கொரோனா செய்திகள்: தேர்தல் ஆணைய மனு தள்ளுபடி

பட மூலாதாரம், SUPREME COURT OF INDIA
(பிபிசி நேயர்களுக்கு வணக்கம், இந்தியாவிலும், உலகின் பல்வேறு இடங்களில் பதிவான செய்திகள் சிலவற்றின் முக்கிய சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
கொரோனா பரவலுக்கு காரணம் என்பதால் தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் கூட சாட்ட முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து கடுமையானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின்போது அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் திரளாகக் கூடியவர்கள் பலரும் முக கவசம் அணியாமல் வந்ததை ஏன் தடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வாய்மொழியாக கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அதிமுகவின் ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், கரூர் தொகுதியில் கொரோனா வழிகாட்டுதல்களின்படி வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தேர்தல் பரப்புரை காலத்தில் கொரோனா வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும், அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் கூட சாட்ட முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து ஊடகங்களில் பரவலாக வெளியாயின.
இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தை நீக்க உத்தரவிடக்கோரியும், அரசியலமைப்பு ஆணையமான தேர்தல் ஆணையம் தொடர்புடைய நுட்பமான தகவல்களை வெளியிட ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு விசாரித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில் நீதிபதிகள், அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் ஊடக சுதந்திரம் வருகிறது. அந்த சுதந்திரம் நீதிமன்ற செய்திகள் சேகரிப்புக்கும் பொருந்தும். இப்போது தகவல்களை இன்டர்நெட் மூலமும் மக்கள் தேடுகிறார்கள். எனவே, செய்திகளை ஊடகங்கள் வழங்குவது தொடர்பாக புகார் தெரிவிப்பதற்கு பதிலாக, அரசியல் சாசன அமைப்புகள், குறைகள் நேராத வகையில் சரியாக பணியாற்ற வேண்டும்," என்று குறிப்பிட்டனர்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட கருத்து மிகவும் கடுமையானது மற்றும் சரியானது அல்ல என்று கூறிய நீதிபதிகள், வாய்மொழியாக வெளியிடப்படும் நீதிமன்ற கருத்துகள் உத்தரவின் அங்கமாகாது. எனவே, அதை நீக்குமாறு விடுக்கும் கோரிக்கை வலுவற்றது. அதே சமயம், ஊடகங்கள், நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளை எல்லாம் செய்திகளாக்கி பரபரப்பை ஏற்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். நீதித்துறையே தவறு செய்தாலும் அதை பொறுப்புமையாக்குவது அவசியம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
கொரோனா தொற்று: முன்னாள் அமைச்சர் அஜித் சிங் மறைவு

பட மூலாதாரம், AJIT SINGH
கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த மாதம் 20ஆம் தேதி அஜித் சிங்குக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை, அவரது நுரையீரல் தொற்று மோசம் அடைந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அஜித் சிங் மறைவுச் செய்தியை அவரது மகன் ஜெயந்த் செளத்ரி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அஜித் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களுக்காக எப்போரும் ஆதரவாக இருந்தவர் அஜித் சிங். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று மோதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங்கின் அகால மரணம் வருத்தம் அளிக்கிறது," என்று கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் மகன் அஜித் சிங், 1989களில் வி.பி. சிங் அமைச்சரவை, 1989இல் நரசிம்மராவ் அமைச்சரவை, 1999இல் வாஜ்பேயி அமைச்சரவை, 2001இல் மன்மோகன் சிங் அமைச்சரவை என ஆட்சிகளை எந்த கட்சி தலைமை வகித்தாலும் அதில் அமைச்சராக இடம்பிடித்தார்.
அவரது தந்தை செளத்ரி சரண் சிங், 1960களின் அரசியலில் முக்கிய பங்கெடுத்தவர். 1979இல் நாட்டின் பிரதமராவதற்காக மொரார்ஜி தேசாயின் அரசை கலைக்க காரணமாக இருந்தார்.
அஜித் சிங், கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்து விட்டு 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றினார். ஆனால், செளத்ரி சரண் சிங்கின் மறைவுக்கு பிறகு தமது தந்தையின் சுமைகளை சுமக்கும் பொறுப்பு அஜித் சிங்வசம் வந்தது.
ஆனால், தனது தந்தையைப் போல முஸ்லிம்கள், குர்ஜர்கள், ராஜ்புத்கள் உள்பட பல தரப்பட்ட சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவராக இல்லாமல் ஜாட் சமூகத்தின் பிரதிநிதியாக அவர் அடையாளப்படுத்தப்பட்டார்.
1987இல் சரண் சிங் இறந்தபோது உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையில் அவரது தலைமையிலான லோக் தளம் கட்சிக்கு 84 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், சரண் சிங்கின் மறைவுக்குப் பிறகு லோக் தளம் கட்சி அஜித் தலைமையில் ஓரணியாகவும் பஹுகுனா தலைமையில் மற்றொரு அணியாகவும் விளங்கியது. இதில் 30 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றிருந்த பஹுகுனா அணியில் முலாயம் சிங் இருந்தார்.
பின்னர், அஜித், முலாயம் அணிகள் காங்கிரஸ் அரசை வி.பி. சிங் தலைமையில் வீழ்த்துவதற்காக தொடங்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தனர். அதில் முலாயம் மாநில அரசியலிலும், அஜித் தேசிய அரசியலிலும் கவனம் செலுத்தினார்.
1990களில் ராஷ்ட்ரிய லோக் தளம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் அஜித் சிங். ஆனால், 2014இல் அவரது அரசியல் வாழ்க்கை அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இருந்து சரிந்தது. அதுநாள்வரை நாடாளுமன்ற தேர்தலில் வென்று வந்த அஜித் சிங்குக்கு 2014 தேர்தல் கைகொடுக்கவில்லை.
பிற செய்திகள் :
- பொது முடக்கம் குறித்து முடிவெடுக்க முடியாத மோதி – மனித உயிர்களா? பொருளாதாரமா?
- 78,000 ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
- இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை
- ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பலியா? செங்கல்பட்டில் என்ன நடந்தது?
- ஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































