவிடம் இருந்து வந்ததாக ஒரு பேட்டியில் ஷிவ் நாடார் கூறியிருக்கிறார். `` என் அப்பா ஒரு நீதிபதியாக இருந்தார். வீட்டை நடத்தக் குறிப்பிட்ட அளவிலான பணம் மட்டுமே அம்மாவிடம் இருக்கும். இருந்தபோதிலும் அம்மா மற்றவர்களுக்கு உதவி செய்வார். அதைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஹெச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்கி நான் பெரிதாக வளர்ந்த பிறகு, நீ மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான நேரம் இதுவல்லவா, என அம்மா கேட்டார். அப்போதுதான் அறக்கட்டளையை உருவாக்கினேன்`` என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
  • 2020-ம் ஆண்டு போர்ப்ஸின் செய்தியின்படி, 2,450 கோடி ரூபாய் சொத்துடன் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக ஷிவ் நாடார் உள்ளார். உலக அளவில் 68வது இடத்தில் உள்ளார்.
  • ஷிவ் நாடாரின் மகளான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஹெச்.சி.எல்லின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இனி ஹெச்.சி.எல்லை இவர்தான் தலைமை தாங்க உள்ளார். மனைவி கிரண் நாடார், கலை சேகரிப்பாளராகவும், அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். இவருக்கு டெல்லி மற்றும் நொய்டாவில் கலைக்கூடங்கள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :