பெரியாரிய ஆய்வாளர் வே. ஆனைமுத்து காலமானார்

பட மூலாதாரம், DMK/Facebook
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
பெரியாரின் படைப்புகளைத் தொகுத்தவரும் பெரியாரிய - மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 96.
பெரியாரிய ஆய்வாளரான வே. ஆனைமுத்து வயது முதிர்வின் காரணமாகவே நீண்ட காலமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென கை - கால்கள் செயல்படாமல் போனது. இதையடுத்து, ஆனைமுத்து புதுச்சேரியில் உள்ள நியூ மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்ததில், மூளைக்கு அருகில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு கை - கால்கள் இயங்க ஆரம்பித்த நிலையில், நுரையீரலில் சளி சேர ஆரம்பித்தது. இதற்காக மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு ஆனைமுத்து உயிரிழந்தார்.
தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக 21.06.1925ல் பிறந்த ஆனைமுத்து, தனது 19வது வயதில் 1944ல் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பெரியாரின் பேச்சை கேட்டு, அவரைப் பின்பற்ற முடிவு செய்தார்.
பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 'குறள் மலர்', 'குறள் முரசு', 'சிந்தனையாளன்', Periyar Eraஆகிய பத்திரிகைகளை தொடங்கி நடத்திவந்தார். இதில் சிந்தனையாளன் இதழ் தற்போதும் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
1957ல் பெரியாரால் அறிவிக்கப்பட்ட அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 18 மாதங்கள் வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அவரது உரைகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுக்க ஆரம்பித்த ஆனைமுத்து, அவற்றை 'பெரியார் - ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற பெயரில் 2170 பக்க புத்தகமாக வெளியிட்டார். இந்தத் தொகுப்புகள் பிறகு விரிவாக்கம் செய்யப்பட்டு, 20 பாகங்களாக வெளியாயின. பெரியாரின் கருத்துகள் குறித்த ஆய்வில், ஆனைமுத்துவின் இந்தத் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இவை தவிர, சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து, தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம், பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?, விகிதாசார இடஒதுக்கீடு செய் ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கிறார்.
பெரியாரின் சிந்தனைகளோடு, மார்க்சிய சிந்தனைகளாலும் ஆனைமுத்து ஈர்க்கப்பட்டிருந்தார். பெரியார் இறந்த பிறகு, 1976வாக்கில் பெரியார் சமஉரிமைக் கழகம் என்ற அமைப்பைத் துவங்கினார். 1988ல் இந்த அமைப்பை மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
"திராவிட இயக்கத்தினுடைய கோட்பாடுகளையும் மார்க்சிய வழிகாட்டலையும் நன்குணர்ந்தவர் ஆனைமுத்து. ஆகவே, தன் இயக்கத்தின் பெயரை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்று மாற்றி அமைத்தார். ஆனால் மிகப் பெரிய இலக்குகள் மிகத் தொலைவில் இருக்கின்றன என்பதை நன்குணர்ந்திருந்ததால், நடைமுறையில் சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கூட்டாட்சி, தன்னாட்சி போன்ற உடனடி இலக்குகளை மையப்படுத்தி செயல்பட்டார்" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில், இவரது அழுத்தம் முக்கியமானது. இதுதவிர, இந்தியா முழுவதும் பயணம் செய்து இடஒதுக்கீடு தொடர்பான கருத்துக்களை ஆனைமுத்து பேசிவந்தார். மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங், கன்ஷிராம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார் ஆனைமுத்து.
"1978ல் பிஹாரின் முப்பது மாவட்டங்களில் பெரியாரின் நூற்றாண்டு விழாவை நடத்திய ஆனைமுத்து, பிறகு தில்லியிலும் பெரிய அளவில் ஒரு நூற்றாண்டு விழா மாநாட்டை நடத்தினார். பெரியாரிய சிந்தனைகளை இந்தியாவின் வட மாநிலங்களில் கொண்டு சென்று சேர்த்ததில் ஆனைமுத்துவுக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது" என்கிறார் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளரான வாலாசா வல்லவன்.
பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவராக இருந்தபோது எழுதிய குறிப்புகளை தொகுத்திருக்கும் ஆனைமுத்து, அவற்றின் ஒரு பகுதியை பதிப்பித்துவிட்டார். மீதமுள்ளவற்றையும் அவர் பதிப்பிக்க நினைத்திருந்தார்.
ஆனைமுத்துவின் உடல் அஞ்சலி செலுத்தப்படுவதற்காக சென்னைக்குக்கு கொண்டுவரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
ஆனைமுத்துவின் மனைவி சுசீலா சில ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்தார். இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:



















