கொரோனாவால் ஏற்காடு கோடை விழா ரத்து: பூக்களோடு சேர்ந்து வாடும் தொழிலாளர்கள் வாழ்க்கை

- எழுதியவர், ஏ.எம் சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது அமைக்கப்படும் கண்கவர் மலர் கண்காட்சியை காண்பதற்காகவே, வெளிமாநிலத்திலிருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருவார்கள்.
அத்துடன் பலவிதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இவ்வாறு ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழாவில் உள்ளூரில் உள்ள மலைவாழ் மக்கள் கடைகள் அமைப்பதன் மூலமாகவும் கார், ஆட்டோ ஓட்டுநர்கள் வெளியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலமாகவும் வருமானம் ஈட்டுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கோடை விழா நடத்த முடியாமல் நின்றுபோனது . இந்த ஆண்டாவது விழா நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வாழ் தொழிலாளர்களும் இருந்தனர்.
கொரோனா ஏற்படுத்திய சோகம்
கோடை விழாவை சிறப்பாக நடத்த, தோட்டக் கலைத் துறை சார்பில் கடந்த கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அண்ணா பூங்காவில், மேரிகோல்டு, ஜினியா, ஸ்னாப் ட்ராகன், கேலண்டுல்லா, ஆஸ்டர், டையான்தஸ்ஸ்வீட், சால்வியா, கோம்பரனா, செலோசியா கிரிஸ்ட், அல்லீசம்ஈஸ்டர், பெட்டூனியா, பான்சி, பாஸ்சம் டோம், கைலார்டியாமேசா, காஸ்மாஸ் சொனாட்டா உள்ளிட்ட 21 வகையிலான பூச்செடிகள் விதைக்கப்பட்டன. அவை முளைத்த பின்னர் தனித்தனி சட்டிகளில் நடப்பட்டு 10 ஆயிரம் பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக நோய் தொற்று கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவில் இருந்தால் அரசு சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர தடை விதித்தது.
ஆனால் இதனால் வருடமும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த முடியாமல் போனது. இதனால் தயார் செய்யப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது , தற்போது அந்த செடிகளை மலர் கண்காட்சி திடலில் அடுக்கி வைத்துள்ளனர் .
மேலும் பூங்காவின் புல்வெளியில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ''டேக் வேக்சின் செக்யூர் யுவர் லைப்'' என்ற வாசகத்தை பூந்தொட்டிகளை வைத்து உருவாக்கி வைத்துள்ளனர்.
பூத்துக்குலுங்கும் பூக்களை காண சுற்றுலா பயணிகள் இல்லாமல் கண்காட்சி திடல் மற்றும் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
பரிதாப நிலையில் தொழிலாளர்கள்

ஏற்காடு தோட்டக்கலைத் துறையில் 170 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா ரத்தானதால் அதிகாரிகள் வேலை நாட்களை வாரத்திற்கு ஒரு நாளாக குறைத்துள்ளனர்.
ஒரு நாள் வருமானம் தங்கள் குடும்பத்திற்கு போதாது என்றும் வேலை நாட்களை அதிகப்படுத்துங்கள் என தொழிலாளர்கள் கோரிக்கையோடு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து சுழற்சி முறையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளனர்.
என்ன நடந்தது?
பிபிசி தமிழ் சார்பில் தோட்டக்கலை தொழிலாளர் ஸ்ரீதரிடம் பேசினோம். இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தால் கோடை விழா நடத்தமுடியாமல் போய்விட்டது. இதனால் போதுமான வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்ட பட்டோம் இந்த நிலையில் அரசு அதிர்ச்சி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் எங்களுக்கு வாரத்தில் 3 நாள் என மாதத்திற்கு 12 நாள் வேலை என்று கூறியுள்ளது. இது போதுமானதாக இல்லை.இந்த வருமானத்தை வைத்து எப்படி நாங்கள் வாழ்வது மாதத்திற்கு 25 நாட்களுக்காவது எங்களுக்கு வேலை தரவேண்டும், என்றார்.

