You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கழண்டு விழுந்த ஆம்புலன்ஸ் விமான சக்கரம், உள்ளே ஒரு நோயாளி இருந்தார் - விமானத்துக்கு என்ன ஆனது?
(இன்று 07.05.2021 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நோயாளியோடு, புறப்பட்ட விமான ஆம்புலன்ஸின் சக்கரம் கழண்டு விழுந்ததாகவும், பின் விமானம் தன் உடல் பகுதியை வைத்து தரை இறங்கியதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நெருக்கடி நிலவுவதால், நோயாளிகள் சாலை வழியில் பயணிக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தாண்டி, விமான ஆம்புலன்ஸ்களையும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
நேற்று (மே 06, வியாழக்கிழமை) நாக்பூரில் இருந்து, ஒரு நோயாளியோடு புறப்படும் போதே அந்த விமான ஆம்புலன்ஸின் சக்கரம் கழண்டு விழுந்து விட்டது. இந்த விமானம் ஹைதராபாத்துக்குச் செல்லவிருந்தது.
விமானத்தை தரையிறக்க சக்கரம் இல்லை என்பதால் மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும் ஓடுதளத்தில் தீயணைப்பு கருவிகளைக் கொண்டு 'ஃபோம் கார்பெட்' ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஓடுதளத்திலேயே விமானத்தின் உடலைப் பயன்படுத்தி கேப்டன் கேசரி சிங் தரையிறக்கினார்.
இந்த ஃபோம் கார்பெட் உருவாக்கியதால், விமானம் தன் உடலைக் கொண்டு தரையிறங்கும் போது தீ பிடிக்காமல் இருக்கும் என்ற யோசனையே இதற்குக் காரணம்.
விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்ஷ்தீப் சிங் பூரி நேற்று இரவு 10.25 மணியளவில், டிஜிசிஏ மற்றும் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் முயற்சியைப் பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும்: சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? உச்ச நீதிமன்றம்கேள்வி
கொரோனா வைரஸ் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அதை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என மத்திய அரசிடம், இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜனை விநியோகம் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு அதிகாரிகள் நிறைவேற்றாததால், மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜனை விநியோகம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், எம் ஆர் ஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த அறிக்கையில், டெல்லிக்கு 740 டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் உள்ள 56 மருத்துவமனைகளை ஆய்வு செய்ததில், அங்கு போதுமான ஆக்சிஜன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் "நீங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான திட்டங்களை வகுக்கும்போது இருந்த நிலைக்கும், தற்போதைய நிலையும் மாறுபட்டிருக்கும். படுக்கைகள் எண்ணிக்கை, அவசர சிகிச்சை பிரிவு பயன்பாடு, ஆக்சிஜன் தேவை ஆகியவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது எடுத்த கணக்கின்படி ஒவ்வொருவருக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டிருக்காது.
ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. ஆதலால், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் தேவை, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா முழுவதும் முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவும் என தகவல் வந்துள்ளது. 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு உடல்நலமில்லாமல் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் உடன் பெற்றோரும் செல்ல வேண்டி இருக்கும். ஆதலால், தடுப்பூசியை இந்த பிரிவு மக்களுக்கு முடிக்க வேண்டும்.
3-வது அலை வந்தால், அதை எப்படி கட்டுப்படுத்துவீர்கள். மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இல்லாவிட்டால் என்ன மாற்று திட்டம் வைத்துள்ளீர்கள்" என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், "உச்ச நீதிமன்றம் வழிகாட்டினால் பின்பற்றுவோம்" என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளத்தில் கொரோனா விதிகளை மீறி கூடிய 480 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்கு
கேரள மாநிலத்தில் கொரோனா விதிகளை மீறி ஆண்டு கூட்டம் நடத்திய 480 தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருவா் கொரோனாவால் உயிரிழந்ததாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கேரளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளத்தின் மூணாறில் சிஎஸ்ஐ கிறிஸ்தவப் பிரிவு சார்பில் பாதிரியார்களுக்கான ஆண்டு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இதில் பாதிரியாரிகள் உள்பட பலா் பங்கேற்றுள்ளனா். அது தொடா்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பரவின. அதில் ஏராளமான பாதிரியார்கள் முகக்கவசமின்றி நெருக்கமாகக் கூடியிருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இது மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்குச் சென்றது. இதையடுத்து காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், மூணாறில் பாதிரியார்களின் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றது தெரியவந்தது. தலைநகா் திருவனந்தபுரத்தில் இருந்து சிஎஸ்ஐ பிஷப் ஏ.தா்மராஜ் தலைமையிலான பாதிரியார்கள் குழுவும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. பிஷப் தா்மராஜ் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் தொடா்பாக கொரோனா விதிகளை மீறி ஒன்று கூடியது, பெருந்தொற்று பரவலுக்குக் காரணமாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 480 சிஎஸ்ஐ பாதிரியார்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாதிரியார்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் இருவா் உயிரிழந்தனா்.
கொரோனா விதிகளுக்கு உட்பட்டுதான் கூட்டம் நடத்தப்பட்டது என்றும், கூட்டம் நடைபெற்று பல நாட்களுக்குப் பிறகுதான் பெரும்பாலான பாதிரியார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் சிஎஸ்ஐ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக இந்த சம்பவம் தொடா்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், 'இந்த நிகழ்வில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் விநோதம்: மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்
பொதுவாக திருமணத்தின்போது மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவது வழக்கமான நிகழ்வாகும். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு, மணமகள் தாலி கட்டியுள்ளார். புதுமை திருமணம் செய்து கொண்ட மணமகன் ஷார்துல் கதமும், மணமகள் தனுஜாவும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருவதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மணமகன் ஷார்துல் கதம் "கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் தனுஜாவை சந்தித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். இருவரின் பெற்றோரும் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா காலகட்டத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தோம்.
எங்களது சமுதாய வழக்கத்தின்படி ஒட்டுமொத்த திருமண செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை நான் விரும்பவில்லை. திருமண செலவில் சரி பாதியை நான் ஏற்றுக் கொண்டேன். இதேபோல திருமணத்திலும் புதுமை படைக்க விரும்பினோம். கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்து முறைப்படி திருமணம் செய்தோம். அப்போது முதலில் நான் தனுஜாவின் கழுத்தில் தாலி கட்டினேன். அதைத் தொடர்ந்து தனுஜா எனக்கு தாலி கட்டினார். அப்போது முதல் எங்களது திருமணம் தொடர்பான செய்திகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சிலர் நேர்மறையாகவும் சிலர் எதிர்மறையாகவும் விமர்சித்து வருகின்றனர்.
மணமகள் எனக்கு தாலி கட்டியதால் நான் புடவை அணிந்து கொள்ளலாம் என்றுகூட சிலர் விமர்சித்துள்ளனர். எதை பற்றியும் எனக்கு கவலையில்லை. ஆணுக்கு பெண் சரிசமம் என்பது எனது கொள்கை. அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். இரு வீடுகளின் பெற்றோரும் எங்களது கருத்தை மதிக்கின்றனர்" என கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள் :
- தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி?
- `மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்
- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்
- `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்