You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `பணம் கொடுத்து விட்டு பாலில் சத்தியம் வாங்குகிறார்கள்!' கொதிக்கும் மநீம வேட்பாளர்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சென்னை மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மபிரியா போட்டியிடுகிறார். இங்கு அ.தி.மு.க வேட்பாளராக அமைச்சர் பெஞ்சமினும் தி.மு.க சார்பாக காரப்பாக்கம் கணபதியும் களமிறங்கியுள்ளனர். வேட்பாளர்களின் பண விநியோகம், தொகுதி நிலவரம், இடஒதுக்கீடு சர்ச்சை ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் பத்மபிரியா.
மதுரவாயல் தொகுதியில் பல சுற்றுகளாக பிரசாரம் செய்கிறீர்கள். உங்களுக்கான வெற்றிவாய்ப்பு எப்படியிருக்கிறது?
``மக்கள் மனதில், `மாற்றம் வர வேண்டும்' என்ற எண்ணம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிரசாரத்துக்குச் செல்லும்போதெல்லாம், `உனக்குத்தான் ஓட்டுப் போடுவேன்' என்று மக்கள் கூறுவதைப் பார்க்கும்போது சந்தோஷம் ஏற்படுகிறது. வெற்றி வாய்ப்பு என்பதைத் தாண்டி மக்கள் மனதில் மாற்றம் வந்துவிட்டது என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது."
நீங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டவர். EIA 2020 குறித்து நீங்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலானது. சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்துவிட்டு அரசியலுக்குள் வந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``இந்த இரண்டு மட்டுமல்லாமல், ஆசிரியையை ஆகவும் இருந்திருக்கிறேன். புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். எல்லாம் தெரிந்த ஒருவர் அரசியலுக்கு வரும்போது நிறைய மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நினைக்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும் எனவும் நான் சொல்லவில்லை. மக்களும் மக்கள் நீதி மய்யத்தை நம்புகிறார்கள். இந்த மாற்றம் நல்லபடியாக அமையும்."
அரசியல் பயணத்தில், மக்கள் நீதி மய்யம் சரியான தேர்வாக இருக்கும் என எப்படி நம்பினீர்கள்?
``அவர்கள் வந்த பாதை அப்படிப்பட்டது. குறிப்பாக, நேர்மை என்பது எந்த ஓர் அரசியல் கட்சியும் சொல்லாத விஷயம். ஆனால், அதை மட்டுமே கமல் முன்வைக்கிறார். அவர் மேல் இருந்த நம்பிக்கையும் அவரைச் சுற்றியிருந்த ஆட்களுமே எனக்கு மக்கள் நீதி மய்யத்தைத் தேர்வு செய்யக் காரணமாக அமைந்தது."
அமைச்சர் பெஞ்சமினின் தொகுதியாக இது உள்ளது. `இந்தத் தொகுதிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை' என்கிறீர்கள். இதற்கு முன்னதாக இதே தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த சி.பி.எம் கட்சியின் பீமாராவ், மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நின்றவர். `யாரும் எதையும் செய்யவில்லை' எனப் பொத்தாம் பொதுவாகக் கூறுவது சரியானதுதானா?
``யாரும் எதையும் செய்யவில்லை என நான் கூறவில்லையே. அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் எங்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கும். சிறுவயதில் இருந்தே இந்தத் தொகுதியில் இருக்கிறேன். யாரும் எதையும் செய்து நான் பார்க்கவில்லை. பீமாராவ் பற்றி எனக்கு எந்தக் கருத்துகளும் இல்லை. அவர் எதையும் செய்யவில்லை என எந்த இடத்திலும் நான் கருத்துகளைப் பதிவு செய்யவில்லை. இங்கு இருந்த கட்சிகள் சரியாக இல்லாததால்தான், நான் இங்கு வந்திருக்கிறேன்."
இந்தத் தொகுதியில் 4 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மதுரவாயலில் ம.நீ.ம கட்சி 23,000 வாக்குகளை வாங்கியது. எந்த அடிப்படையில் இந்தத் தொகுதியை தேர்வு செய்தீர்கள்?