அடுத்து நம்மிடம் பேசிய ராமகிருஷ்ணன் கூறும்போது, ஏற்காடு அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆண்கள் 40 பேர், பெண்கள் 130 பேர் வேலை செய்கின்றோம். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர்கண்காட்சி நடத்தப்படவில்லை. இதனால் அரசுக்கும் இழப்பு எங்களுக்கும் இழப்பு. ஆனால் எங்கள் இழப்பு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மலர் கண்காட்சியின் போதும் 4 மாதத்திற்கு முன்னரே வேலை ஆரம்பித்துவிடுவோம். இந்த 4 மாத சம்பளம்தான் இந்த ஆண்டுக்கான எங்கள் வருமானம். அந்த வருமானத்திற்கும் தற்போது பிரச்னை வந்துள்ளது என்றார்.

கார் ஓட்டுநர் செல்வகுமார் கூறும் போது, கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் மார்ச் மாதம் தொடங்கியது. அதனால் கோடை விழா நடைபெறவில்லை. நடப்பு ஆண்டும் கொரோனா காரணமாக கோடைவிழா நடைபெறவி்லை.
ஏப்ரல், மே, ஜூன் மாத வருமானத்தை கொண்டுதான் அந்த ஆண்டு முழுவதும் எங்கள் வாழ்க்கை நடைபெறும். காருக்கான கடன் அடைக்க மாதா மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை , எப்.சி., பர்மிட் ஆகியவையே தள்ளி போட வேண்டும். ஒரு சில வாடகை கிடைத்தாலும் அதற்கு இ-பாஸ் போட்டால் கூட ஆன்லைனில் ஏற்க மறுக்கிறது. அரசு எங்களுக்கு உதவித்தொகை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
ஒண்டிக்கடையில் பழக்கடை நடத்தி வரும் சுசிலாவோ, நான் வங்கிக் கடன், நகை கடன் வாங்கியுள்ளேன். தற்போது வருமானம் இல்லாத காரணத்தால் கடனை செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன். வட்டி தள்ளுபடி செய்தால் உதவியாக இருக்கும். ஏற்காடு எஸ்டேட்டில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே அழுகிபோகிறது. குத்தகை பணத்தை செலுத்த வேண்டும் என்று எஸ்டேட் உரிமையாளர்கள் கேட்கின்றனர். பழங்களை கொண்டு வந்தாலும் விற்பனை செய்யமுடியாமல் உள்ளது. 100 நபர்களுக்கு வேலை கொடுக்கப்பட்ட இடத்தில் தற்போது 2 நபர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது. வங்கியில் கடனை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர் என்றார் சோகமாக.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். கோடை விழா நடக்காததால் நடப்பு ஆண்டில் பூக்கள் கண்காட்சியை வீடியோ எடுத்து, யூடியூப் உள்பட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளோம்.
அடுத்த ஆண்டு மலர் கண்காட்சிக்காக தற்போது முதல் தயாராகி வருகிறோம். தற்போது கொரோனா காரணமாக 10 ஆயிரம் தொட்டியில்மலர் செடிகள், மலர் படுக்கைகள் ஏற்பாடு செய்திருந்தோம்.
இதிலிருந்து கிடைக்கக்கூடிய கிழங்குகள், விதைகள் அனைத்தும் அடுத்த மலர் கண்காட்சிக்கு சேகரித்து வைத்துள்ளேன். ஏப்ரல் மாதத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எளிமையான மலர் கண்காட்சி அமைத்திருந்தோம். வழக்கமான பிரும்மாண்ட ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை.
தற்போது பூங்கா பணியாளர்கள் தனித்தனியாக வேலை செய்து வருகின்றனர். அதிக நபர்களை கொண்டு வேலை செய்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இங்குள்ள அலுவலர்கள் சிலருக்கு கொரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் குடும்பம் பாதிக்கக்கூடாது என்பதால்தான் வேலை நாட்களை குறைத்துள்ளோம்.
இம்மாத இறுதியில் இந்த நிலை மாறிவிடும். அதன் பிறகு அவர்களுக்கு பழையபடி வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு கோடை விழா மற்றும் குளிர்கால விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்




















