You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்: நிலமற்றவர்களுக்கு நிலம் வாங்கப் போராடிய தமிழ் பெண் செயற்பாட்டாளர்
இந்தியக் குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்)
வரலாற்றில் பெண்கள் முதல் பாகம்: பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட புரட்சியாளர்கள்
யார் இந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்? இவருக்கு ஏன் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது?
கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு 94 வயதில் பத்ம பூஷன் விருது கிடைத்திருக்கிறது. காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கித் தந்த கிருஷ்ணம்மாள், பெற்ற விருதுகளின் எண்ணிக்கையே பெரும் பட்டியலாக இருக்கும். அந்த பட்டியலில் 2020ல் சேர்ந்துள்ளது பத்ம பூஷன்.
பதின்பருவத்தில் தொடங்கிய போராட்டத்தின் அதே வீரியத்தோடு பயணிக்கும் பெண்மணியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். குடிசையில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெறமுடியாது.
சமீபத்தில் பேசியபோதுகூட, கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும் பெண்களின் நிலைமை சரிசெய்யவும் என்ன திட்டங்களை வைத்துள்ளார் என பேசினார். 1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை இன்றும் பின்பற்றுபவர்.
''தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு வீடு அவசியம். ஒரு தரமான வீடு இருந்தால், அவனது வாழ்க்கையில் பாதி சிரமங்களைக் குறைத்துவிடலாம். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்கு ஒரு காணி நிலம் கூட சொந்தமில்லாமல் இருப்பது சாபக்கேடு,'' என வீடில்லா மக்களின் வலியை பற்றிய உரையாடலில் என்னிடம் பேசினார்.
கிருஷ்ணம்மாள், கணவர் ஜெகநாதனோடு தொடங்கிய எண்ணற்ற சமூக பணிகளில் முக்கியமான ஒன்று லாபிட்டி (Land for the Tillers' Freedom). உழுபவனுக்கு நிலம் சொந்தம், என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பு லாபிட்டி. நாகப்பட்டினத்தில், கீழ் வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார் ஒருவரால், 42 தலித் தொழிலாளர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் மனதை அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பால் உருவானதுதான் லாபிட்டி.
நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று, நிலமற்ற உழைப்பாளிகளுக்குக் கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டது லாபிட்டி. நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த வட்டியுடன் விலையை வங்கியில் செலுத்தி, நிலத்தை சொந்தமாக்கிக்கொள்வார்.
இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தவர் இவர்.1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 19 கிராமங்களில், 1,112 ஏக்கர் நிலத்தை, வங்கிக்கடனில் பெற்று, 1,112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். வட்டியை செலுத்திய மக்கள் அனைவரும், முதல் தலைமுறையாக தங்களுக்கென ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதை நன்றியோடு இன்றும் நினைவுகூர்கிறார்கள்.
வரலாற்றில் பெண்கள் பாகம் 2 - உதா தேவி: 36 ஆங்கிலேயர்களைக் கொன்று கணவரின் மரணத்திற்குப் பழிவாங்கிய பெண்
செய்தியாளர் - பிரமிளா கிருஷ்ணன்
தயாரிப்பாளர்கள்: அபர்ணா ராமமூர்த்தி & சுஷிலா சிங்
படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்
படப்பிடிப்பு - மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்