``எம்.பி தேர்தலில் 13 சதவிகித வாக்குகளைப் பெற்றோம். மதுரவாயலை பொறுத்தவரையில் இது நல்ல வாக்குகள்தான். இதே வாக்காளர்கள், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமாக இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வைத்தால் எளிதாக நாங்கள் வெற்றி பெற்று விடுவோம்."
`தேர்தல் களத்தில் அ.தி.மு.க, தி.மு.கவை தாண்டி நம்மால் என்ன செய்துவிட முடியும்' என்ற எண்ணம் ஏற்படுகிறதா?
``நிச்சயமாக இல்லை. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வருகிறோம் எனக் கூறிவிட்டு டார்ச் லைட்டைக் காட்டினாலே அவர்கள் கையை உயர்த்தி, `உங்களுக்குத்தான் ஓட்டு' என்கிறார்கள். வெற்றி வருமா.. வராதா என்ற சந்தேகமே எனக்கு இல்லை. எனவே, உறுதியாக வெற்றி பெறுவோம்."
`இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' என்ற அம்சத்தை முதன்முதலாக கமல் முன்வைத்தார். ஆனால், அந்த வாக்குறுதியை முன்வைத்து தி.மு.கவும் அ.தி.மு.கவும் தேர்தல் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. இதனால் உங்கள் கட்சிக்கு இழப்பு இல்லையா?
``நல்லது யார் செய்தாலும் நல்லதுதான். அதைத்தான் கமல் சாரும் நம்புகிறார். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதை பெருமையான ஒன்றாகத்தான் பார்க்கிறோம். மக்களுக்கு நல்லது நடந்தால் போதும்."
`தி.மு.க, அ.தி.மு.க ஆகிய எதாவது ஒரு கட்சியின் மூலம் நல்லது நடந்தால் போதும்' என சொல்ல வருகிறீர்களா?
``நிச்சயமாக இல்லை. ஒரு ஆசிரியர், மாணவருக்கு சொல்லிக் கொடுப்பதைப் போலத்தான் இதுவும். இதனால் எங்களுக்கு இழப்பு இல்லை. இனிமேல் மக்கள் இலவசங்களுக்கு விலை போக மாட்டார்கள் என்பது அவர்களது முகத்திலேயே தெரிகிறது. ஆறு சிலிண்டர்களை இலவசமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக இருக்கின்ற சிலிண்டர்களை நியாயமான விலையில் கொடுக்கலாம். இதை மக்களிடம் சொல்லும்போது கை தட்டுகிறார்கள்."
விலையில்லா வாஷிங்மெஷின் கொடுப்பதை `எலக்ட்ரானிக் வேஸ்ட்டேஜ்' என்கிறீர்கள். எளிய மக்களுக்கு இப்படியொரு இயந்திரம் சென்று சேர்வது வரப் பிரசாதம் என அ.தி.மு.கவினர் பிரசாரத்தில் முன்வைக்கிறார்களே?
``மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மாறப் போவதில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் அரசின் வேலை. அவர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து அவர்களை அடிமையாக்குவது சரியானதல்ல. நீங்கள் வாஷிங்மெஷின் கொடுத்தால் அதற்கு யார் கரண்ட் பில் கட்டுவது, நல்ல தண்ணீர் சப்ளை கிடைக்கிறதா.. இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மக்களிடம் இருக்கின்றன. வாஷிங்மெஷினை கொடுப்பதால் மக்களின் வாக்குகளை ஈர்த்துவிட முடியாது. இதுபோன்ற டம்மி திட்டங்கள் எவ்வளவோ வந்து விட்டன."
எளிய மக்களின் மனதில், இலவச வாக்குறுதிகள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது என அறுதியிட்டுக் கூற முடியுமா?
``வாஷிங்மெஷின் அவ்வளவு முக்கியம் என எனக்குத் தோன்றவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மதுரவாயல் பகுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகப்படியாக உள்ளது. குடிப்பதற்கே தண்ணியில்லாதபோது துணி துவைப்பதற்கு எங்கிருந்து தண்ணீர் வரும்?"
ஒரு வேட்பாளராக தேர்தல் களத்தில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள முடிகிறது?
``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. மக்களை அணுகுவது எங்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. எங்களைத் தேடி வந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள், குறைகளைச் சொல்கிறார்கள். எந்தவிதத் தடையும் இல்லை."
சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயங்கள் களநிலவரத்தோடு ஒன்றிப் போகாத சூழலைப் பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களில் பேசப்படுவதால் மட்டுமே ஒருவருக்கு வெற்றி வந்துவிடாது என்பதை உணர முடிகிறதா?
``நிச்சயமாக உணர முடிகிறது. சமூக வலைதளத்தோடு என்னைச் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. சமூக வலைதளம் என்பது என்னுடைய பல்வேறு பணிகளில் அதுவும் ஒன்று. என்னுடைய வெற்றிப் பாதைக்கு உதவும் ஒரு படிதானே தவிர, அதை நம்பி நான் வரவில்லை. ஆனால், சமூக வலைதளம் என்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது."
தொடக்கத்தில் ம.நீ.மவோடு கூட்டணி வைக்க வந்த எஸ்.டி.பி.ஐ கட்சி, `ம.நீ.மவின் கார்ப்பரேட் கலாசாரத்தோடு எங்களால் இணைந்து பணியாற்ற முடியாது' எனத் தெரிவித்தனர். இதை எப்படிப் பார்ப்பது?
``அதைப் பற்றி பெரிதாக எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒரு கட்சியைவிட்டு வெளியே போகும்போது எதையாவது சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார்கள். ஆனால், மக்கள் அப்படிப் பார்க்கவில்லை. அவர்களின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை."
EIA 2020, நாப்கின் விவகாரம் உள்பட நீங்கள் பதிவிட்ட சில வீடியோக்கள் வைரலாயின. ஆனால், உங்களை மையமாக வைத்து இடஒதுக்கீடு தொடர்பாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதே?
``நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது சில நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை. உண்மையாகவே, நாம் அப்படியொரு கருத்தைத்தான் சொன்னோமோ எனப் பார்க்காமல் குற்றம் சாட்டுவது தவறான விஷயம். ஏனென்றால், நான் செய்த பல நல்ல விஷயங்கள் வைரலானது. இந்த ஒரு விஷயத்தால் நெகட்டிவ்வாக மாறுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. எது வேண்டும்.. எது வேண்டாம் என மக்கள் பகுத்துணர ஆரம்பித்து விட்டார்கள். இதனால் எனக்கு எந்தவித மைனஸும் இல்லை."
அமைச்சரின் தொகுதியில் பணம் விளையாடுவதாக ஒரு பேச்சு உள்ளது. இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தீர்களா?
``தேர்தல் ஆணைய அதிகாரிகள், நள்ளிரவில்கூட சோதனை நடத்துகிறார்கள். அடித்தட்டு மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் பணம் கொடுத்துவிட்டு பாலில் சத்தியம் வாங்குகிறார்கள். இதை நாங்கள் நேரிலும் பார்த்திருக்கிறோம். ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகளுக்காக மக்களின் வாக்குகளைக் கவர நினைக்கிறார்கள். சின்னங்களுக்காகவே வாக்களிக்கும் மக்களும் இருக்கிறார்கள். நடுத்தர மக்கள், மேல்தட்டு மக்களிடம் இவர்களின் செயல் பலிப்பதில்லை.மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இது ஒரு போட்டிதான். மக்கள் யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். இவர்கள் மீண்டும் வந்தால் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள் என்பது மக்களுக்கும் தெரிந்த விஷயம்தான்."
பிற செய்திகள்:
- `பழைய பன்னீர்செல்வமாக மாறுகிறாரா விஜயகாந்த்?' - களத்தில் தேமுதிக நிலை என்ன?
- 'ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்' - தாராபுரத்தில் நரேந்திர மோதி பிரசாரம்
- "ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது" - தனியார் நிறுவனத்தை எச்சரிக்கும் சீனா
- ஆறு நாள் போரால் 8 ஆண்டுகளாக மூடிக்கிடந்த சூயஸ் கால்வாய்
- தமிழ்நாட்டில் நரேந்திர மோதி: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் பிரசாரம்
- தென் தமிழ்நாடு அரசியல் எப்படி உள்ளது? தொழில் வளர்ச்சி சிக்கல் என்ன செய்யும்?
- #GoBackModi ஹேஷ்டேக் பிரசாரம் தமிழ்நாட்டில் ஏன், எப்படித் தொடங்கியது?
- நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் பரப்புரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: