அசாம் முதல்வராகிறார் ஹிமாந்த பிஸ்வா சர்மா: சரபானந்த சோனோவால் முயற்சி தோல்வி

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தோடு சேர்த்து சட்டப் பேரவைத் தேர்தல் நடந்த அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், 5 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் கட்சிக்கு வெற்றி தேடித்தந்த முதலமைச்சர் சரபானந்த சோனோவால் மீண்டும் முதல்வர் பதவியைப் பெறமுடியவில்லை.
முதல்வர் பதவிக்காக சரபானந்த சோனோவால் - சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இடையே நடந்துவந்த பனிப்போரில் சோனோவால் தோற்று, ஹிமாந்த பிஸ்வா சர்மா வெற்றி பெற்றுள்ளார்.
அசாம் மாநில பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து பல நாள்கள் ஆன பிறகும், பிற மாநிலங்களில் அரசுகள் பதவியேற்ற பிறகும் அசாமில் ஆட்சி அமைக்கமுடியாத குழப்ப நிலை நீடித்துவந்தது. இதன் பிறகு சோனோவால், பிஸ்வா சர்மா இருவரும் டெல்லி அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அசாம் தலைநகர் குவஹாத்தியில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஹிமாந்த பிஸ்வா சர்மா முதல்வர் பதவிக்கு முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
யார் இந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா?
அசாம் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஹிமாந்த பிஸ்வா சர்மா. மூன்று முறை தொடர்ந்து அசாமில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியின் தருண் கோகோய் அமைச்சரவையிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக, அதாவது 2015ல் காங்கிரசில் இருந்து விலகிய சர்மா, பாஜகவில் இணைந்தார். வடகிழக்கு மாநிலங்கள் தொடர்பாக உத்தி வகுக்க பாஜக-வுக்கு மூளையாக செயல்பட்டவர் இவர் என்பது பிரபலம். 5 ஆண்டு காலம் சரபானந்த சோனோவால் அமைச்சரவையிலும் இவர் அமைச்சராக இடம் பெற்றிருந்தார்.
யார் இந்த சரபானந்த சோனோவால்?

பட மூலாதாரம், Getty Images
முதலமைச்சராக இருந்து விடைபெறும் சரபானந்த சோனோவால் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அசாமில் வெளிநாட்டுக் குடியேறிகள் தொடர்பாக 1980களில் பெரிய போராட்டத்தை முன்னெடுத்த, 'ஆசு' என்று அறியப்படும் அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர். இந்த மாணவர் ஒன்றியம் நடத்திய 6 ஆண்டுகாலப் போராட்டத்தின் விளைவாகவே 'அசாம் அகார்ட்' என்று அறியப்படும் அசாம் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
பிறகு அசாம் கண பரிஷத் கட்சியில் செயல்பட்டார் சோனோவால். 2009ல் அதில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த இவர், பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார். பிறகு, 2016 தேர்தலின்போது அசாம் மாநிலத்துக்கான பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். கட்சி அப்போது முதல் முறையாக வடகிழக்கில் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஆனால், 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் பெயர் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்படவில்லை. முதல்வர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஹிமாந்த பிஸ்வா சர்மாதான் சோனோவாலுக்குப் போட்டியாளர் என்பது யாவரும் அறிந்த அரசியல் ரகசியம்.
நீண்ட காலம் முதல்வர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தியவர் என்று கூறப்பட்ட ஹிமாந்த பிஸ்வா சர்மா தற்போது தமது கனவுப் பதவியை தொட்டுவிடும் தூரத்துக்கு வந்துவிட்டார்.
126 பேர் கொண்ட சட்டமன்றத்தில் இந்த முறை 100 இடங்களைப் பெறவேண்டும் என்று பாஜக இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அதனால், 60 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு எளிதாக பாஜக பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறுகிறது.
பெரும்பான்மை
மிக மோசமாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 29 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் கணிசமான இடங்களிலும் வென்றது பாஜகவின் அதீத பெரும்பான்மைக் கனவைக் கலைத்துவிட்டது. ஆனாலும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது பாஜக.
பிற செய்திகள் :
- கொரோனா சிகிச்சைக்கு டிஆர்டிஓ தயாரித்த புதிய மருந்து: இந்திய அரசு ஒப்புதல்
- வெ. இறையன்பு: தமிழகத்தின் புதிய தலைமைசெயலர் - யார் இவர்?
- கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?
- உங்களால்தான் ஹிட்லர் போல ஆகிவிட்டேன் என்றார் கமல்: ஆர். மகேந்திரன்
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















