ஹேமலதா லவனம்: கொள்ளையர்கள் இல்லாத கிராமத்தை உருவாக்கிய ஆந்திரப் பெண்

பிரசுரிக்கப்பட்டது

இந்திய குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்

இந்த கிராமத்தை பார்ப்பதற்கு ஒரு சாதாரண இடம் போல இருக்கலாம். ஆனால், அப்படி இல்லை. இந்த கிராமம் ஒரு எடுத்தக்காட்டாக இருக்கிறது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்டுவர்ட்புரம் கிராமம் ஒரு காலத்தில் குற்றவாளிகள் மற்றும் கொள்ளையர்களின் கூடாரமாக இருந்தது.

ஆனால், இந்த கிராமத்தில் இப்போது ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் யாரும் இல்லை.

"தற்போது இந்த கிராமத்தில் கொள்ளையர்களே இல்லை. எனினும் ஓரிரு சிறு திருடர்கள் இருக்கிறார்கள். ஆனால் 1980களுடன் ஒப்பிட்டால் இந்த கிராமத்தில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் யாருமில்லை" என்கிறார் சப் டிவிஷனல் போலீஸ் அதிகாரி ஸ்ரீநிவாச ராவ்.

குற்றவாளிகளே இல்லாத கிராமமாக இது எப்படி மாறியது? இதற்கு காரணம் ஹேமலதா லவனம் எடுத்த முயற்சிகள்.

சமூக சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான ஹேமலதா, கிறுஸ்தவ தலித் குடும்பத்தை சேர்ந்தவர். ஹேமலதாவின் கணவரான லவனமும் ஒரு சமூக சீர்திருத்தவாதி.

1960ஆம் ஆண்டு அவர்களது திருமணம் முடிந்தவுடன், சாம்பல் பள்ளத்தாக்கு பகுதிக்கு இவர்களை அழைத்திருந்தார் பெருந்தலைவர்களுள் ஒருவரான வினோபா பாவே. அப்போது வினோபா பாவே ஒரு அமைதி பேரணி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அதனை காணவே ஹேமலதா தம்பதியை அவர் அழைத்திருந்தார். அப்போது பல கொள்ளைக்கூட்டக்காரர்கள் நிர்வாகத்திடம் சரணடைந்தனர்.

"1960ல் சாம்பல் பள்ளத்தாக்கில் பேரணி ஒன்றை நடத்தினார் வினோபா பாவே. அதற்காக ஹேமலதா மற்றும் அவரது கணவரை அங்கு அழைத்திருந்தார். தங்கள் தேனிலவு, ஒரு சமூக சீர்திருத்த தேனிலவாக இருந்ததாக ஹேமலதா தெரிவித்திருந்தார். தனது கணவருடன் சாம்பல் பள்ளத்தாக்கில் உள்ள பின்ந் மற்றும் மொரினா மாவட்டங்களுக்கு சென்றார் ஹேமலதா. அப்போது கொள்ளையர் மான் சிங்கிற்கு ராக்கி கட்டினார் ஹேமலதா. அப்போது தான் கொள்ளையர்கள் கூட மனிதர்கள்தான் என்றும் சில சமூக சூழ்நிலைகளால் அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்தார். இதுதான் கொள்ளையர்கள் குறித்த அவரது பார்வையை மாற்றியது.

இதுவே ஆந்திராவில் உள்ள ஸ்டுவர்ட்புரத்தில் குற்றவாளிகள் சீர்திருத்த இயக்கம் ஒன்றை முன்னெடுக்க அவரை ஊக்குவித்தது" என பிபிசியிடம் தெரிவித்தார் ஹேமலதா லவனம் சுயசரிதையின் ஆசிரியர் கே. சுந்தர்

சாம்பல் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவங்கள் ஹேமலதா மனதில் ஆழமாக பதிந்தன. சமூகத்தில் இருந்த குற்றவாளிகளை சீர்திருத்தும் பணியை ஸ்டுவர்ட்புரம் கிராமத்தில் இருந்து அவர் தொடங்கினார்.

"என் தந்தை ஒரு குற்றவாளியாக இருந்தார். நானும் குற்றவாளியாக இருந்தேன்.

அம்மா எங்கள் கிராமத்திற்கு வந்தார். நாங்கள் செய்வது தவறு என்று எங்களுக்கு எடுத்துரைத்தார். அவரை சந்தித்த பிறகு எங்கள் தவறுகளை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் போலீசிடம் சரணடைவதாக அவரிடம் தெரிவித்தோம்.

நான் சிறையில் இருந்தபோது கூட அவர் என்னை வந்து பார்த்தார்" என்கிறார் ஸ்டுவர்ட்புரம் கிராமவாசியான பிரபாகர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களை முன்னிலைக்கு கொண்டுவர ஹேமலதா பணியாற்றினார். பழங்கால வழக்கத்தில் இருந்து ஜோகினி பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகித்தார்.

கடவுளடன் திருமணம் என்ற பெயரில் பல பெண்கள் கோயில்களுக்கு தானமாக அளிக்கப்பட்டனர். ஒரு பெண்ணை தானம் கொடுப்பது என்பது அவரின் அடிப்படை மனித உரிமையை மறுப்பது, அவர் முன்னேறும் வாய்ப்பை பறிப்பது மற்றும் பாலின, தாய் உரிமைகளை மறுப்பதற்கு சமம் என்று ஹேமலதா நினைத்ததாக சுந்தர் தெரிவித்தார்.

ஹேமலதாவை அம்மா என்று பலரும் அழைத்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட ஜோகின் பெண்களை அந்த முறையில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். குற்றவாளிகளை சீர்த்ருத்தி அவர்களை சமூகத்தில் ஒருவராக கொண்டுவர பணியாற்றினார். ஹேமலதாவிற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சமூக சீர்திருத்தங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட மூன்று தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் நம்பினார்.

செய்தியாளர் - பத்மா மீனாட்சி, சுஷிலா சிங்

தளாரிப்பாளர் - சுஷிலா சிங்

படப்பிடிப்பு - ரவி பெடபொலு

படத்தொகுப்பு - சங்கீதம் பிரபாகர், டேனியல்

(வரலாற்றில் பெண்கள் பாகம் 2 தயாரிப்பாளர் சுஷிலா சிங், பிபிசி இந்தி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :